இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! – மெல்பேண் செயராமர்
இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது!
கருங்கூந்தல் நிறைந்திருக்க
கன்னமதில் குழிகள்விழ
விளியிரண்டும் மீனெனவே
வெண்மைநிற முகத்தினிலே
மருண்டோடி பார்த்திருக்க
வட்டநிலா வருவதுபோல்
இடைஇருந்தும் தெரியாமல்
அவள்வருவாள் நடைபயின்று
அதைக்காண ஆவலுடன்
அன்றாடம் காத்திருப்பேன் !
பலபேர்கள் வந்தாலும்
பார்த்துவிடா என்பார்வை
இவள்மட்டும் வந்தவுடன்
எனைமீறிச் சென்றுவிடும்
நினைவெல்லாம் அவளாக
நிறைந்திருக்கும் காரணத்தால்
அவள்வருகை மட்டுமெந்தன்
அகத்தினுள்ளே புகுந்துவிடும் !
சிலவேளை அவள்பார்ப்பாள்
பலவேளை நான்பார்ப்பேன்
மின்சாரம் பாய்வதுபோல்
வேகமுள்ளே பரவிநிற்கும்
என்பார்வை அவள்பார்வை
இரண்டுமொன்றாய் இணைந்திடவே
கண்களிலே பேசியவர்கள்
கைபிடிக்க எண்ணிவிட்டோம் !
இல்லறத்தில் நாமிணைந்தோம்
இன்பவுலா சென்றுவந்தோம்
அன்புநிறை காதலொடு
அகமகிழ நாமிருந்தோம்
ஈருடலாய் இருந்தாலும்
ஓருயிரே என்றிருந்தோம்
எங்களது காதலது
இணையின்றி வளர்ந்ததுவே !
பிள்ளைகள் பிறந்தார்கள்
பேரின்பம் தந்தார்கள்
உள்ளூர நாம்மகிழ்ந்தோம்
உவகையுடன் கொஞ்சிநின்றோம்
கைநிறைய பொருள்வந்து
கண்ணியமாய் நாம்வாழ்ந்தோம்
கடவுளது அருளினால்
காதல்மேலும் வளர்ந்ததுவே !
வளர்ந்துவிட்ட பிள்ளைகளும்
இணைந்துவிட்டார் இல்லறத்தில்
முதுமை வந்துவிட்டதனால்
முடங்கிவிட்டோம் இருவருமே
தனிமையெனும் நிலையெம்மை
தவிக்கவைத்து நிற்கிறது
இனிமைதனை நினைத்தேங்கி
இருக்கின்றோம் இருவருமே !
கட்டழகுக் கருங்கூந்தல்
காந்தநிறை கண்மணிகள்
மொட்டவிழ்த்த புன்சிரிப்பு
முழுநிலவு பொலிவுமுகம்
அத்தனையும் அவளிழந்து
அயர்ந்திப்போ திருக்கின்றாள்
அவள்கோலம் தனைநினத்து
அலமந்து நானிருக்கிறேன் !
நான்ழுதால் தானழுவாள்
நான்சிரித்தால் தான்சிரிப்பாள்
தேனாகப் பேசியவள்
திக்திக்கிப் பேசுகிறாள்
மான்விழிகள் கொண்டஅவள்
மயக்கமுடன் விழிக்கின்றாள்
மயக்கம்தந்த மங்கையிப்போது
தயக்கமுடன் தவிக்கின்றாள் !
என்றாலும் அவளிடத்தில்
என்னின்பம் தெரிகிறது
தன்தோளில் எனையணைத்துத்
தான்வருடி நிற்கின்றாள்
நான்வீழ்ந்து போகாமல்
தான்வேராய் தாங்குகிறாள்
என்னுயிரைத் தன்னுயிராய்
எண்ணுகின்ற என்தலைவி !
கூன்விழுந்து விட்டாலும்
நான்விழுந்து போகாமல்
தானெழுந்து எனைத்தாங்கி
தாயெனவே நிற்கின்றாள்
என்காதல் வாழ்வினிலே
இப்போதே இனிக்கிறது
என்வாழ்வில் இன்பவுலா
இனித்தொடங்கப் போகிறது !
– மெல்பேண் செயராமர்
Leave a Reply