(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்-தொடர்ச்சி)

          சாதி என்றொரு சொல்லினைச் சாற்றினீர்

ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ?      

          பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான்;          155

          தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது;

அழியும் நாள்தான் அணிமையில் உள்ளது;

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றோதிய

திருக்குறள் உண்மைநும் செவிப்புக விலையோ?    

          கதிரும் நிலவும் காற்றும் மழையும்         160

          எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே!

தவிர்த்தெமை நும்பாற் சாருதல் உண்டோ?

கபிலர் அகவல் கண்டதும் உண்டோ?    

காலம் அறிந்து கருத்தை மாற்றுக

          சாதிப் பெயர்சொலித் தாழ்வும் உயர்வும்        

          ஓதித் திரியின் உலகம் வெறுக்கும்;         165

—————————————————————

          குவலயம் – உலகம், கதிர் – கதிரவன்.

+++++++++++++++++++++++++++++++++

பிறப்பால் தாழ்வுரை பேசுவீ ராயின்

சிறப்பால் நீவிர் செப்புநும் முன்னையர்

மூலங் காணின் ஞாலஞ் சிரிக்கும்;

காலங் கருதிக் கருத்தினை மாற்றுமின்’;        

          தோலா நாவினன் துணிந்திவை கூறி,    170

          வேட்டங் கருதிக் காட்டகம் போகிக்

கோட்டுக் களிற்றொடு கொடும்போர் விளைத்து

மீண்ட வேங்கையின் நீண்டுயிர்ப் பெறிய,     

          மூண்ட சீற்றத்து முதியோன் கொதித்துப்       

          `பெருமறை மந்திரம் பிழைஎனப் பிதற்றும்     175

          சிறுமகன் நாத்திகன் செருக்கினைப் பாரீர்!

இன்றெனப் பேசினன் இவனைநாம் விடுத்தால்

நாளைநும் பழிக்க நாணான் நடுங்கான்

கோழை எனநமைக் கொண்டனன் போலும்;  

          தொழுதகு முன்னையர் வழிமுறை பிழைஎனப்        180

          பழுதுரை கூறிய பாவியைப் பொறுத்தீர்!

ஆத்திகப் பெரியீர்! ஆண்டவர் பழித்தனன்

ஆத்திரம் கொண்டிலீர் அஞ்சினீர் கொல்’என;

 (தொடரும்)