[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16) – தொடர்ச்சி]

மெய்யறம்

இல்வாழ்வியல்

47. செருக் கொழித்தல்

  1. செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல்.

செருக்கு என்பது தனது சிறப்புகளைத் தன் மனத்தில் பெருமையுடன் நினைப்பது ஆகும்.

  1. அஃதறி யாமையி னங்குர மென்ப.

அஃது அறியாமையின் அடிப்படை ஆகும்.

  1. ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு.

ஆன்மா மேன்மை அடைந்து இறைநிலை அடைவதை செருக்கு தடுத்துவிடும்.

  1. அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு.

செருக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் மீறச் செய்யும்.

  1. அழியு முடம்பை யளிப்பது மஃதே.

செருக்கினால் உடம்பின் அழிவும் ஏற்படும்.

  1. செருக்கினர் தம்மெய்த் திறத்தினைக் காணார்;

செருக்கு உடையவர்கள் தங்களது உண்மையான தகுதியை உணராமல் மிகுதியான தகுதி உடையவராக எண்ணுவர்;

  1. தம்பகைத் திறத்தைத் தாழ்த்தியே யெண்ணுவர்;

மேலும் பகைவர்களின் உண்மையான தகுதியை உணராமல் குறைவான தகுதி உடையவராக எண்ணுவர்;

  1. இன்பினு மடியினு மிறந்து படுவர்;

மேலும் மிகுந்த சோம்பல் உடையவர்களாகவும் மிகுதியாக இன்பம் அநுபவிப்பவர்களாகவும் இருப்பர்;

  1. துயிலு மறவியுந் தொடர்ந்து கொள்வர்;

மேலும் மிகுதியாக உறங்குபவர்களாகவும் தமது கடமைகளை மறந்தவர்களாகவும் இருப்பர்;

  1. புகழெலாம் போக்கி யிகழெலா மீட்டுவர்.

மேலும் புகழ் அழிந்து மற்றவர்களால் இகழப்படும் நிலை ஏற்படும்.

 

– அறிஞர்,  செம்மல் வ.உ.சிதம்பரனார்