(அகநானூற்றில் ஊர்கள் 2/7 இன் தொடர்ச்சி

அகநானூற்றில்  ஊர்கள் -3/7

 ஆலங்கானம் (தலையாலங்கானம்)

   ஆலங்கானம் என்பது தலையாலங்காடு என்று வழங்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள இவ்வூர் தேவாரப்பாடல் பெற்ற தலமாகத் திகழ்கின்றது. பாண்டிய நெடுஞ்செழியனின் பகைவரான நெடுநில மன்னனான சேரர், சோழர் இருவரும் குறுநில மன்னரான நிதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரையும் போரில் வென்றதால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.

                “……கொடித் தேர்ச் செழியன்

                ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப

                சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்

                போர் வல் யானைப் பொலம் பூண் எழினி

                நார் அறி நறவின் எருமையூரன்

                …………………………..

                இருங்கோ வேண்மான் இயல் தேர்ப்பொருநன் என்று

                எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல”;

(அகநானூறு 36)

எனும் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

                “ஆலங்கானத்து அமர்கடந்து உயர்ந்த ”                             (அகநானூறு 175)

                “ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என”                  (அகநானூறு 209)

என்ற அடிகளால் இதன் சிறப்பை அறிய முடியும். மேலும்,

                “ஊட்டுறு பல்மயிர் விரைஇ வயமான்

                 வேட்டம் பொறித்து, வியன்கட் கானத்து

                “நாடுகெட எரிபரப்பி

                 ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து

                 அரசுபட அமர் டழக்கி

என்று மதுரைக்காஞ்சியும் தலையாலங்கானம் என்ற ஊரினை குறிப்பிடுகின்றது.

 

இடையாறு

  இவ்வூர் சோழனது ஊர். பெரும் புகழையும், வெல்லும் பேராற்றலையும் உடைய கரிகால் வளவனது இடையாறு என்ற ஊரில் இருந்த வளம் போலச் செல்வம் கொண்டுவர வேண்டும் என்று  திருவேங்கட மலைக்காட்டைத் தாண்டித் தலைவன் பொருள் ஈட்டச் சென்றுள்ளார்.

இதனை,

                செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்

           வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன

(அகநானூறு 141)

என்ற வரிகள் மூலம் அறியலாகிறது.

உறந்தை

                “………… குறும்பொறை நாடன்

 கறங்கு இசை விழாவின் உறந்தைக் குணாது”.                            (அகநானூறு -4)

சிறுமலைகள் பொருந்திய ஊரான உறந்தை நாடனின் ஊராகும். இவ்வூர் ஆரவாரிக்கும் ஓசை மிக்க விழாக்கள் நிறைந்த ஊராகத் திகழ்கின்றது.

                வளம் தரும் வான் மழை போல வரையாது வழங்கும் வள்ளன்மையுடைய தித்தனின் நெற்குவியல்களை உடைய ஊர் உறந்தையாகும். என்பதனை,

மழை வளம் தரூஉம் மாவண் தித்தன்

 பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்

(அகநானூறு 6)

என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

                அத்தி மாலை சூடிய பகைவரைக் கொல்லுகின்ற, மறம் கொண்ட சோழரது அறம் பொருந்திய நல்ல அவையினையுடைய ஊர் உறந்தை என்பதனை,

                “………சோழர்

  அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன”  (அகநானூறு 93)

என்ற வரிகள் மூலம் அறிய முடிகிறது.

பகைவர்களை வென்று, வீரமுரசினையும், போர் வெற்றியையும் உடைய சோழரது, இனிய கரும்பு மிக்க கள்ளினையுடைய ஊராகும்.

                “……சோழர்

        இன்கருங் கள்ளின் உறந்தை ஆங்கண்”                     (அகநானூறு 137)

மேற்கண்ட அடிகள் மூலம் இதனை அறியலாகிறது.

  தித்தன் ஆட்சி செய்த ஊர் உறந்தையாகும். இவர் தித்தன் எனவும் தித்தன் வெளியன் எனவும் வீரை வேண்மான் வெளியன் தித்தன் எனவும், இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றார்.  இவர் சினம் மிக்க படையுடன் பேராற்றல் உடையவர், பாணரையும், வறியார் பலரையும் பாதுகாக்கும் வள்ளல் என்பதனை,

      நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்

(அகநானூறு 122)

தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்               (அகநானூறு 226)

மேலும்,

      புனல்பொரு புதவின், உறந்தை எய்தினும்

(அகநானூறு 237)

என்பது பாணர் முதலானோர்க்குப் பகுத்து கொடுக்கும் நீர் மோதுகின்ற மதகினையுடைய ஊர் உறந்தையாகும்.

   சோழர்களின் நிலைத்த புகழினை உடைய ஊர் உறந்தை என்பதனை,

                 “கடல் …. சோழர்

                 கொடல் அரு நல்இசை உறந்தைஅன்ன             (அகநானூறு 369)

என்ற வரிகள் மூலம் அறியலாகிறது.

   வலிமை பொருந்திய கையினையுடைய யானையையும், விரைந்தோடும் தேரினையும் உடைய சோழரது சோலை சூழ்ந்த காவிரியாற்றின் அருகிலுள்ள உறந்தை என்பதனை,

  காவிரி படப்பை உறந்தை அன்ன                           (அகநானூறு 365)

எனும் வரி புலப்படுத்துகின்றது. இதனால் இவ்வூரின் சிறப்பும் மன்னனின் சிறப்பும் வெளிப்படுகிறது.

    தி. இராதா

முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),

அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி

(தொடரும்)