(தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு – தொடர்ச்சி)

ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள்

துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தின் விளைவாக அழிவின் விளிம்பில் நிற்கும் மற்ற நாடுகள் எவை? தாழி அன்பர்களின் இந்தக் கவலைதோய்ந்த வினவலுக்கு, பொதுவாக பசிபிக்கு தீவுகள், ஆனால் அவை மட்டுமல்ல என்று விடையிறுக்கலாம்.

மேலும் துல்லியமாக மாலத்தீவுகள் உள்ளிட்ட சில நாடுகளை ஐநா அமைப்பின் காலநிலை வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

1900க்குப் பின் நாளது வரை கடல்மட்டம் 15 – 25 கீழ் நூறன் கோல்(centimeter) (6 முதல் 10 அங்குலம்) உயர்ந்துள்ளது. உயரும் வேகம், குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளில், கூடிய வண்ணமுள்ளது. இதே போக்கு தொடருமானால்,  இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 39 அங்குலம், சற்றொப்ப ஒரு கோல்(metre) உயரும். பசிபிக்கு பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் இரைந்து கிடக்கும் தீவுகளுக்கு இது பேரிடராக முடியும்.

முன்பே சொன்னேன், அப்படியே திடீரென்று ஒரு நாள் மூழ்கிப் போவதன்று துயரம். கடல் மட்டம் உயர உயரப் புயல் மழை, கடல் கொந்தளிப்பு எல்லாம் அடிக்கடி தாக்கும், கடல்நீர் உட்புகுந்து நீர் நிலைகளை உப்பாக்கும், நிலத்தடி நீரும் உப்புநீராகி விடும். நீரின்றி அமையாதுலகு. நன்னீர் இல்லாமல் மனிதர்கள் அந்தத் தீவுக் கூட்டங்களில் வாழ முடியாத நிலை ஏற்படும், கடலில் மூழ்குவது பிறகுதான்!    

காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா பல்லரசுக் குழு எடுத்துக்காட்டியுள்ள ஆய்வின்படி,  2100க்குள்ளேயே ஐந்து நாடுகள் வாழத் தகாதவை ஆகி விடக் கூடும். மாலத்தீவுகள், துவாலு, மார்சல் தீவுகள், நௌரு, கிரிபத்தி ஆகிய இந்த ஐந்து நாடுகளிலிருந்தும் ஆறு நூறாயிரம் பேர் காலநிலை ஏதிலியராக வெளியேற நேரிடும்.

இந்த உலகின் நாடற்றோர் கூட்டத்தில் — சிறைச்சாலையில் மனிதர்களை வரவு செலவு என்று கணக்கிடுவது போல் — புதிய வரவுகளாக இவர்களையும் சேர்த்து விட வேண்டியதுதான்! 

2100 வரும் போது நான் இருக்க மாட்டேன். உங்களில் பலரும் இருக்கப் போவதில்லை. ஆனால் நம் பெயரன்களும் பெயர்த்திகளும் கொள்ளு எள்ளுகளும் இருப்பார்கள் அல்லவா? அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமல்லவா?

சில காலம் முன்பு ஒரு செய்தி படித்தேன்: இளம் இணையர் சிலர் “குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று உறுதியாக அறிவித்திருந்தார்கள். ஏனாம்? காலநிலை மாற்றத்தால் கெட்டழியப் போகும் உலகில் எங்கள் குழந்தைகள் தவிப்பதை விரும்பவில்லை என்று கூறியிருந்தார்கள்.

ஈராண்டு முன்பு கனடாவிலிருந்து என்னைக் காண வந்திருந்த இளைஞர் ஒருவர் கடுஞ்சினத்துடன் பேசினார்: “இந்த மனிதர்கள் அழியட்டும் தோழர்! அப்போதும் உலகம் அழியாது, இயற்கை மிச்சப்படும். புதிதாக உயிர்களின் தோற்றம் நிகழாமற்போகாது. படிநிலை வளர்ச்சியினால் புதிய மனிதர்கள் மீண்டும் தோன்றினால் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள்.”

நிலைமை எவ்வளவு கவலைக்குரியது என்று உங்களுக்குப் புரிகிறதா?

ஐந்து நாடுகளோ அல்லது வெறும் ஐந்து ஊர்களோ அவை அழிந்த பிறகுதான் மாந்தக் குலம் விழிக்குமா? நாட்டு நலனுக்காக ஒரு மாநிலமும் மாநில நலனுக்காக ஒருசில ஊர்களும் அழிந்தால் தவறில்லை என்பது போல் உலக நலனுக்காக ஐந்து நாடுகள் அழிந்தால் தவறில்லை என்று வேதாந்தம் பேசுமா?

இதில் ஒரு சிக்கல்: அழிவின் சறுக்கல் அந்த ஐந்து நாடுகளோடு நில்லாது. அது மென்மேலும் உந்தம் பெற்று பிறகு மீண்டு வர முடியாத நிலை ஏற்படும். விழித்துக் கொள்வதென்றால், பிறகல்ல, இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும்.

போரினால் உலக நிலவரையிலிருந்து காணாமல் போன நாடுகள் உண்டு. ஆனால் ஏடறிந்த வரலாற்றில் இயற்கைச் செயல்வழியால் அடியோடு துடைத்தழிக்கப்பட்ட நாடுகள் இல்லை.

இது துவாலுவின் துயரம் மட்டுமல்ல, ஐந்து நாடுகளின் துயரம் மட்டுமல்ல, மாந்தக் குலத்தின் துயரம்! இன்றளவும் தவிர்க்க வியலாத துயரமன்று! வெல்லக் கூடிய இடர்தான்!

எகித்து நாட்டில் நடந்து வரும் 27ஆம் காலநிலை மாற்ற மாநாட்டில் ஐநா பொதுச்செயலர் அந்தோணியோ குத்தரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை உண்மயானது:

“மனித இனம் நரகத்தை நோக்கிய நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருகிறது. நாம் உடனடியாகக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்க வில்லையென்றால் ஏற்படப்போகும் கொடுந்தாக்கங்களை சரிசெய்ய முடியாது. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் அனைத்து நாடுகளும் அழிய வேண்டியதுதான். இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்ந்தெடுக்க முடியும்.” 

“மானிட சமுத்திரம் நானென்று கூவு!” — இது பாவேந்தர் அழைப்பு. சமுத்திர மானிடம் ஆவதற்குள்ளாக உங்கள் அழைப்புக்கு வினையாற்ற வேண்டும் என நினைக்கிறோம்.

தரவு: தாழி மடல் (12)