வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – உயிர்த்துணை யாளுதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33 (2.03) – தொடர்ச்சி)
மெய்யறம்
இல்வாழ்வியல்
34.உயிர்த்துணை யாளுதல்
331. இருவரு ளறிவிற் பெரியவ ராள்க.
கணவன், மனைவி இவர்களில் அறிவில் சிறந்தவர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தல் வேண்டும்.
- ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க.
ஆண்கள்தான் சிறந்தவர் என்று கூறுவது பயனற்ற பேச்சு ஆகும்.
- துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர்.
வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக வாழ்பவர் உலகம் முழுவதும் வெற்றி கொள்வர்.(எல்லா இன்பங்களும் அடைந்து வாழ்வர்.)
- தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன.
ஒருவருடைய உயிர், உடல், பொருள் எல்லாம் அவரது உயிர்த்துணைக்குச் சொந்தம் ஆகும்.
- தன்றுணை யுயிர்முத றனக்காங் குரியன.
அதுபோல் அவரது வாழ்க்கைத்துணையின் உயிர் முதலியவை அவருக்குச் சொந்தம் ஆகும்.
- இருவராத் தோன்றினு மொருவரே யுள்ளின்.
கணவன், மனைவி இவர்கள் தோற்றத்தில் இருவராக இருந்தாலும் உண்மையில் ஒருவரே ஆவர்.
- தானறிந் தவையெலாந் தன்றுணைக் குணர்த்துக.
ஒருவர் தான் அறிந்தவற்றை எல்லாம் தன் வாழ்க்கைத்துணைக்குக் கற்றுத் தர வேண்டும்.
- தனதுநன் னெறிதுணை சார்ந்திடச் செய்க.
அவரது நேர்மையான வழியில் வாழ்க்கைத்துணையையும் செல்லுமாறு செய்தல் வேண்டும்.
- இயற்றுவ துணையுட னெண்ணி யியற்றுக.
எந்தச் செயலைச் செய்தாலும் வாழ்க்கைத்துணையுடன் ஆலோசித்துப் பின் செய்தல் வேண்டும்.
- உண்பன துணையோ டுடனிருந் துண்ணுக.
உண்ணுவதை வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்தே உண்ணுதல் வேண்டும்
– வ.உ.சிதம்பரனார்
Leave a Reply