sithiravelu_karunanandarajah03

 

சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய்
வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ!
குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும்
சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன்.

கானமயிலாடியதைக் கண்டபொல்லாக்
கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி
மோனநடம் ஆடியதைப்போல நானும்
முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட
ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு
அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி
தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன்
செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு

காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத
கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி)
தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில்
தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்
பாரதியின் பாடல்களைக் கேட்டதாலே
பாப்புனைய முயன்றிட்ட பாமரன் என்
சீரமைதி காவாத கவிகள் கேட்டுச்
சினக்காதீர் எனவேண்டி வணங்குகின்றேன்

பண்டொரு நாள் சோழமன்னன் அவைக்களத்தில்
படித்தறியா ஒரு மூடன் வந்து நின்று
கண்டதெல்லாம் சொன்னானாம்.
கண்ட கம்பர் கருத்தறிந்து பதவிளக்கம் செய்ய மன்னன்
உண்டி, உடை, பொருளவனுக் கீந்து வாழ்த்தி
ஊருக்கு விட்டகதையறிந்து நானும்
பண்டிதர்கள் உள்ளார்கள் இங்குமென்றே

பயமின்றி வந்திட்டேன் பாப்புனைந்தே
கொண்டிடுவீர் கற்றோரே பொருளை இந்தக்
குளறுபடிக் கவிகளிலே கேலிவிட்டு
அண்டியுமை நாடிவந்த அறிலானை
அருள்புரிந்து பொருளறிந்து நலஞ்செய்தின்றே.
எண்டிசையும் செல்கின்ற இணையம் தன்னில்
ஏறி எமதன்னை தமிழ் புகழினோங்க
தொண்டினிலே ஒருப்படுவோம் தாயைக்காப்போம்
துயரொழிவாள் தமிழுயர்வாள் வெல்க மாதோ!

இன்றெமக்கு வேண்டுமிது:

கன்றினுக்குத் தாய் வேண்டும்!
கழுதை கெட்டால் ஒன்றி நிற்க மதில் வேண்டும்!
உருப்படாத என்றனுக்குத் தமிழ் வேண்டும்!
இதற்கும் மேலாயெது வேண்டும்!
அதுவொன்றே என்றும் வேண்டும்!

வானலையில் பெண்களெலாம் தமிழை முத்தல்
மதலையிலே பேசுகிறார் சிறுவர் கூட
தேனினிய தமிழோடு ஆங்கிலத்தைச்
சேர்த்தழகைக் கெடுக்கின்றார் பெரியோர் கூடத்
தான் இனிய தமிழ்விட்டு ஆங்கிலத்தில்
தனிமோகம் காட்டுகிறார் தமிழே உன்றன்
மோன நிலையேன் உடனே முன்வந்தின்று
முழுதான செந்தமிழாய் முன்போல் மாறு!

ஆங்கிலத்தைத் உன்னோடு கலந்து உன்னை
அரவாணியாக்குகிற ஈனச் செய்கை
தாங்கலையே எல்லார்க்கும் பழகிப் போச்சே
தாயே இன்றிந்த நிலை மாற வேண்டும்
ஓங்குமருள் செய்திடுக தமிழர் நாவில்
உடன்வந்து அமர்ந்திடுக எம்வாய் நின்று
தீங்கு தரும் அலிமொழியை மாற்றியென்றும்
திகட்டா உன் பேரழகாற் சிரிக்கச் செய்க.

ஆதிசிவன் பெற்றவள் நீ அகிலம் போற்ற
ஆண்டவள் நீ முன்னொருகால் அழிவேயில்லா
நாதவடிவானவள் நீ ஆன்றோர் நாவில்
நர்த்தனங்கள் செய்தவள் நீ இன்றோ உன்றன்
பாதிவடி வழிந்துலகை யாளும் வேற்றுப்
பன் மொழிகள் நின்னினுருவைப் பற்ற நீயோ
சோதியிழந்துலவுவதோ தமிழே நீ உன்
சொக்க நிலை பெறவேண்டும் து}ய்மையாகு!

அறிவியலை உள்வாங்கு கணிணியாளு
அரசியலிலாட்சிபுரி ஐநா மன்றில்
குறிவை அங் குனக்கெனவோர் கொடிபறக்க
கோலோச்சும் தமிழரசே கொள்கையாக
நெறிமுறைகள் வகுத்தந்த வழியில் நின்று
நிலமதிலே பாடுபடும் உன்றன் மைந்தர்
அறவழியில் வெற்றிபெற அருள்தா என்றன்
அன்னை தமிழ் மாதோ! இன்றிதுவே தேவை

உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்
உலகெங்கும் இன் தமிழ் நீ பரவவேண்டும்
வென்றுலக மொழியெதையும் மேவி நீயே
வீறுநடை போட்டிடுதல் வேண்டும். எங்கள்
தொன்று புகழ் இலக்கியங்கள் மக்கள் நெஞ்சம்
தொட்டுலகு தமிழின்பம் துய்க்க வேண்டும்
இன்றெமக்கு தேவை இது என்று கூறி
என் கவியை முடிக்கின்றேன். இன்பம் சூழ்க!

– சித்திரவேலு கருணானந்த இராசா

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah

காணொளிக் கவியரங்கக் கவிதை :

https://www.youtube.com/watch?v=3aU0mRTDVaQ