76. பெண்களை உயர்வாகக் கூறுவதும் 77. சூத்திரர்களை உயர்த்திக் கூறுவதும் சனாதனம் எனப் பொய் சொல்வதா? 78. சனாதனத்தைப் பின்பற்றுவது தான் மனு என்று தொல்.திருமாவளவன் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 73-75 தொடர்ச்சி)
- சனாதனம் – பொய்யும் மெய்யும் 76-78
- ? 76. பெண்களை உயர்வாகக் கூறுவதே சனாதனம் என்கிறார்களே!
பெண்களை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ அந்த அளவிற்கு இழிவுபடுத்துவதே சனாதனம். பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதருமம் சித்தரிக்கிறது.
பெண்களுக்குத் தனி அடையாளங்களையோ தன்விருப்பிலான (சுயேச்சையான) செயல்பாடுகளையோ மனு தருமம் மறுதலிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.
பெண்கள் பாவப் பிறப்புறுப்பில் பிறந்தவர்கள் என்கிறது கீதை.
பெண், இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம் விருப்பப்படி இருக்கக் கூடாதவர் (மனு 9.3.) என்றும்
எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன் விருப்பப்படி எச்செயலும் இயற்றலாகாது. (மனு. 5.) என்றும் மனு சொல்கிறது.
கணவன் ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக (துராசாரமுள்ளவனாக) இருந்தாலும் அன்னியப் பெண்மனு பித்தனாக (வேறு பெண்களோடு பாலுறவு வைத்துக் கொள்ள துடிப்பவனாக) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனைத் தெய்வத்தைப் போல் வணங்க வேண்டும்.” (மனு 5.154)
நளாயினி அரசனின் மகள். எனினும் பெருநோய் வந்த தனது கணவன் மௌத்துகலிய முனிவரை அவர் விருப்பத்திற்காகத் தேவதாசியிடம் சேர்க்கக் கூடையில் வைத்து எடுத்துச் சென்றாள். மனுவைப் பின்பற்றினால் இப்படித்தான் நேரும்.
பிராமணர்களை மட்டுமே உயர்த்திக் கூறும் சனாதனம் பிராமணப் பெண்களைக்கூட இழிவாகத்தான் கூறுகிறது.
பெண்களை உயர்வுபடுத்தாவிட்டால்கூடப் பரவாயில்லை. பெரிதும் இழிவு படுத்துவதாகத்தானே சனாதனம் இருக்கிறது. இதனைத்தான் பெண்களை உயர்வு படுத்துவதாகச் சனாதனவாதிகள் கூறுகிறார்களா? நல்ல வேடிக்கை.
- ? 77. சனாதனம் சூத்திரர்களை உயர்த்தித்தான் கூறுவதாகத் தெரிவிக்கிறார்களே!
- அப்படியானால் எவ்வாறு உயர்த்துகிறது என்று சொல்லலாமே.
சூத்திரன் அடிமையாக இருப்பதற்கே பிறந்தவன் என்று சொல்வதுதான் உயர்த்துவதா? சூத்திரர்களைக் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். இவ்வாறு சூத்திரர்கள் உயிரைப் பறிக்கச் சொல்வதுதான் உயர்த்திக் கூறுவதா? “சூத்திரனுக்குச் சோறு போட்டால் நரகம். எவன் சிரார்த்தஞ்செய்து மிகுந்த அன்னம்(உணவு) முதலியவற்றைச் சூத்திரனுக்குப் போடுகிறானோ அந்த மூடன் காலச் சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான். (மனு , 3.249)” என்று சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றைப் போட்டால்கூடப் பாவம், நரகுலகு செல்வான் என்பதுதான் உயர்த்துவதா?
போரில் வெற்றி பெற்றுக், கொண்டு வரப்பட்டவன், பத்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.(மனு 8.415) எனச் சூத்திரனை அடிமையாகவும் தொன்று தொட்டு வேலை செய்யப்பிறந்தவன் என்று சொல்வதும்தான் உயர்த்திக் கூறுவதா?
சூத்திரன் அதிகம் பொருள் சம்பாதிக்கக் கூடாது: சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற்குத் தேவையானதை(உபயோகமானதை)விட மிகவும் அதிகப் பொருளைச் சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் தன்னாலுபசரிக்கத் தக்க பிராமணாளையே இம்சை செய்ய வேண்டிவரும் (அத்தியாயம் 10 : சுலோகம் 129). – இவ்வாறு சூத்திரன் உழைப்பதற்குக்கூடத் தடைவிதிக்கும் சனாதனம்தான் சூத்திரனை உயர்த்துகிறதா?
இந்நூலில் பல இடங்களில் சூத்திர்கள் என்று வகைப்படுத்தப்பட்டவர்கள் பற்றிய சனானதனக் கருத்துகள் உள்ளன. அவற்றைப் பாருங்கள். அப்பொழுதுதான் சனாதனம் மக்களில் ஒரு பிரிவினருக்குச் சூத்திரன் என்று பெயர் சூட்டி இழிவு படுத்துவதைப் புரிந்து கொள்ளளலாம்.
- ? 78. சனாதனத்தைப் பின்பற்றுவது தான் மனு என்று தொல்.திருமாவளவன் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே!
- பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு, தாழ்வு பார்ப்பது தான் சனாதானம். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. தீட்டு கொள்கை வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்தப் பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விசிகவின் கொள்கை. சனாதனத்தைப் பின்பற்றுவது தான் மனு. – இவ்வாறு தொல்.திருமாவளவன் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே!
- திருமாவளவன் மட்டுமல்லர். சனாதனம் குறித்து ஆராயும் நடுநிலையாளர்கள் யாவரும் இவ்வாறுதானே கூறுகிறார்கள். இந்த உண்மைக்கு எதிராக எதுவும் கூற இயலாததால் அவர் மீது எரிச்சலைக் கக்குகின்றனர். இதனை எதிர்ப்பவர்கள் சனாதனத்தை விரும்பி மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பித்துப் பயனடைய விரும்புகிறார்கள் என்றுதானே பொருள்.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
- சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 101-104
Leave a Reply