அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! – ப.கண்ணன்சேகர்
அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்!
புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட
புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது!
மதுமதி கலையென மனங்களும் சுவைத்திட
மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தைத் தந்தது!
எதுகையும் மோனையும் இலக்கியத் தமிழினில்
எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றன!
பதுமையின் பாவலர் பாடிய விடுதலை
பாய்ந்திடும் அம்பென பழமையை வென்றது!
பாரதியின் தாசனே பைந்தமிழின் நேசனே
புதியதோர் உலகுசெய்ய புறப்பட்ட தமிழனே!
பேராதிக்க வெறியினை பெயர்த்தெடுத்த எழுத்தாணி
பொழிந்திட்ட காவியங்கள் புரட்சிகர அமிழ்தமே!
வேரினில் பழுத்தபலா விதவையர் எனச்சொன்ன
வாழ்வியல் கவிதைகள் வைரத்தின் மகுடமே!
பாரினில் படிக்காத பாவையர் களர்நிலமாய்
பாட்டாலே சாடியே படைதிட்டார் புதுத்தடமே!
தமிழுக்கு அமுதென தரணிக்கு உணர்த்திட்ட
தனித்துவப் பாடலே தமிழின மந்திரம்!
உமிழ்ந்திடும் மொழியெலாம் உனக்கது பெருமையா
உணர்ந்திட தமிழனை உசுப்பிய நெஞ்சுரம்!
திமிங்கல மொழியினால் தெள்தமிழ் மங்குமோ
தெளிந்திட தந்திட்டான் தனித்தமிழ் நல்வரம்!
அமிழாத அவன்புகழ் அகிலத்தில் நிலைக்குமே
அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்!
-ப.கண்ணன்சேகர், திமிரி.
பேசி- 9894976159
கவிசூரியன் குறும்பா (ஐக்கூ) இதழ்
13, வரதராசர் தெரு,
திமிரி 632512 வேலூர் மாவட்டம்
பேசி : 9698890108
Leave a Reply