கசேந்திரகுமார்-மனோகணேசன்

கசேந்திரகுமார்-மனோகணேசன்

 

ஈழம் இன்று – இளையவிகடன் செய்தியாளரின் நேரடி அலசல்

இராணுவ முகாமில் இன்னும்  நூறாயிரம் பேர்!

  இலங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராலும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துயரம் நிகழ்ந்து. இப்போது எப்படி இருக்கிறார்கள் தமிழ் மக்கள்? அவர்கள் கோரிக்கையாக என்னவெல்லாம் இருக்கிறது? அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா? அவர்கள் தமிழக மக்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கி றார்கள்?… இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி இலங்கைக்குப் பயணமானோம்.

  யாழில் பரவிய தமிழக ஒழுகலாறு!

  தீவு தேசத்துக்குச் சென்றபோது, மழை வெள்ளத்தைத் தாண்டி, கொழும்பு நகரமே உற்சாகமாக விசாகத் திருவிழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் வீதிகளில்  இராணுவத்தினர் நின்றுகொண்டிருந்தனர். இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில், கொழும்பு-ஐவிட அதிகம். இதைத் தாண்டி நம்மைத் துரத்தியது, யாழ்ப்பாணம் வீதியெங்கும் காணப்பட்ட தமிழ்த் திரைப்பட  சுவரொட்டிகள்,  வெட்டுருக்கள். யாழில் இருந்த நம் நண்பரிடம், “என்ன தமிழக ஒழுகலாறு, யாழிலும் பரவிவிட்டதா?” என்று கேட்டதற்கு யாழில் நமக்காகக் காத்திருந்த இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களான கிரிசாந்து, சசீந்திரன், கருணன், யதார்த்தன் ஆகியோர்  நமது கேள்விக்குப் புன்னகையை மாற்றாகத் தந்தனர். அவர்களிடம், வழக்கமான  உசாவல்களுக்குப் பின் நம் உரையாடலைத் தொடங்கினோம்.

‘‘பண்பாட்டுப் போர் தொடர்கிறது!”

‘‘ஆயுதப்போர் முடிந்து இருக்கிறது, பண்பாட்டுப்போர் தொடரத்தான் செய்கிறது. தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப் பகுதிகளில் உள்ள அரசமரங்களுக்கு அடியில் புத்தர் சிலைகளை வைக்கிறார்கள். இது பண்பாட்டுத் திணிப்புதானே? வடக்கு மாகாணத்தில் எந்தத் தமிழன் பெளத்தத்தைத் தழுவினான்? பின் ஏன் அங்கு புத்தர் சிலை? இலங்கை அரசு தனிப்பட்ட தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கப் பார்க்கிறது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகப் பணம் கொடுத்து சிங்கள மக்களைக் குடியமர்த்துகிறார்கள். இந்தச் சிங்கள மக்கள் வட்டிக்குப் பணம் தருகிறார்கள். தமிழர்கள், சிங்களர்களை அண்டிப் பிழைக்கும் நிலையை அரசு திட்டமிட்டுச் செயல்படுத்துகிறது. தமிழகத்தில் ஒரு நகராட்சித் தலைவருக்கு இருக்கும் அதிகாரம்கூட எங்கள் ஊர் முதல்வருக்கு இல்லை. அதிகாரம் இல்லாத ஒரு பதவியை வைத்துக்கொண்டு எதை வென்றெடுக்க முடியும்?

  போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்பும் ஏறத்தாழ இலட்சம் தமிழர்கள் இன்னும் இராணுவ முகாமில்தான் இருக்கிறார்கள். பல இலட்சம் ஏக்கர் தமிழர் நிலங்கள், இன்னும் இராணுவத்தின் கையில்தான் இருக்கின்றன. இவை விடுவிக்கப்பட வேண்டும். இங்கு பெரும்பான்மை மக்கள் சிங்கள மக்கள்; அவர்களின் விருப்பம் மட்டும்தான் இந்த அரசின் விருப்பமாக இருக்கிறது. நீதிமன்றமும் சுதந்திரமாகச் செயல்படுவதில்லை. அரசின் விருப்பம்தான், நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கிறது” என்று நாம் சந்தித்த இளைஞர்கள் சொல்கிறார்கள்.

‘‘இங்குள்ள நிலைமையைப் புரிந்து பேச வேண்டும்!”

இளைஞர்கள் மேலும் தொடர்ந்தனர். ‘‘வட கிழக்கு மாகாணத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் வீடும்,  போர் வடுக்களைச் சுமந்துகொண்டு இருக்கிறது. உண்மையில் மக்கள் இப்போது போராடும் நிலையில் இல்லை.  மக்கள்நாயகப் போராட்டங்களுக்குக்கூட மக்கள் கூடுவதில்லை என்பதுதான்  உண்மை. உண்மையில் சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரமும் மிக மோசமானதாகத்தான் இருக்கிறது. நாங்கள் குறிப்பிட்டது பொருளாதார  அடிப்படையில் மேல்தட்டில் இருக்கும் சிங்களர்களின் குரலைத்தான் அரசு எதிரொலிக்கிறது. தமிழக மக்களுக்கு எப்போதும் அவர்களுடைய  சிக்கல்தான் முதன்மையானதாக இருக்கிறது. ஆனால், எங்களுக்காகப் பேசும் சில தமிழகத் தலைவர்கள் இங்குள்ள களநிலைகளைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். அவர்கள் பேசிவிட்டு அங்கு பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், எங்கள் நிலைமை? அவர்களின் பேச்சு சிங்கள மக்களுக்குக் கோபத்தைத் தூண்டாதா? எங்கள்  சிக்கலைப் பேச வேண்டா எனக் கூறவில்லை. ஆனால், களநிலவரத்தையும், எங்கள் தேவையையும் அறிந்து பேசுங்கள்” என்றனர்.

‘‘போராட்டம் நியாயத்தை உணர்த்திவிட்டது!”

 மக்கள்நாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நடேசபிள்ளை வித்யாதரனைச் சந்தித்தோம். “தமிழர்கள் ஓர் இடத்தில் செறிவாக இருந்தால்தான், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்பார்கள். அதனால், இலங்கைத் தீவில் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடாது என்பதில், சிங்கள அரசு  தொடக்கத்திலிருந்தே மிகத் தெளிவாக இருக்கிறது. நீர்க்கொழும்பில் அப்போது என்ன செய்ததோ, அதைத்தான் இப்போது தமிழர்கள் செறிவாக வாழும் அனைத்துப் பகுதிகளிலும் செய்கிறது. நாங்கள் புத்தர் சிலையை நிறுவுவதை இன வேறுபாட்டால் எதிர்க்கவில்லை. சிங்கள அரசுதான் புத்தரைத் தங்கள் அரசியல் சூழ்ச்சிக்கான பகடைக் காயாகப் பயன்படுத்துகிறது. இதற்குத் தீர்வென இந்தியாவைதான் நம்புகிறோம். ஈழ மக்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஆயத்தமாவதற்கு முன்பே, அவர்கள் கையில் ஆயுதத்தைத் திணித்தது யார்? இந்தியாதானே? அப்படியானால், மற்றவர்களைவிட இந்தியாவுக்குத்தானே அதிகப் பொறுப்பு இருக்கிறது.  பன்னாட்டு மன்பதை ‘ஆயுதங்களை விட்டுவிட்டு வாருங்கள், நாம் தீர்வைப் பேசலாம்’ என்றது. இப்போது புலிகளும் இல்லை, ஆயுதங்களும் இல்லை. ஆனால், உண்மையான தீர்வைப் பேசத்தான் யாரும் வரவில்லை. புலிகளின் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தபோது தமிழர்களின் உரிமைக் குரல் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது எவர் காதுகளிலும் எங்கள் குரல் விழவில்லை. அப்படியானால், புலிகளின் போராட்டம் மிகச் சரியானதுதானே?” என்று அவர் கேட்கிறார்.

‘‘ஆட்சி மாறி இருக்கிறது… காட்சிகள் மாறவில்லை!’’

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கசேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், ‘‘எப்படி இருக்கிறது புதிய ஆட்சியின் ஓராண்டுச் செயல்பாடு’’ என்று நாம் கேட்டதற்கு, “ஆட்சிதான் மாறி இருக்கிறது. ஆனால் காட்சிகள் மாறவில்லை. பெளத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்த அரசும் இருக்கிறது. இவர்களும் கூட்டாட்சி முறையை  மறுக்கிறார்கள்,  இராணுவத்தைப் பன்னாட்டுக் குமுக உசாவலிலிருந்து காக்கிறார்கள். உண்மையில் அரசியல் தீர்வு  தொடர்பில் இருவருக்கும், எந்த மாற்றமும் கிடையாது. அதே நேரம் எந்த முன்னேற்றமும் இல்லையென்று சொல்ல மாட்டேன். இராசபக்சே ஆட்சி மிக மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அப்பட்டமான இனவாதத்தைக் கக்கியது. இராணுவம் முழு இனவெறியுடன் நடந்துகொள்ள  இசைந்தது. இந்த ஆட்சியில் அந்த இனவெறி மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அரசின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், மேற்கு உலகமும் சொன்ன நியாயம், ‘‘புலிகள் கூட்டாட்சித் தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அவர்களது கோரிக்கை தனி ஈழமாக மட்டும் இருக்கிறது’’ என்பது. அதாவது, ஐக்கிய இலங்கைக்குள், இரண்டு தேசங்கள் கொண்ட நாடாக இருக்கப் புலிகள்  உடன்படவில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் இந்தியா முன்வைத்த வாதம். ஆனால், இன்று நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு கூட்டாட்சி முறை தீர்வைதான் கேட்கிறோம். புலிகள் கூட்டாட்சித் தீர்வை ஒப்புக்கொள்ளவில்லை என்றுதான் அவர்களை நீங்கள் அழித்தீர்கள். ஆனால், இன்று நாங்கள் கூட்டாட்சித் தீர்வைதான் கேட்கிறோம். அதை அழுத்தங்கள் கொடுத்துப் பெற்றுத் தர வேண்டியது இந்தியாவின் கடமை” என்றார்.

புலிகள்,உரிமைக்குரல் :pulikalinpoarattam_sariyaanathuthaane

– மு.நியாசு அகமது

நியாசுஅகமது :nyasahamadu

இளையவிகடன்(சூனியர்விகடன்)

முத்திரை-இளையவிகடன்,சூனியர்விகடன் :muthirai_juniorvikadan

http://www.vikatan.com/juniorvikatan/2016-jun-22/investigation/120369-eelam-today-live-report.art