நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்!

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்

பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு

உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே

டொண்டொண்டொ டென்னும் பறை. (நாலடியார் பாடல் 25)

பொருள்: உறவினர் கூட்டமாகக் கூடிநின்று கூவி அழ, பிணத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் உறுமுயதய் ‘இன்பம் உண்டு, இன்பம் உண்டு’ என்று மயங்குபவனுக்கு, ‘டொண் டொண் டொண்’ என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!

சொல் விளக்கம்: கணம் கொண்டு = கூட்டமாகக் கூடிக்கொண்டு; சுற்றத்தார் = உறவினர்; கல்லென்று = கலீல் என்னும் ஒலி உண்டாக; அலற = புலம்பியழ; பிணம் = பிணத்தை; கொண்டு = எடுத்துக்கொண்டு; காடு = சுடுகாட்டில் அல்லது இடுகாட்டில்; உய்ப்பார் = வைப்பவரை; கண்டும் = பார்த்திருந்தும்; மணம்கொண்டு = திருமணம் செய்துகொண்டு; ஈண்டு = இவ்விடத்தில்; உண்டு உண்டு உண்டு என்னும் = (இல்வாழ்க்கை) உண்டு உண்டு உண்டு என்னும்; உணர்வினான் = அறிவீனனுக்கு; டொண் டொண் டொண் என்னும் = டொண் டொண் டொண் என்னும் (ஓசையுள்ள); பறை = சாப்பறை; சாற்றும் = (உடல் நிலையாமையை) அறிவிக்கும்;

இந்தப் பாடலுக்கு இல்லறம் வேண்டா எனச் சொல்வதாகக் கருதக் கூடாது. இல்லற இன்பத்தில் ஈடுபடும்பொழுதே இறப்போரைப் பார்த்து இன்பம் நிலையற்றது என உணர்ந்து நிலையான இன்பம் தரும் அறப்பணிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துவதாகக் கருத வேண்டும்.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘அழகே வா’ எனத் தொடங்கும் பாடலில்,

நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை

அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை

என்ற வரிகள் வரும். இவற்றை அறியாதவர்கள் அல்லர் முனிவர்கள். பிறர் கூறுவதுபோல் சாவை எண்ணி இல்லறத்தில் ஈடுபட வேண்டா எனச் சொல்வதாகக் கருத வேண்டா. இல்லற வாழ்வே தமிழர் நெறி. மரணம் உறுதி என்பதை உணர்ந்து இருக்கும் காலத்தில் நற்செயல் புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதாகக் கொள்ள வேண்டும்.


இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்