(சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 தொடர்ச்சி)


தென்கடலில் மூழ்கிய நம்மவர்களையும் – தென்புலத்தாரையும் – பிறரையும் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் ஆரியமோ தமிழர்களையே பழிக்கிறது. அவ்வாறிருக்க இதனை எங்ஙனம் சனாதனம் என்று சொல்ல முடியும்? இப்படித்தான் ஆரியத்திற்குப் பொருந்தாத தமிழ் நெறிகளை எல்லாம் ஆரியமாகக் கூறுவது ஆரியவாதிகள் வழக்கம்.


தென்புலத்தார் என்பதற்குக் குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார், “தென் நாட்டார் என்பதே நேர் பொருளாகும். திருவள்ளுவர் காலத்தில் வடநாட்டார் தென்நாட்டில் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தென் தமிழ் நாட்டார் போற்றி வரவேற்று அவர்கட்கு வேண்டும் யாவும் அளித்தனர். தன் நாட்டவர்க்கு உதவுதல் மறுத்தும் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனைக் கண்ணுற்ற வள்ளுவர் பெருமான் தம் நாட்டவரை தென் நாட்டவரைப் போற்றுதலைத் தலையாய கடன்களில் ஒன்றாக வலியுறுத்தியுள்ளார் என்பதே சாலப் பொருத்தமாகும்.


“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர் தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியிலிருந்து வருபவரைப் போற்றத் தலைப்பட்டமை கண்டு வள்ளுவர் பெருமான் உளம் நொந்து நாட்டுப் பற்றுதலை வற்புறுத்தியுள்ளார். உலகப் பற்றுக் கொள்ளுமுன் தந்நாட்டுப் பற்றுக் கொள்ள வேண்டுமென்பது உலகப் பொதுமறை உரைத்த ஆசிரியரின் கருத்தாகும்.” என்கிறார். இவ்வாறு நம்மவரைப் போற்ற வேண்டும் என்னும் நெறி எங்ஙனம் நம்மவரை ஒதுக்கும் சனாதனம் ஆகும்?


இவ்வாறுதான் ஆரியவாதி சேக்கிழான் வேறு சில பாடல்கள் கூறும் தமிழ்நெறிகளையும் ஆரியச் சனாதனமாகத் திரிக்கிறார். பிற ஆரியவாதிகளும் இவ்வாறுதான் கூறுகின்றனர்.