குறவர் – பாவேந்தர் பாரதிதாசன்
காடைக் காரக் குறவன் வந்து
பாடப் பாடக் குறத்தி தான்
கூடக் கூடப் பாடி ஆடிக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்
சாடச் சாட ஒருபுறப் பறை
தக தக வென் றாடினாள்
போடப் போடப் புதுப் புதுக்கை
புதுப் புதுக்கண் காட்டினாள்
ஓடிச் சென்று மயிலைப் போல
ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே
மூடி மலர்க்கை திறந்து வாங்கி
முறிப்பும் முத்தமும் குறித்தனள்
தேடத்தேடக் கிடைப்ப துண்டோ
சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள்
ஈடுபட்டது நேரில் முத்தமிழ்
ஏழை மக்களின் வாழ்விலே!
Leave a Reply