இரு மொழிக் கொள்கையால் தமிழுக்கு இழப்புகளே அதிகம்! -இலக்குவனார் திருவள்ளுவன், அறம் மின்னிதழ்

இருமொழிக் கொள்கை தமிழைக் காப்பாற்றியதா?
தேவை நமக்கு ஒரு மொழிக் கொள்கையே!
தமிழ் நாட்டில் இருமொழிக் கல்வியைப் பா.ச.க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆனால், இங்கு இருமொழிக் கொள்கையே உயிர்மூச்சு என்ற பெயரில் ஒரு மொழியான ஆங்கிலம் தான் கோலோச்சுகிறது. தமிழ் வளர்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழை அறியாத் தலைமுறைகள் உருவாகியுள்ளன. இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என அலசுகிறார், தமிழறிஞர், இலக்குவனார் திருவள்ளுவன்
1967-இல் மத்திய நாடாளுமன்றத்தில் ‘ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டம்’, 1968-இல் மும்மொழிக் கொள்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிராகத்தான் இருமொழிக்கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மொழிக்கொள்கையே தமிழ்நாட்டின் மூச்சு
“இரு மொழிக்கொள்கையே தமிழ்நாட்டின் மூச்சு” எனப் பாசக தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூறுகின்றனர். பாசவில் இருந்து ‘காலாவதிக் கொள்கை’ என்று இரு மொழிக் கொள்கைக்கு எதிராகப் பேசி வந்த-தலைமையின் இசைவுடன் கட்சிக்குக் கூடத் தமிழ்ப் பெயர் வைக்காது புதிய கட்சி தொடங்கிய-திடீர்த் தலைவரும் இப்போது இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பேசுகிறார். இரு மொழிக் கொள்கையே பெரும்பான்மை மக்களின் எண்ணமாக உள்ளதால், அதனையே கட்சித் தலைவர்கள் எதிரொலிக்கிறார்கள் எனலாம்.
பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் சனவரி -23, 1968 அன்று இருமொழிக்கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது; தொடர்ந்து சட்டமன்றத்தில் மனிதநேயச் செம்மல் எம்ஞ்சியாரால் நவம்பர் 13,1986 அன்றும், எடப்பாடி பழனிச்சாமியால் ஆகத்து 03, 2020 அன்றும் இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஆட்சியில் மு.க.தாலினும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
தற்போதைய த.வெ.க. அரசும் ஆளுநர் உரை மூலமாக இருமொழிக் கொள்கைக்கு அழுத்தமான ஆதரவைத் தெரிவித்துள்ளது. “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று தமிழக முதல்வரான ச.சோ. விசய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
‘’இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின், தவெகவின் உயிர்க் கொள்கை’’ என அமைச்சர் ஆதவு அர்ச்சுனாவும், ‘’தமிழ்நாட்டு மாணவர்களின் மரபணுவிலும் உள்ளது, மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்’’ என்று அமைச்சர் இராசுமோகனும் தெரிவித்துள்ளனர்.
மும்மொழிக் கொள்கைக்குத் தோற்றுவாயாக இருந்த கட்சியின் இன்றைய தலைவர் இராகுல் காந்தியும், மும்மொழிக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்; மொழியியல் அடையாளங்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிற தலைவர்களும் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.
காங்கிரசு கட்சியின் மற்றொரு தலைவரான ப. சிதம்பரம், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை ஏட்டளவில் மட்டுமே இல்லாமல் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதுவே உண்மையாகும்.
ஆங்கிலத்திற்கு முதன்மை சரியல்ல;
இருமொழிக் கொள்கைக்குத் தொடர்ச்சியாக ஆதரவு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், பேச்சிலும், எழுத்திலும் உள்ள ஆதரவு நடைமுறையில் இல்லை என்பது தான் பேரவலமாக உள்ளது. இதற்குக் காரணம் இருமொழிக் கொள்கை என்றால் தமிழையும் ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம் எனக் கருதி ஆங்கிலத்திற்கு முதன்மை அளிப்பது தான்.
பெரும்பாலான இணையத் தளங்கள் தமிழில் இல்லை. இரு மொழிகளில் தளம் இருப்பின் தமிழ்த் தளம் சரியாக இயங்காது. தமிழ்ப் பெயர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டுவதே வழக்கம். சான்றாக, ஆவின் எனத் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் பால் வகைகளுக்கு, ஆவின் ‘டயட்டு’, ஆவின் ‘நைசு, ஆவின் ‘கிரீன் மேசிக்கு’, ஆவின் ‘பிரீமியம்’, ஆவின் ‘டிலைட்டு’ என ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டியுள்ளனர்.
விளம்பரங்களில் பெரும்பான்மை ஆங்கிலமே அல்லது ஆங்கிலத்திற்கு தான் முதன்மை உள்ளது. கடந்த ஆட்சியில் சதுரங்க ஞாலப் போட்டியை Chess Olympiad என ஆங்கிலத்தில் விளம்பரப்படுத்தியதைக் கண்டித்த பின், வெளியிட்ட விளம்பரங்களில் தமிழைப் பயன்படுத்தினர். ஆனால், இப்போது ஆங்கில ‘ஒலிம்பியாடு’தான் இடம் பெறுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு எம்ஞ்சியார் பல்கலைக் கழகம், உயர்கல்வி நிறுவனம், அண்ணா மேலாண்மைப் பயிலகம், பாரதிதாசன் மேலாண்மைப் பயிலகம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் எல்லாம் வல்ல கல்விக் கழகம்(Almighty Educational Academy) முதலான பல நிறுவனங்களின் முத்திரைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகம், மைய மின் வேதியல் ஆராய்ச்சியகம் முதலான மத்திய நிறுவனங்களில் இந்தியும் ஆங்கிலமும் தான்; தமிழுக்கு இடமில்லை. பொதுத்துறை, உள்துறை, நிதித்துறை, வணிக வரித்துறை என எத்துறையாயினும் ஆணைகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர்.
தமிழைப் புறக்கணிக்கும் சென்னை உயர்நீதி மன்றம்
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழக அரசின் நிதி அளிப்பால் செயற்படும் சென்னை உயர்நீதி மன்றம், தமிழ்நாட்டு அரசின் ஆணைகளுக்கு எதிராகச் செயற்படுவது கொடுமையாகும். அரசு முத்திரையில் உள்ள ‘சத்தியமேவ செயதே’ என்பதை அகற்றி ‘வாய்மையே வெல்லும்’ என மாற்றிய பின்பும், சமற்கிருதத் தொடரையே பயன்படுத்துகிறது. இந்நாட்டின் தலைநகர்ப் பெயரைச் ‘சென்னை’ என முந்தைய பெயருக்கு மாற்றி ஆணை பிறப்பித்த பின்பும், தமிழ்ப்பெயரைப் புறக்கணிக்கிறது, உயர் நீதிமன்றம்..
எல்லாத் தரப்பாருக்கும் பொருந்தும்
அரசாங்க ஆணை என்பது அரசிற்கு மட்டுமல்ல. தனியார் உட்படத் தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் தரப்பாருக்கும் பொருந்தும். ஆனால், பிற அரசு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இதனைப் பொருட்படுத்தவில்லை.
“எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்!” என்பதற்கு மேலும் பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். ஆனால், இவற்றுக்கெல்லாம் காரணம் ஆங்கிலம் இன்றி வாழ்வில்லை என்ற தவறான நம்பிக்கையே.
பள்ளிகளில் இந்தி;
“பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முற்றிலும் நீக்கப்பட்டது” என்று பேரறிஞர் அண்ணா அறிவித்தார். இன்று விருப்பப்பாடம் என்ற பொய்யான பெயரில் பள்ளிகளில் இந்தி உள்ளது. “வசதி படைத்தவர்கள் இந்தியைப் படிக்கும் பொழுது ஏழை மாணாக்கர்களுக்கு இந்தி தரத் தடை ஏன்?” என தமிழ்ப் பகைவர்களும் இந்தி ஆர்வலர்களும் கேட்கின்றனர். இப்படித்தான் “ஏழை மாணாக்கர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி மறுப்பது ஏன்?” என்று கேட்டு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியைப் புகுத்தச் செய்தனர்.
இருமொழிக்கொள்கைத் தீர்மானத்தில் “தமிழகத்தில் தமிழ், பயிற்சி மொழியாகவும், பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும் ஐந்தாண்டுக் காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் கல்லூரிகளில் தமிழ்ப்பயிற்சி மொழி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைக்குக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், பள்ளிகளிலும் தமிழ் அகற்றப்பட்டு வருகிறது.
இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? இருமொழிக் கொள்கை என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளாதது தான். இக் கொள்கையின்படி நாம் தமிழையும், ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம் எனத் தவறாக எண்ணிக் கொண்டு ஆங்கிலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது போன்று இருமொழிக்கொள்கை என்றால், தமிழ்நாட்டிற்குள் எல்லா நிலைகளிலும் தமிழும் பிற மாநிலங்கள், ஒன்றிய அரசு, பிற நாடுகளுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் பயன்பாட்டு மொழியாக இருக்கும் என்பது தான். ஆனால், நாமோ தமிழைப் புறக்கணித்துவிட்டு, எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.
இலக்குவனார் குறிப்பிடும் அறம் சார்ந்த முழுக் கல்வி
தமிழ்ப் போராளி இலக்குவனார், தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றதாகத் தாம் எழுதிய ‘என் வாழ்க்கைப்போர்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாலையில் சிலம்பம், விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் தம் அகவைக்குரிய முழுமையான கல்வியைப்பெற்றார் எனலாம்.
ஆங்கிலம் 6 ஆம் வகுப்பில் இருந்து போதும்
கடந்த நூற்றாண்டுத் தொடக்கம் வரை இருந்த சிறப்பான கல்வி எங்கே போயிற்று? அறவழியில் சிறாரைக் கொண்டு செல்லும் அத்தகைய கல்வி முறை தேவை. திருக்குறள், நீதி நூல்கள் முதலியவற்றைத் தொடக்கக் கல்வியிலேயே வழங்க வேண்டும். ஆங்கிலம் 6 ஆம் வகுப்பில் இருந்து கற்பிக்கப்பட்டால் போதும்.
மும்மொழிக்கொள்கை என்பது ஏமாற்றுத் திட்டம்
ஏட்டில் இரு மொழிக் கொள்கையும், பாடத்திட்டத்தில் மும்மொழிக்கொள்கையும் நடைமுறையில் தமிழில்லா நிலையும் உள்ளன.
1968இலிருந்து கேரளா, கருநாடகா, ஆந்திர மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. ஆனால், எந்த வடமாநிலத்திலும் இம்மொழிகள் கற்பிக்கப்படவில்லை. இதற்குப் பின்னர் புதுச்சேரியிலும் மும்மொழிக்கொள்கை பயன்பாட்டில் உள்ளது. இக்கல்வியாண்டில் இந்திமொழி கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. 2023 இலிருந்து கல்லூரிகளிலும் இந்தி புகுந்து விட்டது. ஆனால், வட மாநிலங்களில் மும்மொழித்திட்டத்தின்படி தமிழ் கற்பிக்கப்படவில்லை. எனவே, மும்மொழிக்கொள்கை என்பது ஏமாற்றுத் திட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தேவை, ஒரு மொழிக்கொள்கை ஆணை!
இந்த இழிநிலை இல்லாது மறைய வேண்டும். அதற்குத் த.வெ.க.ஆட்சி புதிய ஆணையை வெளியிடவேண்டும். இதுவரை நாம் இருமொழிக்கொள்கை என்று சொல்லி, ஆங்கிலத்திற்கு முதன்மை அளித்துத் தமிழன்னையை வஞ்சித்ததற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். அதற்கு முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய் தமிழ்நாட்டின் உயிர்நாடி ஒரு மொழிக்கொள்கையே என அறிவிக்கவேண்டும். தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கும் என்றும் தெரிவிக்க வேண்டும். அப்படிச் சொன்னால் அஃது இருமொழிக் கொள்கையாகாதா என எண்ணலாம்.
தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே என்பது உயிர்க்கொள்கை. அயலவர்களுடன் ஆங்கிலம் என்பது தொடர்புமொழிக் கொள்கை. இதனைத் தெளிவுபடுத்துவதன் மூலம் ஒரு மொழிக்கொள்கை வலுப்படும்.
அன்னை நாட்டில் அன்னைத் தமிழ் மட்டுமே!
அயலவர் தொடர்பிற்கு ஆங்கிலம் போதும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்,
பேசி – 9884481652
அறம் இணைய இதழ் 18.10.2026







Leave a Reply