இந்தியா? – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை
தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை)
தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர்
தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை)
இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி!
இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி!
என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி
இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை)
ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு
பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு
பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும்
பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை)
தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று
செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று?
மோதுறும் பதவி நிலையிலா ஒன்று;
முழங்கா ற்றங் கரைமரம் நிலைக்குமா நின்று? (தமிழை)
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்தென்பர் வித்தகர்
தீக்கனவு காண்கிறார் இந்திபற் றியவர்
தெற்குச் சூறைக்கு நிற்காது வடசுவர் (தமிழை)
மதிப்பிற்குரிய இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கட்டுரைகள் ‘தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா?’ கட்டுரைகள் வாசித்தேன். நற்கருத்துகள். நான் மதுரையில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைக் கண்டு இரசித்து வருகிறேன். தெலுங்கு மொழிப் பாடலகளைக் கேட்கும் பொழுது புரிவதில்லை. தமிழ் மொழியில், பழைய தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பாவேந்தர் பாரதிதாசன் பாடலான ‘வெண்ணிலாவும் வானும்போலே’ கல்யானம் பண்ணியும் பிரம்மச்சாரி திரைப்படத்தில் நடிகை இராகினிக்காக இராதா செயலட்சுமி அருமையாகப் பாடியிருப்பார்கள். அப்பாடலை இரண்டு மூன்று முறைகள் வேண்டிக் கொண்டதற்கிணங்க, நேற்று மதுரை பாண்டியன்ஓட்டலில் திருமதி.மகதி ‘துக்கடா’ப் பாடலாகப் பாடினார்கள். அப்பாடலை முக்கியப் பாடலாக இராக ஆலாபனை, நிரவல் என்று பாடும் நாளை எதிர்பார்க்கிறேன்.
மருத்துவர்.வ.க.கன்னியப்பன்,
கண் மருத்துவப் பேராசிரியர் (பணி நிறைவு)