கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை- தொடர்ச்சி)
பூங்கொடி
உடன் போக்கு
என்னலும், மின்னலின் இடையினள் துவண்டு
கன்னலின் மொழியாற் `கருத்துரை வெளிப்பட
உரை’எனத், தலைவன் `உடன்போக்’ கென்றனன்;
`விரைவாய்! விரைவாய்! விடுதலை பெறுவோம்; 80
மீன்,புனல் வாழ வெறுப்பதும் உண்டோ?
ஏன்உனக் கையம்? எழுவாய் தலைவா!
நின்தாள் நிழலே என்பே ரின்பம்’
என்றவள் செப்ப, இருவரும் அவ்வயின்
ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுந்தனர்; 85
தந்தையின் மானவுணர்வு
துன்றிருட் கணமெலாம் சென்றிடக் கதிரோன்
ஒளிமுகங் காட்டி உலகெலாம் விளக்கக்
களமர்தம் குலமகன் கண்விழித் தெழுவோன்
தன்மகட் காணான் தணியாச் சினமிகப்
`புன்மகள் தன்னிலும் என்குல மானம் 90
ஒன்றே பெரிதாம்’ என்றே இருந்தனன்;
பொன்னியின் செல்வன்
ஒன்றிய உணர்வால் உடன்போகக் கெழுந்தோர்
சென்றொரு சுரநகர் சேர்ந்தனர்; ஆங்கண்
—————————————————————
அவ்வயின் – அவ்விடம், துன்றிருள் – நிறைந்த இருள்.
++++++++++++++++++++++++++++++++++
வாழும் நாளில் மகப்பே றுறுங்கால்
ஆண்மக வுயிர்த்தவள் ஆவி துறந்தனள்; 95
ஊண்புசி யானாய் உழலுமவ் வில்லவன்
புரிமனை காதற் பொன்னி நல்லவட்
பிரிவினை ஆற்றான் பெற்றஅம் மகவை
உறுமக வில்லா ஒருவன் பாற்படுத்
தேகினன் வெறுத்தே; இன்னுயிர் நீத்தஅப் 100
பொன்னியின் செல்வன்இம் மீனவன், பூங்கொடி!
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Leave a Reply