எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 தொடர்ச்சி)
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3
- வானில் விளங்கா மதியென முகமும்
சேலினைப் பழிக்கும் சீர்கரு விழியும்
புன்னகை தவழும் மென்செவ் விதழும்
முத்தென முறுவலும் மின்னென உருவும்
வேய்த்தோள் மீது மிடைந்து சுருண்ட
- கருங்குழல் தவழும் காட்சியும் மன்றிச்
சாதுவை வென்ற சாந்த குணமும்
அன்பும் அடக்கமும் அருளும் அறமும்
ஒருங்கே கொண்டு ஓரு வாகி
யாழினு மினிய இசையுங் கொண்ட
முற்றத் துறந்த முனிவரு மிவளை
ஒருகால் நோக்கில் உணர்விழந் திடுவரால்,
பிறர்தம் பான்மை பேசவும் வேண்டுமோ.
- எழிலின் அரசியோ டென்று முறைந்து
ஆடலன் றானுமே அன்புடன் பழகப்
பழக்க முதிர்ந்து பலநாட் செல்லுமுன்
நட்புக் கொண்டனா நட்பு முதிர்ந்து
காதலாய்க் கனிந்தது; கன்னிகை யுள்ளம்
- சென்ற வழியே யவனுஞ் சென்றனன்
பெரும்புயற் காற்றினில் பொருந்திய பஞ்சுபோல்
வளர்க்கு முடலும் மன்னிய வுழைப்பும்
தேடிய பொருளும் செய்வன யாவும்
அவள்நலத் திற்கே யழித்திடத் துணிந்தனன்
- பெருமித நிலைக்குப் பொருந்தா தாயினும்
காதலன் சிறுபொருள் களிப்புட னளித்தால்
வுவப்புடன் பெற்று உள்ள மகிழ்ந்தனள்
மூத்தோர் தரும்பொருள் எத்துணை யாயினும்
விலைவரம் பில்லன விரும்பிக் கொடுப்பிலும்
- உவப்புங் கொள்ளாள் வியப்பும் எய்தாள்
இரும்பினைக் கொண்டே யிரும்பை வெட்டும்
தன்மை போலவே தன்னுயிர்க் குயிராம்
காதற் செல்வனைக் கனிந்த அன்பினில்
வெல்லக் கருதினள் செல்வ மங்கையும்
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது
படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)
பயனுள்ள தகவல். நன்று [காண்க : TS EAMCET Result 2017 So ]