thamizh-hindi01

ஐயா! குறள்நெறிக் கருத்தரங்கத்தில் ஓர் அன்பர் விடுத்த வினாக்களுக்கு விடையாக எனது கருத்துகள்.

அவ்வன்பர் தொடக்கத்தில் ‘பிறப்பால் தமிழன், மொழியால் தமிழன்; என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!’ எனக்கூறிவிட்டுப் பல பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை முதற்கண் அன்பர் தெரிந்து கொள்வது, அவர் எடுத்துக் கொண்ட செயலுக்கு மிக வேண்டற்பாலதாகும்.

– ச.சிவசங்கர்.

1. ஒரு காலத்தில் ஆண்டமொழியாக இருந்த தமிழ், வெள்ளையன் காலத்தில் இரண்டாந்தர மொழியாக ஆகியது. வெள்ளையன் சென்ற பின் காங்கிரசு ஆட்சி அமைந்தபின் இப்பொழுது மூன்றாந்தர மொழியாக ஆக்கப்பட்டிருக்கின்றது. எடுத்துக்காட்டு::- அஞ்சலக அறிவிப்புப் பலகைகள், புகைவண்டி நிலையங்கள், இன்னோரன்ன அரசு அலுவலகங்கள், சென்ற ஆண்டு வரை, முதலில் ஆங்கிலமும், இரண்டாவது தமிழுமாக இருந்தன. இப்பொழுது முதலில் இந்தி, இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது தமிழ். இந்நிலையை இவ்வன்பர் கண்ணால் காணவில்லையோ? இப்படி தமிழுக்கு மூன்றாவது இடம் தரப்படுவது எங்கே? தமிழ் நாட்டில் இது தமிழ் அழியும் வகையைக் காட்டவில்லையா? இதுவரை விருப்பப் பாடமாக இருந்தது இந்தி; இப்பொழுது தேர்வெழுதும் மாணாக்கன் கண்டிப்பாக இந்தித் தேர்வெழுதியே தீர வேண்டுமென ஆளுபவர் கட்டளையிட்டிருக்கின்றனர். இப்பொழுது எழுதித் தீரவேண்டுமென இட்டிருக்கும் கட்டளை, நாளை ஒவ்வொரு மாணாக்கனுக்கும் குறிப்பிட்ட தேர்வெண் இந்தியில் பெற்றால்தான் தேர்வில் தேற முடியும் என்று உரைக்காது என்பதற்கு என்ன உறுதி? இது தமிழ்மொழியை அழிக்கும் வகையைச் சேர்ந்ததல்லாமல் வேறென்ன?

2. ஏனையா, அது தமிழாக ஏன் இருக்கக் கூடாது? தமிழை விட எந்த வகையில் சிறந்தது இந்தி மொழி? உலகத்தோடு இணைந்து செல்ல ஒவ்வொரு மாநிலத்தாருக்கும் ஆங்கிலம் தேவை. இந்தி மொழி பேசும் மாநிலத்தார் வெளி நாட்டுத் தொடர்புக்கு ஆங்கில மொழி கற்றுத் தீர வேண்டும். இப்படி ஒவ்வோர் மாநிலத்தாரும் கற்க வேண்டியுள்ளது. இப்படி வெளிநாட்டுத் தொடர்பிற்காகக் கற்றிருக்கும் ஆங்கில மொழி கொண்டு நாம் ஒவ்வொருவரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாதா? இல்லை, வெளிநாட்டுத் தொடர்பிற்கும் இந்தி மொழியே போதும் என்று இவரால் கூறிவிட முடியுமா? தமிழ்நாட்டான் தன் நாட்டில் பேச ஒரு மொழி, அண்டை மாநிலத்தோடு பேச வேறொரு மொழி, வெளிநாட்டாருடன் பேச மூன்றாவதாக ஒரு மொழி. ஆனால், இந்தி பேசும் மாநிலத்தார் மட்டும் தன்னாட்டிற்கும் பக்கத்து மாநிலத்திற்கும் இந்தி. வெளிநாட்டுத் தொடர்பிற்கு ஆங்கிலம், இடர்ப்பாடு யாருக்கு மிகுதி? எந்த மொழியைச் சேர்ந்த மாணாக்கர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்க முடியும்? ஆகவே மாநிலத் தொடர்பிற்கு இந்தி மொழி நமக்குத் தேவையில்லை.

3. மறைந்த பின்தான் அதுபற்றிப் பேச வேண்டுமென்பது பொருந்தாக் கூற்று. ஒறு மனிதனின் உடலில் நோயின் அறிகுறி தெரிந்தவுடன் அதை நீக்குவதற்கான முறையை மேற்கொள்வது தான் அறிவுடையார் செயல். வள்ளுவரும் இதனையே வலியுறுத்தி, “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் – வைத்தூறு போலக்கெடும்” எனக் கூறியுள்ளார். எனவே உடலிலுள்ள ஏதாவது ஒரு பகுதியை இழந்த பின்தான் அந்நோயை நீக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவது அறிவுடையோர் செயலாகாது.

4. பள்ளியில் பயிலும் மாணாக்கர் அனைவரும் பிறமொழி கற்றாற்றான் ஒரு மொழி உலகப் புகழெய்து மென்பது விந்தையான கூற்று. தன் மொழி உலகப் புகழெய்க வேண்டுமென்பதற்காக எத்தனை மாணாக்கர் கற்கின்றார்! அப்படிக்கற்கும் மாணாக்கர், இந்தியென்ன, எந்த மாழியையும் கற்கட்டும்! அதையார் மறுத்தார்? ‘‘இந்த வகையிற்றான் திருக்குறள் உலகப் புகழ் கண்டுள்ளது’’ என்கின்றார்.

இன்று உலகப் புகழ் திருக்குறள் கண்டுள்ளதற்கு எத்தனை பேர் இந்தியில் புலவராகி உலகப் புகழ் பெற வைத்தார். மொத்தத்தில் இந்தியால் தமிழருக்கு இன்னலே தவிர நன்மை இல்லை என்பதைத் தெளிவாக உணர வேண்டும்.

இறுதியாக இந்தியாவில் தமிழுக்குச் சிதைவு வராமல் காக்க வேண்டுமென்று தமிழுணர்வு கொண்டோர் கூறுவதை, ஒரு சில கட்சிக்கு வளர்ச்சியைத் தரும் என்கின்றார். இது விந்தையிலும் விந்தை! தமிழைக் காக்க வேண்டுமெனக் கூறினால் அது ஒரு கட்சிக்கு வளர்ச்சியாக அமையுமென்றால் அக்கட்சி வளரட்டுமே! தமிழைக் காக்கவேண்டுமெனக் கூறுவாரையெல்லாம் ஒரு கட்சியின் சார்புடையாரெனக் கூறி, இவரே அக்கட்சிக்கு வளர்ச்சியை உண்டு பண்ணி விடுவார் போலிருக்கிறது! இது கட்சி சார்பற்று நடு நின்று கூறும் மொழிக்கூற்றே தவிர ஒரு சார்புடையதன்று என்பதனை நண்பர் தெளிவாக உணர வேண்டுமென்று அன்புடன் வேண்டுகின்றேன்.

– குறள்நெறி: பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964: பக்கம் 6

thamizh-hindi02