thalaippu_thamizharthirunaal_kudiarasu

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே!

  உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெயில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்புகளுக்கும் பச்சை இரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற் குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்?

  இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்து வருந்திய தாய், பின் ஈன்றபோது, அவற்றின் இன்முகம் கண்டு மகிழும் மகிழ்ச்சியைக்கூட, உழவனின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்லமுடியாது. ஆம்! தாய்மை உணர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இன்பம் உண்டென்றால், அந்தத் தாய்மை உணர்ச்சி என்பது, உழவனின் தாய்மை உணர்ச்சி யின் முன்பு ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும். “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” அல்லவா? வரப் புயர்ந்தால்தான் மற்றவை உயர முடியுமல்லவா? எங்கு சுற்றியும் உழவனின் காலடியை நோக்கித்தானே இவ் வுலகம் கிடக்கின்றது. அதனால்தான் உழவனின் உள்ளப் பூரிப்பைத் தன் பூரிப்பாக, உழவனின் புது வருவாயைத் தன் புது வருவாயாக, அவன் அகத்தின் புத்துணர்ச்சியைத் தன் புத்துணர்ச்சியாகப் புறமும் அகமும் புதுமை பொலிந்து நாடு கொண்டாடிடப் பொங்கல் புதுநாள் தோன்றியிருக்கிறது – தோன்றியிருக்க வேண்டும்.

  உழவனின் பாட்டுக்கு ஒரு பெரும் துணையாய் நின்று உழைக்கும், அவனின் ஒப்பற்ற செல்வமாகிய ஆவினத்தை அவன் எப்படி மறந்துவிட முடியும்? “சாரத்தைக் கொடுத்துவிட்டுச் சக்கையை உண்டு வாழும் உன் உழைப்பல்லவா, உன்னுடைய ஒத்துழைப்பல்லவா என்னை இன்று உலகம் கொண்டாடுகிறது! உன்னை நான் மறந்தால் உய்வேனா? உனது பாட்டால் அல்லவா நான் பெருமையடைகிறேன்! ஆகவே, நான் உன்னைப் போற்றுகிறேன், உன் நன்றியை ஒருநாளும் மறவேன்” என்கிறான் உழவன் ஆவினத்தை நோக்கி. அவனுக்குப் பின்பாட்டுப் பாடுகிறது உலகம் “மாட்டுப்பொங்கல்” வைத்து, ஏன்? அவன் வழிதானே உலகம் செல்லமுடியும்?

  உழைப்போன் உறுபயன் காணும் நாள்! உலகம் மறு மலர்ச்சியடையும் நாள்! உழைப்புக்கு நன்றி செலுத்தும் பொங்கல்நாள்! சரி, இன்று உழவனின் நிலை என்ன? உழவு வேலையைச் செய்பவன், மன்னனுக்கு மன்னன் என்ற நிலைவேண்டாம். மனிதனாகவாவது மதிக்கப் படுகிறானா? மிருகத்தினிடத்துக் காட்டும் ஒரு பரிவு – விசுவாசம் – இரக்கவுணர்ச்சியைக்கூட அவனிடம் காட்டுவதற்குத் தயங்குகிறது இன்றைய உலகம். உழவுத் தொழில் செய்வோர் “சண்டாளர்கள்” என்று உறிஞ்சிப் பிழைக்கும் பார்ப்பனர்கள் எழுதி வைத்துக் கொண்டிருப்பது போல,

  இன்று எவரும் எழுதும்படியான அநாகரிகக் காட்டுமிராண்டி நிலையில் இல்லாவிட்டாலும், அதற்கு மாறாக, “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று முழங்கும்படியான நாகரிக நிலையில் இருக்கின்றார்கள் என்றாலும், உழவன் தன்னைத்தானே “சண்டாள” நிலையில் வைத்துக்கொள்ளும்படியாக அதாவது அறிவுத் துறையை அணுகும் வாய்ப்பில்லாதவனாய், அனுபவிக்கும் பண்பாடு அணுவளவும் அற்றவனாய்க் குறுகிய அளவுக்குள் குட்டையான உலகத்தில் கிடந்து உழல்பவனாய் இருந்து வருகிறான். (அவன் அப்படி இருந்து வரவேண்டியதை என்றைக்குமே முழு விழிப்பாக / சர்வ சாக்கிரதையாகப் பார்த்துக் கொள்கிறது). அதாவது, அறிவோ பொருளோ அவனை நெருங்க விடாதபடி, நெருங்கினாலும் பறிமுதல் செய்து விடும் படியாய் இருந்து வந்திருக்கிறது அவனைச் சுற்றிச் சூறை யாடும் சமுகம். இருந்தும் நயவஞ்சக நரிக்குணம் படைத்த சமுதாயம், பொங்கல் விழாவிலே பங்கு கொள்ளத்தான் செய்கிறது!)

  உழவை, உழவுத் தொழில் செய்பவனைப் போற்றும் இந்த நாள் உண்மையில் பாவனையாகச் சடங்காகப் பரம்பரைப் பழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதே தவிர, மேலும் இந்தச் செய்நன்றி நாளுக்கு மிக மிக ஆபாசமான கதைகள் வேறு பின் நாட்களில் கற்பிக்கப் பட்டு இருக்கின்றனவே தவிர வேறு என்ன?

  இன்று யார் யார் உழவுத்தொழிலைச் செய்கின்றார்களோ, சேற்றிலும் பனியிலும் கிடந்து சீரழிகின்றார்களோ அவர்களுக்கு நிலத்திலே உரிமையில்லை. ஒரு சிலருக்கு ஏதோ ஓர் அளவுக்கு உண்டு என்றாலும் அது இறங்கு முகமாக, நாளுக்குநாள் கரைந்துகொண்டுதான் வருகிறது. ஏன் இந்த நிலை? என்றைக்குமே இவர்களுக்கு நிலத்தில் உரிமையிருந்ததில்லையா? இல்லை என்று எவராவது கூற முன்வரமுடியுமா? காடு திருத்தி வயலாக்கிக் கழனியாகக் கண்டவன் – அவன் பரம்பரை – பின் சந்ததிக்கு எதனால் அந்தக்கழனியில் உரிமை இல்லாது போயிற்று? வயல் வரப்பையே மிதித்தறியாத, வாடாத மேனியருக்கு அந்தவுரிமை எப்படி வந்தது? ஏமாந்த காலத்தில் சிலர் ஏற்றங்கொண்டுவிட்டார்கள் என்றால், எப்படிச் சிலர் ஏமாற்றினார்கள், பலர் ஏமாந்தார்கள்? உரிமையற்ற உழவனுக்கு உழைப்பால் விளைந்த பெரும்பயன் எப்படி உவகையை உண்டாக்கும்? – உள்ளம் பூரிப்பால் பொங்கும்? எண்ணிப்பார்க்கும் இயல்பையுடையவன் என்றால் எரிமலையை அல்லவா அவன் உள்ளம் தோற்கடிக்கும் – தோற்கடிக்க வேண் டும்! “உழைத்தேன்! உறுபயன் கண்டேன்!!” என்று அவன் உள்ளம் ஆனந்தப்பள்ளுப் பாட முடியுமா இந்தப் பொங்கல் நாளில்?

  இன்று உழவனின் நிலை என்னவோ, அதுதான் இந்நாட்டுப் பெரும்பாலோரின் நிலை! உழவன் எதனால், எப்போது, எப்படி, ஏமாற்றப்பட்டானோ, அப்படித்தான் மற்ற பெரும்பாலோரும் ஏமாற்றப்பட்டனர்! உழவன் நிலை – உழைப்போன் நிலை என்றைக்கு உயர்வு அடையுமோ, அன்றுதான் மற்றையோரின் நிலையும் வளம்பெற முடியும்! உழவனும், அவன் நிலையிலுள்ள மற்றையோரும் இப்பொங்கல் நாளில் இதற்கு மாற்றம் காணப் பொங்கல் நாள் பயன்படட்டும்.

  இப்பொங்கல் இதழுக்கென, நம் குறைந்த கால வேண்டுகோளை ஏற்றுப் பேரன்போடு பெரியாரவர்களும் மற்றும் பல அறிஞர்களும் பல சிறந்த – தேவையான கருத்துகளைத் தந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நம் நன்றி!

‘குடிஅரசு’ – தலையங்கம் :  15.01.1949

பி.கு.:  நடையைப் பார்க்க  இதனைக் குத்தூசி குருசாமி  போன்ற யாரும் எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.  ஆனால், குடியரசு இதழில் வந்த தலையங்கம் என்பதால் பெரியாரின் கருத்தாகக் கருதுவதில் எத்தவறும் இல்லை.

ஆசிரியர், அகரமுதல.