அலைமகள் தந்ததைக் கலைமகளுக்குத் தந்த கலசலிங்கமே! – முனைவர் ச .சந்திரா
எளிய குடும்பத்தில் பிறந்து, ஏற்றமிகு வாழ்க்கை பெற்று, பிறரை வாழ்வில் உயர்த்தும் ஏணியாகத் திகழ்ந்தவர் தி.கலசலிங்கம் அவர்கள். 1940 இல் இந்திய விடுதலைப்போரில் சிறை சென்ற விடுதலைப்போராட்ட ஈகியர் இவர். தொடக்கத்தில்அஞ்சல்துறை, கைந்நூல்(கதர்)வாரியம் ஆகியவற்றில் பணியாற்றியவர், கட்டடப்பணிகளில் ஈடுபட்டார். இதில் பெற்ற வருமானம் கொண்டு திருவில்லிபுபத்தூரில் 1984 ஆம் ஆண்டு கலசலிங்கம் பல்தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கினார்.
பின், 1986இல் கலசலிங்கம் பொறியியல் கல்லுாரியையும், படிப்படியாக மருந்தியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலை அறிவியல் கல்லுாரி, பல்கலை கழகம், சென்னையில் ஆனந்து உயர் தொழில்நுட்பகம், ஆனந்து கட்டடக்கலைக்கல்லூரி, முதலான பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார்.
இவ்வாறு, கலசலிங்கம் கல்விக்குழுமம், சென்னை ஆனந்து கல்விக்குழுமம் ஆகியவற்றின் தலைவராகத் திகழ்ந்து, பொறியியல் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி எனப் பல கல்லூரிகளை நடத்திக் கல்விப்பணியில் சிறந்தவர்.
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள இராமச்சந்திரபுரம்(பட்டி)யில் புரட்டாசி 4, 1958 / 20.09.1927 இல் பிறந்தவர், ஆனி 29, 2045 / சூலை 13, 2014 அன்று காலமானார்.
இவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் ‘அகரமுதல’, இவர் பற்றிய முனைவர் ச.சந்திராவின் பாடல்மூலம் தன் வணக்கத்தைத் தெரிவிக்கிறது.
அலைமகள் தந்ததைக் கலைமகளுக்குத் தந்த கலசலிங்கமே!
கண்ணீர்த்துளிகளை எழுதுகோலில் இட்டு நிரப்பினோம்!
கவிதைத் துளிகளாய் உருமாறிற்று அவை!
ஒரு நூற்றாண்டில் ஓயா உழைப்பினைத் தேடினாய்!
மறு நூற்றாண்டில் மங்காப்புகழ் அடைந்தாய்!
படிப்படியாய் எட்டுவைத்தீர்! பாங்காய் வாழ்ந்தீர்!
அலைமகள்தந்த செல்வத்தினை கலைமகளுக்கு
அல்லவா கருணையுடன் வழங்கினீர்!
ஏழையர்க்கு உதவும் எட்டாவது வள்ளலானீர்!
இன்று எமக்கு எட்டாக்கனியுமாக ஆனீர்!.
ஆயிரம் பிறை கண்ட ஞானியை
அழைத்துச் செல்ல எமதருமனுக்கு
எப்படித்தான் மனம் வந்ததோ?
நதிபோல் விடாது இயங்கினீர்!
நாடறிந்த மாமனிதர் ஆனீர்!
மரணதேவனுக்கு எப்படித்தான் மனம்வந்ததோ?
மகா மனிதரைக் கொண்டு செல்ல!!
ஆசிரியர்க்கு நெம்புகோல்! நிருவகிப்பதில் செங்கோல்!
வேண்டினோர்க்கு ஊன்றுகோல்! மொத்தத்தில்
துலாக்கோலாய் இருந்தீர்! இன்று எம்மைத்
துயரக்கடலில் ஆழ்த்திச் சென்றீர்!
சொந்த மண் மீது நேசங்கொண்ட நீங்கள்
சொருக்கலோகம் செல்லத் துணிந்தீரோ?
மண்ணுலகம் விட்டு விண்ணுலகம்
புகுந்தாலும் மாறாப் புகழுடன்
முனைவர் ச .சந்திரா
தமிழ்த் துறைத் தலைவர்
கலசலிங்கம் பல்கலைக் கழகம்
கிருட்டிணன்கோவில்
Leave a Reply