(ஒளவையார்: 6 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 16

2. ஒளவையார் (தொடர்ச்சி)

அதிகமானோ, அவர்மேல் சென்று தன் அருமந்த நாட்டைக் காக்கும் வழி கருதி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவனாய் வாளாவிருந்தான். அதிகர் கோமான் வாளாவிருத்தல் கண்டு, ஒளவையார் அவன் நெஞ்சில் கனன்றெரியும் ஆண்மைத் தீப்பொங்கி எரியும் வண்ணம் வீர மொழிகள் பல புகன்றார் : “வெண்காந்தள் பூவும் காட்டு மல்லிகையும் மணம் பரப்பும் மலைச்சாரலில் வாழும் மறப்புலி சீறினால் அதை எதிர்க்கும் மான் கூட்டமும் உளதோ? காய்கதிர்ச் செல்வன் கதிரொளி பரப்பக் கண்டால், கனையிருளும் எதிர் நிற்குமோ? பாரமிகுதியால் வண்டியின் பார் அச்சொடு பொருந்தி நிலத்தின்கண் சகடம் பதியினும், மணல் பரக்கவும் கற்பிளக்கவும் இழுத்துச் செல்லும் பெருமிதப் பகட்டிற்குத் துறையுமுண்டோ? கணைய மரமொத்த முழந்தாளளவு தோயும் கைகளை யுடையவனே, மழவர் பெரும, நீ போர்க்களம் புகுந்தால் உன் மண்ணகத்தைக் கைக் கொண்டு ஆர்க்கும் வீரர்களும் உண்டோ?’ [1] என்று வீரமுழக்கம் செய்தார்.
——–
[1]. புறம். 90.
——–


ஒளவையாரின் வீரமுழக்கம் கேட்ட அதிகமான் கோபத்தீ இரு கண்களிலும் பொறி பறக்க அரிமா எனப் பாய்ந்தான். அவனுடன் இருபெரு வேந்தரும் தம் நால் வகைப் படையுடன் கலந்துகொண்டனர். இருபுற வீரரும் ஒருவரை ஒருவர் சாடினர். நானிலமே நடுங்கப் பெரும்போர் மூண்டது. மலையன் அவனை எதிர்த்து நின்ற அதிகன் ஆகிய இருபெரு வேந்தர் படையும் கடலை எதிர்க்கும் கடலென நின்று ஆரவாரித்தன. இரு புற மன்னரும் வீரப்போர் நிகழ்த்தினர். யானைகளும், குதிரைகளும் மலை மலையாய் வெட்டுண்டு வீழ்ந்தன. வாள் வீரரும் வேல் வீரரும் விழுப்புண் தாங்கிச் சாய்ந்தனர். களிறுகளின் பிளிறலும், பரிகளின் சாவொலியும், வீரர்களின் அரற்றலும் கடலொலியையும் மீக்கூர்வவாயின. வையகம் காணாக் கடும்போர் நடந்தது.

தன்னை ஒத்த ஓரியைக் கொன்ற மலையமான் பால் கொண்ட வஞ்சம் தீர்க்கத் துணையாகப் படை திரட்டி வந்த சேரன் கொடுமதியை-இறுமாப்பை-நினைந்தான் அதியன்; எரிமலை போலக் கொதித்தான். கண்களில் சினத்தீக்கனன்றது. நெடுநாள் பசித்திருந்த வாள் வரி வேங்கையென நேரார் படை கிழித்து அவர் நெஞ்சைப் பிளக்கப் பாய்ந்தான்; எதிர்த்து வந்த மள்ளரையும் களிறுகளையும் இரு கூறாக்கினான். அதியனது ஆற்றொணாச் சினத்தீக் கண்ட மழவர் கூட்டம், விண்ணதிர முழங்கி, அடுபோர் உடற்றியது; காற்றென வந்த அம்புகளை எல்லாம் தடுத்து நிறுத்தி மழையெனக் கணைகளைப் பொழிந்தது. இரு திறத்திலும் பேயும் அஞ்சப் பெரும் போர் நிகழ்ந்தது. மாவும் களிறும் குருதி வெள்ளத்தில் மிதந்தன. வைத்த கண் வாங்காது வாள் வீரரும் வேல் வீரரும் அருஞ்சமர் புரிந்தனர். அதியமானும் அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் நின்று பெரும்போர் புரிந்தான். அவன் உடல் முழுதும் மாற்றாரின் கணைகளால் துளைபட்டது. அத்துளைகளினின்றும் செந்நீர் அருவி போலப் பெருக்கெடுத்தது. அது கண்ட ஒளவையாரின் அன்புள்ளம் கொதித்தது. அவர், “பெருந்தகாய், பெருஞ்சமர் புரிந்து நீ விழுப்புண் தாங்கியமையால், உன்னோடு மாறு கொண்ட மன்னர், களத்தில் சாவாமையால் உளதாகும் குற்றம் ஒழியும்படியும் பிற்காலத்தில் நோயால் இறந்த தம் உடம்பைத் தருப்பையில் கிடத்தி வாளால் பிளந்து அடக்கம் செய்தலினின்று தப்பியும் உய்ந்தனர். இப்போது உன் வாட்போரில் பலர் மாண்ட னர். இனி நீ வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது?” என மேலும் அவனை ஊக்கினார். அதிகமானும் ‘உடலெனக்கு ஒரு சுமை,’ எனக் கருதிய வனாய்த் தன் ஆற்றலெல்லாம் காட்டிச் சமர் புரிந்தான். அந்நிலையில் கூர்வேலொன்று கடுகி வந்து அவன் பேரிதயத்தைப் பிளந்தது. அதிகமான் வாழ்வு வீரச் சாவைப் புன்முறுவலோடு ஏற்றது. ஆனால், அவன் சாவை வையகம் பொறுக்குமோ? பருவகால மழையெனக் கண்கள் நீர் பொழிய, அவன் மக்கள் உள்ளம் குமுறி அழு தார்கள். ஒளவையார் அடைந்த துயரைச் சொல்லவும் இயலுமோ! அவர், தன்னினும் தண்ணார் தமிழையே பெரிதாகப் போற்றி ய அப்பெருந்தகையின் மீளாப் பிரிவை எண்ணி எண்ணி இதயம் துடித்தார்; உள்ளம் குமுறிக் குமுறி ஓவென அழுதார்.

”குளிர்ந்த நீருடைய துறையின் கண் தேன் நிறைந்த பகன்றை மாமலர் பிறரால் சூடலின்றி வாடி ஒழிவதைப் போன்று, தம்மிடமுள்ள பொருளைப் பிறர்க்கு ஈயாமல் இறந்தொழியும் மாந்தர் பலரையுடையது இம்மண்ணுலகம். இத்தகைய உலகில் அதியன் வாழ்வு எத்துணைப் பயன் நிறைந்து விளங்கியது! சிறிது மதுவைப் பெற்றாலும் அதை எமக்குத் தருவான். பெரிய அளவில் கிடைத்தாலோ, அம்மதுவை யாமுண்டு பாட எஞ்சியதை அவன் நுகர்வான். அந்தோ! அந்த வாழ்வு கழிந்ததே! சோறு அனைவர்க்கும் பொதுவாகலான், அப்பெருந்தகை அது சிறிய அளவில் கிடைப்பினும் பெரிய அளவில் கிடைப்பினும் பலரோடு சேர்ந்து உண்பான். அந்த வாழ்வு கழிந்துவிட்டதே! என்பொடு ஊன் உளதாகிய இடமெல்லாம் எமக்கீந்து, அம்புடன் வேல் நுழை வழியெல்லாம் தான் நிற்பான். நரந்தம் நாறும் தன் கரத்தால் புலவு நாறும் என் தலையை அருளுடன் தைவந்திடுவான். அந்த வாழ்வும் தொலைந்ததே! அவன் மார்பில் பாய்ந்த வேல் அவனை மட்டுமா கொன்றது? இல்லை! அது பெரும்பாணரின் அகல் மண்டையைத் துளைத்து, ஊடுருவிச் சென்று, இரப்போரின் ஏந்திய கையையும் பிளந்து, சுற்றத்தார் புன்கண் பாவையின் ஒளியையும் மழுங்கச் செய்து, அழகிய நுண் சொல் தேர்ச்சிப் புலவர் நாவிலே சென்று அன்றோ விழுந்தது! எமக்குப் பற்றாகிய எம் இறைவன் யாண்டுளனோ! இனி, பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஒன்று ஈவாருமில்லை’, என்னுங் கருத்தமைய

‘சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே!
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறுந் தன்கையாற்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே!
அருந்தலை யிரும்பாணர் அகல்மண்டைத் துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்(று) அவன்
அருநிறத்(து) இயங்கிய வேலே!
ஆசா(கு) எந்தை யாண்டுளன் கொல்லோ!
இனிப்பாடுநரும் இல்லை; பாடுநர்க்(கு)ஒன்று ஈகுநருமில்லை;
பணித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்(கு)ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!’         (புறம், 235)

என விண்ணும் மண்ணும் கண்ணீர் வடிக்கத் தம் உள்ளத்தில் பீரிட்டு எழுந்த துயரவெள்ளத்தைச் செய்யுள் வடிவாக்கினார்.


(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்