”காங்கிரசா தமிழைக் காத்தது?” – பாரதிதாசன்
”காங்கிரசா தமிழைக் காத்தது?”
செத்தவட மொழியினில்
செந்தமிழ் பிறந்ததென்று
பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த
கத்துநிறை காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று புகன்றனை நாணமில்லையா?
செம்பொனிகர் பைந்தமிழைத்
தேர்ந்துணரா டீ.கே.சி.யைக்
கம்பனென வேஅணைத்த கல்கியினை ஆதரித்த
வம்புமிகும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென வரைந்தனை வெட்கமில்லையா?
தாய்மொழி இலக்கணத்தைத்
தாக்கிஒரு கம்பனுயர்
தூய்கவி அலைக்கழித்துச் சொற்பிழைக்கும் டிகேசியைப்
போய்உயர்த்தும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று புகன்றனை அறிவில்லையா?
காளையர்கள் ஓதுதமிழ்க்
கல்வியையும் பெற்றறியா
மூளிகளைக், காப்பிக்கடை முண்டங்களை நல்லஎழுத்
தாளரெனும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று புகன்றனை உணர்வில்லையா?
கூறுதமிழ் சொல்லாக்கக்
குழுவினர் என்று சொல்லி
மாறுபட்ட வடசொல்லில் மாற்றுவதை ஆதரிக்கும்
வீறுதவிர் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று விள்ளுகின்றாய் மேன்மையில்லையா?
துய்யதமிழ் மறைமலை
சோமசுந்த ரம்திருவி
எய்துகலி யாணம், பல இன்தமிழ்வல் லார் இருந்தும்
நொய்களைச்சார் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று நுவன்றனை? கருத்தில்லையா?
வண்தமிழை எம்முயிரை
வடசொல்லி னால் அழிக்க
எண்ணிடுவார் தமக்கெல்லாம் ஏற்றமதைத் தேடிவந்த
திண்மையற்ற காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று செப்பலுற்றாய் செம்மை இல்லையா?
தாயகத்திற் கேவணக்கம்
என்பதைவந் தேமாதரம்,
தூயதிரு என்பதைஸ்ரீ என்றுரைக்க தோது செய்த
தீயசட்டக் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று சேப்பலுற்றாய் சீர்த்தி இல்லையா?
இந்துவெல்க என்பதனை
செய்கிந்து என்பவர்க்கும்
நந்தமிழ்ச்சொல் வணக்கத்தை நமசுகாரம் என்பவர்க்கும்
தந்தினம்சொல் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று சாற்றவந்தாய் தகவில்லையா?
கோயில்மண வாயில்களில்
கொஞ்சுதமிழ் நீக்கித்தங்கள்
தீயவட சொல்புகுத்தும் தெக்கணாமுட்டி கட்கெல்லாம்
போய்அளக்கும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று புகன்றனை கண்ணுமில்லையா?
காலமெலாம் விடுதலை
காணவுழைத் தோம்என்பவர்
ஏலுந்தமிழ் கட்டாயமாம் என்றுரைக்கக் கேட்டதில்லை
தோலைவிற்கும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று சொல்லலுற்றாய் தூய்மை யில்லையா?
தென்னிலத்தை உழவில்லை
செந்தமிழ்விதைக்கவில்லை
இந்நிலையில் இந்திஓதி நாட்டிடவும் எண்ணுகின்ற
புன்மையுறு காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்
காத்ததென்று புகன்றனை வெட்கமில்லையா?
செந்தமிழ்க்கு நின்ற உயிர்
இந்திவந்தால் நின்றுவிடும்
-பாவேந்தர் பாரதிதாசன்
Leave a Reply