தலைப்பு-செந்நெற்பொங்கல், நாக.இளங்கோவன் - thalaippu_sennelpongal_naga.ilangovan

 

 

போற்றிவளர்த்த பெருமரங்களின் கிளைகளிலே

தேனடையால் வீடுகட்டிக் கூடிவாழுந் தேனீக்கள்

குடைக்கூலியென சிந்திவிடுந் தேனொழுக,

ஒழுகுகின்ற தேனோடு போட்டியிட்டு,

பழமரமும் தன்கனியை தான்பிழிய,

தேனோடு தீங்கனிச்சாறும்

ஒட்டி வெட்டி சொட்டி  அங்கே

கட்டி தரும் கரும்பு வயலுக்கு

வாய்க்காலாய் ஓடிவிழ,

கருப்ப வயலின் அண்டையிலே,

தடஞ்சாலி நெல்லெங்கும்

தளதளவென வளர்ந்திருக்க,

அதைத்தடுக்கும் களையதனைக்

களைந்தெடுக்கும் நீலவிழி நங்கையரின்

கைச்சினத்தை கண்டஞ்சி, சாலிநெல்லுக்குக்

களையாக வளர்ந்திருந்த குவளை மலர்களெல்லாம்

ஓடி, அண்டைக்குளத்திற்குள் ஒளிந்திருந்தாலும்,

புணர்ச்சியின் உச்சத்தில் சிவந்திருக்கும் கண்கள்போலச்

சிவந்திருந்த அந்த மலர்களின் அழகில் மயங்கிய

செஞ்சாலிநெல்லும் வரப்பைத்தாண்டி,

குனிந்து, குவளையை முத்தமிட முயன்றிருக்க,

குளமிருந்த மீன்களெல்லாம்,

நிறைநிலவின் அழகையெல்லாம் அப்படியே

அணிந்திருந்த களையெடுக்கும் அப்பெண்டிரின்

கண்களிலே தம்மைக்கண்டு துள்ளியெழுந்தாலும்,

அவர்களின் எழுந்திருக்கும் முதுகழகும்

வளைந்திருக்கும் இடையழகும், மீன்களை

இடறிவிட்டுக்கொண்டேயிருக்க,

மறுபுறத்தில், வளர்ந்திருந்த பாக்கு மரத்தின்

பிஞ்சுக்குலைகளை நோக்கித், தனது

நெற்கதிரை வளைத்து தொடமுனைந்ததென்னவோ,

வளப்பத்தில்,

செஞ்சாலிநெல்லின் திமிரெனவே சொலமுடியும்!

திமிரெனவே சொலமுடியும்!

செஞ்சாலிதரு செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே!

செஞ்சாலி வளப்பெனவே வாழ்க நீவீர்!!

பிற்குறிப்பு:

வளப்பமிக்க கஞ்சாறூரில்

செஞ்சாலியின் திமிர்சொல்லும்

சேக்கிழாரின் பொன்வரிகள் மயக்கந்தருவன:

 

“கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின்  கமழ்சாறூர் கஞ்சாறூர்;”

 

“கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும்
தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள்.”

 

“செழுநெல்லின் கொழுங்கதிர்போய் வேறருகு மிடைவேலிப்
பைங்கமுகின் மிடறுரிஞ்சி மாறெழுதிண் குலைவளைப்ப;”

 

பீட்டாவும் மீத்தேனும் செஞ்சாலித்திமிர்தன்னை தீண்டாதிருக்கட்டும்.

அன்புடன்

நாக.இளங்கோவன்