sleep-baby1

 

தகப்பன் தாலாட்டு

கண்ணுறங்கு கண்ணுறங்கு
காவியமே கண்ணுறங்கு!
களம்நின்று போராடும்
காலம்வரை கண்ணுறங்கு !

முன்னிருந்த தமிழர்நலம்
மூத்தகுடி மொழியின்வளம்
மண்ணுரிமை யாகஇங்கு
மாறும்வரை கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

முப்பாட்டன் கடல்தாண்டி
ஒர்குடையில் உலகாண்டான்
இப்போது நமக்கென்று
ஒர்நாடு இல்லையடி
திக்கெட்டும் ஆண்டமொழி
திக்கற்றுப் போனதடி
இக்கட்டைப் போக்கணும்நீ
இப்போது கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

தன்னலத்தில் தனையிழந்து
தாய்மொழியின் புகழ்மறந்து
பொன்னான தாய்நாட்டைப்
போற்றிடவும் மறந்துவிட்டு
இங்கிருக்கும் தமிழரெல்லாம்
மையிருட்டில் வாழுகின்றார்
ஈழமண்ணின் புதுவெளிச்சம்
இங்குவரும் கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

ஆண்பிள்ளை வேண்டுமென்று
அல்லாடும் மனிதரெல்லாம்
பெண்பிள்ளை பிறந்துவிட்டால்
பேதலித்து மூச்சடைப்பார்
கள்ளிப்பா லூட்டியுமைக்
கொல்லுகின்ற மூடர்நெஞ்சைக்
கொள்ளியாய் எரிக்கவந்த
கொள்கையே கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

நல்லதமிழ்ப் பெயர்ச்சூட்டி
நாளுமுன்னைச் சீராட்டி
தெள்ளுதமிழ்க் கல்வியினை
நீபடிக்கச் செய்திடுவேன்
கொல்லும்வட மொழிச்சடங்கு
இல்லையினி உன்வாழ்வில்
நல்லதமிழ்க் காவியமாய்
நான்வளர்ப்பேன் கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

நாடுவிட்டு நாடுசென்று
நாகரிகம் மாறிவந்து
வாடிநிற்கும் தாய்நாட்டை
வளஞ்செய்ய மறந்துவிட்டு
தேடுகின்ற செல்வமொன்றே
தேவையென தான்நினைக்கும்
கேடுகெட்ட ஈனர்களின்
கேடறுப்பாய்க் கண்ணுறங்கு!

(கண்ணுறங்கு)

நம்மினத்தைக் காத்திடவும்
நம்மொழியைப் போற்றிடவும்
நாளெல்லாம் போராடும்
நல்லதமிழ் நம்பியைத்தான்
நல்லறிஞர் முன்னிலையில்
நாம்மகனாய் ஏற்றிடுவோம்
நல்லதமிழ்த் திருமணத்தை
நடத்துவோம் கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

குழல்போலும் யாழ்போலும்
குழந்தைகளை நீபெறுவாய்
அமிழ்தான நற்றமிழில்
அவர்களுக்குப் பெயரிடுவாய்
பழுதான நம்வாழ்வின்
பாழ்நீக்க வந்தவளே
அமிழ்தான செந்தமிழே
அன்னையே கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

நமக்கென்று நாடுமில்லை
நாமுயர்த்தக் கொடியுமில்லை
நமக்கென்று அரசுமில்லை
நாமறைய முரசுமில்லை
தமக்கென்று வாழுகின்ற
தலைகளை வீழ்த்திவிட்டு
நமக்கென்று வாழவந்த
நல்லவளே கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

கீழ்த்திசையில் தனிஈழம்
கீழறுப்பில் வீழ்ந்ததடி
மேல்வடக்கில் நதிநீரோ
மேல்மடையில் நின்றதடி
சுற்றிச்சுற்றிப் பகைவளர்ந்து
முற்றியிங்கு நிற்குதடி
வெற்றிகொள்ளும் வீரமுடன்
விடியலே கண்ணுறங்கு!

(கண்ணுறங்கு)

தங்கத்தமிழ்த் திருநாட்டின்
தன்மானம் மீட்பதற்கு
வங்கக்கடல் பேரலையாய்
வந்தவளே கண்ணுறங்கு
சங்கறுத்த மணிவளையே!
சந்தனத்து மலைமகளே!
பொங்குதமிழ்ப் பண்ணிசையே!
பூமகளே கண்ணுறங்கு !

(கண்ணுறங்கு)

பாவலர் வையவன்
pavalar_vaiyavan01

attai_chinthanaiyaalan02

–  ‘சிந்தனையாளன்’ செப்’ 2015