(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை

உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்

பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்

பிறர் உவமம் ஆகா! …

பாடற் தலைப்பு: நிறம்திகழ் பாசிழை

பதிற்றுப்பத்து 73 ; 21 அடி கொண்ட பாடலில் முதல் 3 அடிகள்

பாடிய புலவர் – அரிசில் கிழார்

பாடப்பட்ட சேரன் – பெருஞ்சேரல் இரும்பொறை

கி.மு. காலத்துப் பாடல்

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு;
வண்ணம்: ஒழுகுவண்ணம்;
தூக்கு: செந்தூக்கு.

அறிவுள்ளோர் நினைத்தாலும் அறிவில்லாதார் நினைத்தாலும் பிறருடன் உன்னை ஒப்பிட்டுச் சொல்ல இயலுமே தவிர, உனக்கு உவமமாக யாரும் ஆக மாட்டார்.

உரவோர்=அறிவாளர்; எண்ணினும்=நினைத்தாலும்; மடவோர்=அறிவு மடம்பட்டோர்; எண்ணினும்=நினைத்தாலும்; வாயின்=உவமமாகப் பொருந்துதல்; அல்லது=அல்லாது; உவமம்=உவமாக; ஆகா=ஆக மாட்டார்.

பெருஞ்சேரல் இரும்பொறையின் வெற்றிப் பெருமிதத்தையும் பண்பு நலனையும் கூறும் இப்பாடல் தொடக்கத்தில் அதன் காரணமாக பிறரால் ஒப்பிட இயலா அளவிற்குப் பெருமை உடையவன் எனத் தெரிவிக்கிறார்.

இதன் மூலம் நாமும் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்குச் சிறப்பாக வாழ வேண்டும் என்கிறார்.

அறிவில் சிறந்தவன், அன்பில் சிறந்தவன், பண்பில் உயர்ந்தவன், ஆற்றலில் சிறந்தவன், வீரத்தில் சிறந்தவன், கொடையில் உயர்ந்தவன், ஆட்சித் திறனில் மேம்பட்டவன் எனப் பலவகைகளிலும் பிறருக்கு இணையில்லாமலும் அவனைப் போன்று இவன் உள்ளான் என உவமமாகப் பிறரை இவருடன் ஒப்பிட்டுக் கூற இயலாமலும் சிறப்பான நிலையில் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

நாட்டை ஆள்வோருக்கு மட்டுமான அறிவுரை அல்ல இது. அனைவருக்குமான அறிவுரையே இது.

ஓர் அமைப்பைச் செயற்படுத்துபவன், ஒரு நிறுவனத்தை இயக்குபவன், கல்வியகத்தை வழிநடத்திச் செல்பவன், வணிகத்தில் ஈடுபடுபவன், பொதுமக்களுக்காக எதையும் தாங்கிச் செல்பவன்,

ஊராட்சி, நகராட்சி, உள்ளாட்சி முதலான அமைப்புகளைத் தலைமை தாங்கி நடத்துபவன், குடும்பத் தலைவன் என எந்த நோக்கில் பார்த்தாலும் தனக்கு உவமை இல்லாதவனாக அல்லது இல்லாதவளாக இருக்க வேண்டும்.

“உள்ளத்தனையது உயர்வு” என்கிறார் திருவள்ளுவர்.

நாம் சிறந்து விளங்க உயர்வான எண்ணம் வேண்டும்; சிறப்பான இலக்கு வேண்டும்; அதை அடைவதற்கான நல்ல முயற்சி வேண்டும்; வெற்றி கண்டு மயங்காமையும் தோல்வி கண்டு கலங்காமையும் வேண்டும்.

இவ்வாறு திகழ்ந்து எண்ணிய எண்ணியாங்கு எய்தினால் உலகில் ஒப்பிட யாருமின்றி உயர்ந்து வாழலாம். ஆளுமையில் சிறந்து விளங்கி நல்லாட்சி புரியலாம்.

நாம் இவ்வாறு திகழ ஆட்சியும் நல்லாட்சியாக இருக்க வேண்டுமல்லவா? எனவே,

ஆள்வோர் நல்லாட்சி புரிக!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தாய், 20.05.2026