செயற்கரிய செய்த பெரியார் – புலவர் வி.பொ.பழனிவேலன்
ஈரோட் டரிமா இணையற்ற இராம
சாமிப் பெரியார் இத்தமிழ் நாட்டில்
தோன்றா திருந்தால் தமிழர் யாவரும்
ஆரியர்க் கடிமையாய் ஆகி யிருப்போம்.
இதனில் ஐயம் ஒருசிறி தில்லை.
தமிழர் குமுகம் தன்மா னத்துடன்
தலைநிமிர்ந் துலவத் தண்ணளி செய்த
அண்ணல் ‘பெரியார்’ அன்றி வேறிலை.
துணிவும் பணிவும் தூய உள்ளமும்
நனியும் பெற்றவர் நந்தமிழ்த் தலைவர்.
செல்வச் சிறப்பும் சீர்பல பெற்றும்
சொல்லில் உரப்பும் சோர்விலா உழைப்பும்
தமிழர் நலனே தம்நல மென்றும்
பட்டி தொட்டிகள் பலவும் சென்று
தமிழர்க் குணவைத் தட்டி ஊட்டி
‘‘சூத்திரப்’’ பட்டம் தொலைத்த தோன்றல்!
இந்தி என்ற ‘மந்தி’ அரசால்
கட்டாயம் என்று புகுத்தப்பட்டதை
எதிர்த்து ஒழித்து ஏற்றம் பெற்றார்.
இருப்புப் பாதை நிலையம் தன்னில்
இந்திப் பெயரை முந்தி எழுதி
நந்தம் தமிழ்க்கு இழுக்குச் செய்த
நடுவணரசின் நச்சுச் செயலை
அடுவ னென்று அகற்றித் தமிழை
முதலிட மடைய முயன்றார் பெரியார்.
குடியரசு ‘விடுதலை’ ஆகிய ஏட்டால்
புரட்சிக் கருத்துக்கள் புகுத்திய புலமையர்
கடவுள் பெயரால் நிகழும் கேடுகள்
மதத்தின் பெயரால் மண்டிய மடமைகள்
யாவையும் நீக்க அவைகளை ஒழிக்கப்
பெரிதும் உழைக்கும் பெருந்தகைப் பெரியார்
‘திராவிட நாடா? வெங்காய நாடா?
என்று கூறி இனிய ‘தமிழ்நாடு’
அடைய உழைப்போம் அனைவரும் என்றவர்.
இன்று அக்கொள்கை ஏனோ விட்டார்?
தமிழகந் தன்னில் தக்க பேச்சாளர்
பலரை ஆக்கிக் கொள்கை பரப்பிய
கோமான் சீர்சால் ‘கொள்கைக் குன்று’,
பெரியார் என்றால் மிகையே யன்று,
புரட்சிப் பாவலர் ‘பாரதி தாசனார்’
புரட்சிப் பாக்கள் பலப்பல இயற்றிப்
பெரியார் தொண்டை எளிதாய்ச் செய்தார்.
அண்ணாத் துரையார் அவர் தம் கொள்கையை
நண்ணத் தமிழகம் நயந்துரை யாற்றினார்
புரட்சி யாளர் பலரை ஆக்கிய
பெருமை என்றும் பெரியார்க் குரித்தே!
அவரைப் போன்றோர் பலரின் னாட்டில்
பிறந்தால் தமிழகம் பெரிதும் பயனுறும்
அன்று இந்தியை அழித்த பெரியார்
இன்று அமைதியாய் இருப்பதும் ஏனோ?
அன்றியும், தமிழ்க்கும் தமிழர் நாட்டிற்கும்
நன்றி பயவாச் செயலில் ஈடு
பட்டு இறுதியில் இறங்கிய தென்னை?
அவர் வழி வந்த அனைவரும் இன்று
கொள்கை விட்டுக் குலவு கின்றனர்;
தந்நலம் பெரிதெனத் தாவு கின்றனர்;
தமிழ்நலம் தமிழர் நலங்கள் யாவும்
கருதிப் பார்க்கும் கட்சிகள் இன்றிலை
நாட்டு விடுதலை நல்ல தென் றுரைத்த
பெரியார் புரட்சிக் கருத்தைச் செயலில்
நெறிப்பட வாற்றும் நேர்மை யுடையோர்
தோன்றல் வேண்டும், தமிழகம் செழிக்க
“செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்க லாதார்” என்ற
வள்ளுவன் வழியார் ‘பெரியார்’ கொள்கைகள்
வாழ்க! நாளும் வண்டமிழ் நாட்டில்
‘பெரியார்’ போன்றோர் பல்லோர் தோன்றுக!
குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964
Leave a Reply