பேராசிரியர் சி.இலக்குவனார்

பேராசிரியர் சி.இலக்குவனார்

இலக்குவனாரின் புதிய பார்வை

 இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார்.

   உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ,  அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர் என்னும்  கறைபடிந்தபக்கமாகும். தமிழ்த்தாய் மீது ஆரிய மாசு படியவிட்டவர்கள் உரையாசிரியர்களுள் அடங்குவர் என்பதும் உண்மை யாகும். இவர்களுள் மாறுபட்டவராகமூல நூல்களில் புதியபார்வை செலுத்தியவர் செம்மொழிச்சுடர்  பேராசிரியர்இலக்குவனார். இப் புதிய பார்வை என்பது மூல ஆசிரியர்களின் பார்வைக்குமாறுபட்டதாக அமையவில்லை. மாறாக, நடைமுறையில் உள்ள  ஆரியக்கண்ணாடியைக்கழற்றிவிட்டு, மூல நூல் தோன்றிய காலச் சூழலை உய்த்துணர்ந்து, மூலஆசிரியர்கள் பார்வைகளைத் தமதாக்கிக் கொண்ட ஒத்த பார்வையாகும்.  அக்காலக்கருத்துகளில் ஏற்கத்தக்கனவற்றை ஏற்றும் இக்காலத்தில் மாறுபட்ட சூழல்இருப்பின் சுட்டிக்காட்டியும் இக்காலத்திற்கேற்ப அக்காலக் கருத்துகளைப்பொருத்திக் காட்டியும் தெளிவான பார்வையை இலக்குவனார் கொண்டுள்ளார்.இலக்குவனாரின் பார்வை ஆரியக் கண்ணாடியை அப்புறப்படுத்தும் செவ்விய பார்வை!இலக்குவனார் பார்வை அறிவியல் பார்வை! இலக்குவனார் பார்வை எக்காலத்திற்கும்ஏற்ற பார்வை! அவர் பார்வையில் பட்டவற்றுள் சிலவற்றைப் பார்த்தாலே நாம்இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

   இலக்குவனார் செம்மொழி மேம்பாட்டிற் காகத்தம் பங்களிப்பாகப் படைப்புகள் பலவற்றைத் தந்துள்ளார். இவற்றுள்ளும்மன்பதைக்கேற்ற புதிய பார்வையை நமக்குக் காட்டியுள்ளார். சான்றாக அவரதுமுதல் படைப்பான  எழிலரசியில் (1933) ஒரு கருத்தைப் பார்க்கலாம். இதில்சொத்துரிமை பற்றி இலக்குவனார் கூறுகிறார். பெண்களுக்குச் சொத்தில் சமஉரிமைஎன்பது இன்றும்கூடப் பல நாடுகளில் நடைமுறையில் இல்லை.  இந்தியாவில்1956ஆம்ஆண்டு இந்து மரபுரிமையர் சட்டம் (ஜிலீமீ பிவீஸீபீu ஷிuநீநீமீssவீஷீஸீகிநீt 1956)பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு உண்டு என்பதற்குவழிகாட்டியது. எனினும் இச்சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தின் படிதான்பெண்களுக்கும் ஆண்களைப்போலவே சொத்தில் சமஉரிமை உண்டு என்பது திசம்பர் 24, 2004 முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், இச்சட்டம் வருவதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்னரே பேராசிரியர் சி.இலக்குவனார் தம்முடையகுறும்பாவியத்தில்  கதைக்களம்அமைந்துள்ளநாட்டில்,.

பெற்றோ ரீட்டிப் பேணிய  பொருளை

மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும்

உரிமை யாக்கும் ஒரு விதி (எழிலரசி அடி 7-9)

உள்ளமையால், சொத்தில் மைந்தரைப் போலவேமகளிருக்கும் சமஉரிமை உண்டு எனத் தெரிவிக்கிறார். இவ்வாறு அவர் ஆண், பெண்இடையே ஏற்றத்தாழ்வில்லை; இருவரும் ஒருவருக்கொருவர் இணையே என்பதைத் தெளிவுபடுத்துகிறார். படிக்கும்பொழுதே பெண்ணுரிமை பற்றிய தொலைநோக்குப்பார்வை உடையவராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். இலக்குவனார் மாணாக்கனாக இருந்த பொழுது கொண்ட புதுமைப்பார்வை இஃதெனில் அவர் அறிவின் திறம்அளத்தற்குரியதோ!

  தொல்காப்பியத்தின், பாயிரத்தில் இடம் பெற்றுள்ள

நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்”

என்னும் அடியைக் கொண்டு நான்மறை என்பது நான்கு வேதமல்ல என்பதைப் பேரா. இலக்குவனார்  ஆராய்ந்து உரைக்கிறார். அதர்வணவேதம் ஒரு  வேதமாக ஒப்புக்கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை ஏற்பட்டது மிக மிகப் பிற்காலத்தில் என வரலாற்றறிஞர் தத்தர் கூறுகிறார். இதுபோன்ற ஆய்வுரைகள் அடிப்படையில் நான்கு மறை என்பது தமிழ்மறைகளே எனப் பேரா. இலக்குவனார் தெளிவுபடுத்துகிறார்.

  ஆரியத்தைப் பார்த்துத் தமிழ் எழுத்துகளை அமைத்துக் கொண்டது என்றும்  சமற்கிருதச்சொற்களில் இருந்தே தமிழ்ச்சொற்கள் உருவாயின என்றும் ஆரியப் பித்தர்கள் கூறிவருகின்றனர். பல்வேறு ஆதாரங்களைச் சான்றுகளாகக் காட்டி,  இந்நிலப்பரப்பு முழுமையும் தமிழ் பேசிய  காலத்தில்  ஆரியர் இங்கு வந்தனர்;  செந்தமிழைப் பார்த்துத் தம்  மொழிக்கான எழுத்துகளை அமைத்துக் கொண்டனர்; தமிழ் இந்திய மொழிகளின் வரிவடிவங்களின் தாய்; தமிழில் இருந்து எண்ணற்ற சொற்கள் சமற்கிருதத்தில் இடம் பெற்றுள்ளன எனச்  சீரியமுறையில் உணர்த்துகிறார்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

என்னும் தொல்காப்பிய அடிகளுக்குத் தவறானஉரை தருகின்றனர் பலர்.  காதலால் இணைந்த பின் பிரிவு ஏற்பட்டமையால் பிராமணர்கள் திருமண முறையை வகுத்தனர் என்பதுபோல் நச்சினார்க்கினியர் முதலானோர்  தெரிவிக்கின்றனர். இவர் போன்றவர்களிடமிருந்து மாறுபட்ட சரியான பார்வையைக் கொண்டுள்ளார் இலக்குவனார்; ‘ஐயர்’ என்பது பிராமணரைக் குறிக்காது என்றும் தமிழில் தலைவனையும் தந்தையையும் குறிக்கும் என்றும், ‘கரணம்’ என்பது  எழுத்து மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும் என்பதையும் விளக்குகிறார்; கணக்கு எழுதும் கணக்கப்பிள்ளையைக் கரணம் எனச் சொல்லும் இக்காலவழக்கையும் சான்றாகக் காட்டுகிறார்; காதலர்கள் மனம் மாறி இணைந்துவாழும் உறுதியில் இருந்து பின் வாங்கியதால் தமிழர்களுக்காகக் தமிழகத்தலைவர்கள்  தமிழ்த் திருமணமுறையைக் கொண்டுவந்தனர் என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணப்பதிவு  முறையைக் கொண்டுவந்தவர்கள் தமிழர்களே என்றும் மெய்ப்பிக்கிறார்.

  தொல்காப்பியத்தில் ‘மரபியல்’ என்னும் ஓர்இயல் உள்ளது. அதில் சாதிகள் பற்றிய சில  நூற்பாக்களைப் புகுத்திவிட்டனர்சிலர். இதனடிப்படையில் சாதி இல்லா அக்காலத்தில் சாதிகள் இருந்தன என்றும் இவற்றின் அடிப்படையில் தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் மனம் மகிழ்கின்றனர் ஆரிய நெஞ்சம் கொண்டோர். இப் பார்வையில் இருந்து  வேறுபட்ட  நற்பார்வை கொண்டார் பேரா.இலக்குவனார்; மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள், ஊர்வன பற்றித் தொல்காப்பியர் இவ்வியலில் தெரிவிக்கிறார். ஆனால் எவ்வகைத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகள்பற்றிய வரிகள் இடம் பெற்றுள்ளன. இவை இடைச்செருகல்களே! என ஆராய்ந்து தெளிவாகஉரைக்கிறார். பிறர் கண்கொண்டு தொல்காப்பியத்தைப் பார்க்காமல் தெளிவான கண்கொண்டு பார்த்து புதிய பார்வையை நாம் ஏற்கும் வண்ணம் வெளிப்படுத்தியுள்ளார் இலக்குவனார்.

   திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், பெண்களுக்குக் கல்வி தேவையில்லை எனவும் தாய் அறிவற்றவள் என்றும் இவைபோன்றும் காமாலைக்கண்கொண்டு நோக்கியுள்ளார். இலக்குவனாரோ, மகனைக்  குறிப்பது மகளையும் குறிக்கும் ஆணுக்குரியதாகக் கூறப்படுவது பெண்ணுக்கும் உரியதே  என விளக்குகிறார். தெய்வத்தைத் தொழாமல் கணவனை மனைவி தொழ வேண்டுமெனில் மனைவியைக் கணவனும்  தொழவேண்டும் என்பதே பொருள் என்கிறார். இக் காலப் பெண்ணியப் பார்வையை அக் காலத்திலேயே இலக்குவனார் கொண்டிருந் திருக்கிறார். பெண்ணுரிமைகளைப் பேணும் வகையில் முதலில் சிறப்பாக உரை தந்துள்ளவர் இலக்குவனாரே ஆவார்.

  தொல்காப்பிய ஆராய்ச்சி, பழந்தமிழ், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், மாமூலனார் பாடல்கள் முதலான இலக்குவனாரின் படைப்புகளில் நாம் நானிலத்திற்கு நலம் பயக்கும்  அவரது புதிய பார்வையைக் காணலாம். இலக்குவனாரின் புதிய பார்வை  தமிழ் இலக்கியங்கள் மீது படிந்த மாசினைத் துடைக்கிறது; வலிந்து அணிவிக்கப்பட்ட ஆரியப் போர்வையை அகற்றுகிறது; சங்கப்புலவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது; பழந்தமிழர் வாழ்க்கைச் சிறப்பை நமக்குஉணர்த்துகிறது; பழந்தமிழ் நூல்களின் காலத்தை வரையறுக்கிறது;  தமிழின்தொன்மையைத் தெளிவாக்குகிறது; உலக மொழிகளின் அரசி  தமிழ்த்தாயே என உலகமக்களுக்குக் காட்டுகிறது.

தமிழை உணரத் தமிழ்ப்பார்வை கொள்வோம்! தமிழராய் வாழ்வோம்!

52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01