((சனாதனம் – பொய்யும் மெய்யும் 87-88 தொடர்ச்சி)

  •  

மனு நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியர் சர்.வில்லியம் சோன்சு என்பார் 1794இல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் மொழி பெயர்த்துள்ளார். திருலோக சீதாராம் என்றால் திருவையாறு (உ)லோகநாதய்யர் சீதாராமன். இவர் எழுத்தாளர், இதழாளர், மொழி பெயர்ப்பாளர், பன்முக ஆளுமை மிக்கவர். பிராமணரான இவர் எப்படித் தம் வருணத்தாருக்கு எதிராகத் தவறாக மொழி பெயர்ப்பார்? எனவே, மனுவில் உள்ள அறமற்ற செய்திகளை உள்ளபடியே வில்லியம் சோன்சும் திருலோக சீதாராமும் மொழி பெயர்த்துள்ளனர். 

ஆனால், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு மனு கூறும் அறமற்ற செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் சிலர் பிராமணன் என வரும் இடங்களில் அவ்வாறு குறிப்பிடாமல் மறைத்து மொழி பெயர்த்துள்ளனர். இது போல் பொருத்தமற்ற முறையில் இடைச்செருகலாக நல்ல செய்திகளைச் சேர்த்துள்ளனர். இந்த நல்ல செய்திகளை எடுத்துக் கூறி மனுவைச் சிறந்த நூலாக உருவகப்படுத்துகின்றனர். இதன் மூலம் மனுவின் கயமைத்தனத்தை மறைத்து விடுகின்றனர். களங்கங்கள் மறைக்கப்படும் மனுவின் பொய்யான தோற்றம் கண்டு மயங்கக் கூடாது.

  • தொற்று நோயை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால்  தொற்று நோயாளியை ஒழிக்க வேண்டும் என்று பொருளல்ல. சான்றாகத் தொழுநோயை ஒழிக்க வற்புறுத்தினால் தொழு நோயாளிகளை ஒழிக்கச் சொல்வதாகப் பொருளல்ல. இந்த இடத்தில் ஒன்றை நான் நினைவுகூர்கிறேன்.  குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் என அரசே கொண்டாடியது. அவ்வாறு குறிப்பிட்டால் குழந்தைத் தொழிலாளர்களையே ஒழிப்பதாகப் பொருள். நாம் அவர்களை ஒழிக்கச் சொல்லவில்லை. குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்குப் பயன்படுத்துவதைத்தான் நிறுத்தச் சொல்கிறோம்.  எனவே, குழந்தைத்தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் எனக் குறிக்க வேண்டினேன். அதனை ஏற்றுக் கொண்டு அவ்வாறே இப்போது குறிக்கிறார்கள்.

தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி தாலின், இந்த மாநாட்டின் தலைப்பைச்  ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருப்பதைப் பாராட்டிப் பேசினார். “  சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, முடக்குச்சுரம்(dengue – டெங்கு காய்ச்சல்), முறைக்காய்ச்சல்(மலேரியா – malaria), மகுடை நோய்(corona – கொரோனா) இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுகள்.” என்று பேசியுள்ளார்.

  • உதயநிதி, கொசு நோய் முதலானவற்றை ஒழிப்பு போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினால் சனாதனவாதிகளை ஒழிக்கச் சொல்வதாகப் பொருளல்ல. அவர்களைத் திருத்தி நல்வழி கொணர்வதுதான் நோக்கம். எனவே, சனாதன முறையை ஒழிக்க வேண்டும் என்றே பொருள். இதைத் திசை திருப்பிக் குளிர் காய்வது தவறாகும்.
  • த.மு.எ.சங்கத்தினர் சனாதன ஒழிப்பு மாநாடு எனக் குறித்த பின்தான் அதனை வழி மொழிந்துள்ளார். எனவே, இதனை முதலில் கூறியவர் அவர் அல்லர். சனாதன ஒழிப்பு மாநாடு எனப் பல்வகை விளம்பரங்களையும் செய்திகளையும் படிக்கும் பொழுது வராத கோபம் உதயநிதி பேசியதும் வருகின்றது என்றால் அதற்குக் காரணம் அரசியலன்றி வேறல்ல.  
  • உதயநிதி இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். உலகத்தரத்தில் விளையாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உலகப்போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் இருபால் இளைஞர்களையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார். எனவே, தேர்தல் அச்சத்தாலும் வேறு சொல்ல வழி தெரியாமலும் இதனைக் கையில் எடுத்துக் கொண்டு திரித்துக் கூறி வருகிறார்கள். சனாதனத்திற்கு எதிர்ப்பு காலங்காலமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இப்பொழுது சனாதனம் இடம் பெற்றுள்ள நூல்களுக்கும் எதிர்ப்பு வருவதால் பேரச்சம் கொண்டு பொய்மையை முரசறைந்து வருகிறார்கள். ‘இந்தியா’ கூட்டணி குறித்தும் அச்சம் வந்துள்ளதாலும் தேர்தல் நெருங்குவதாலும் சனாதன எதிர்ப்பாளர்களை எதிர்ப்பதில் கருத்து செலுத்தி வருகிறார்கள். குறைந்து வரும் தங்களின் சாதி ஆதிக்கம் மேலும் குறைந்து இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினாலும் சனாதனத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். தலைக்கு விலை பேசுவது வன்முறையைத் தூண்டிக் கொலைசெய்யச் சொல்வது. அவ்வாறு பேசியவர் மீது ஒன்றிய அரசோ பேசியவர் வாழும் மாநிலத்தின் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் குற்றச் செயலே.
  • (தொடரும்)
  • இலக்குவனார் திருவள்ளுவன்