thalaippu_pongalvazhthu_kanthaiya

ஆர்கலி  உலகிடை   மார்கழிப்   பெண்ணாள்

ஆடிமுடித்தாள்  பின்அவள்  அடிஎடுத்து  வைத்து

” தை தை ” என     நடைபோட்டு  தையலவள்  நடந்ததால்

தைத்திங்கள்   பிறந்ததோஅத்     தையே  தமிழ்ப்

புத்தாண்டு !   தகுமிகு  முத்தமிழ்   முன்னோர்

பத்தாயிரம்  ஆண்டாய்  பழக்கத்தில்  கைக்கொண்ட

புத்தாண்டுக்   கொள்கை  பொங்கிய  கடல்பேரழிவில்

புதைந்து  போனதை   விதந்தநம்   சான்றோர்கள்கூடி

ஆய்ந்து   ஆய்ந்து  அறுபதாண்டின்   முதலாண்டை

சிதைந்த   தமிழரிடம்   சித்திரையே  புத்தாண்டு  என்றே

விதைத்து    விட்ட நஞ்சை வேறுடன்   எடுத்தெறிந்து

புதைந்து    விட்டதைத்      திங்களேயே   புத்தாண்டேன்றார்  !

அடையாளமாக  தமிழுக்கு  உடையாளாய்; உலகில்தமிழன்

கடையாளாகக்  கூடாதுஎன   விடையாக ;   வாழ்வுக்குக்

குடையாக    திருக்குறளை   குளிர்தமிழில் எழுதிட்ட

தடையுடைக்கும்  கருத்துப்  படையலிட்ட வள்ளுவர்ஆண்டே

தமிழ்ப்       புத்தாண்டுஎன        இமிழ்கடல்    வரைப்பில்

இலங்குகின்ற   தமிழகத்தில்    துலங்கச்  செய்தார்

முத்திரை  பதித்திட்டார்       சித்திரையே     என்போர்

முகத்திரை   கிழித்திட்டார்    மூதறிஞர்   ஒன்றாகி !

ஆண்டுதோறும்  உழைத்திட்டார்   அறுத்த நெல்லை

அழகுமுற்றம்   சேர்த்திட்டார்   சேர்த்த  பின்பும்

மாண்பட்ட   தமிழ்ப்பயிரை    மண்ணில்  வளர்ப்பதே

பூண்பட்ட  செயலெனப்   பண்பட்டஅத்   தைநாளை

கண்பட்ட   பேரிடம்   களிப்புடன்  நாம்சொல்லி

விண்புகழ்   தழுவிய   வியன்தமிழை   வளர்ப்பதற்கு

பண்பட்ட   உள்ளத்துடன்   பாகான   பொங்கலிட்டு

இனிமைத்   தமிழெடுத்து   இதயம்குளிர   வாழ்த்துவோம் !

                                                 என்றும்  பாசத்துடன் 

                                                கந்தையா – செயம்,   மதுரை