gnalathamizhthaay01

உறுதி   ஏற்பாய் !

அன்னையினை   இழிவுசெய்யும்   தமிழா !   வீட்டில்

            அருந்தமிழைக்   கொலைசெய்யும்   தமிழா !   நாட்டில்

உன்மொழியை   ஏளனமாய்ப்   பேசிப்   பேசி

            உயர்மொழியைத்    தாழ்வுசெய்து    கீழ்மை   யானாய்

முன்னோர்கள்   வழிவழியாய்ப்   பேணிக்   காத்த

            முத்தமிழில்   பிறமொழியின்   மாசைச்   சேர்த்து

விண்வெளியில்   ஓசோனைக்   கெடுத்த   தைப்போல்

            விளைவித்தாய்   ஊறுதனைத்   தூய்மை   நீக்கி !

வீட்டிற்குள்    புதையலினை   வைத்துக்   கொண்டு

            வீதியிலே   எச்சிலிலை    பொறுக்கு   கின்றாய்

காட்டிற்கே   எரித்தநிலா   போன்று   சங்கக்

            கவின்நூல்கள்   வீணாகக்    கிடக்கு   திங்கே

பாட்டிற்குள்   இருக்கின்ற   கருத்தைக்   கற்கும்

            பக்குவமே   இல்லாமல்   பிதற்று   கின்றாய்

கேட்டிற்கே   துணைநின்றாய்   தமிழை   மாய்க்கும்

            கெடுமதியில்   சூழ்ச்சிகளைச்   செய்யு   கின்றாய் !

உன்கரத்தில்   தமிழ்நூல்கள்   தொட்டுப்   பார்த்தே

            உண்மைதனை   அறிதற்கும்    முயன்ற   துண்டா

உன்நெஞ்சில்   தாய்தமிழின்   மேன்மை   தன்னை

            உண்மையாக   நினைத்துத்தான்   பார்த்த   துண்டா

இன்பத்தேன்   கொட்டுகின்ற   மலர்க   ளாக

            இலக்கியங்கள்   உன்னெதிரில்   இருந்த   போதும்

மின்னகின்ற   தாள்பூவைச்   சூடிக்   கொண்டு

            மிதிக்கின்றாய்    இயற்கையெழில்   பூவைக்   கிள்ளி !

அறிவியலைத்   தமிழ்மொழியில்   கற்ப   தற்கே

            ஆகாதென்   றுரைக்கின்றார்   ஆமென்   கின்றாய்

அறிவியலைத்   தொகைப்பாட்டில்   பத்துப்   பாட்டில்

            அன்றேஉன்   முன்னோர்கள்   சொல்லி   வைத்தும்

அறிவிலியாய்    அதையெடுத்துச்   சொல்வ   தற்கும்

            அறியாமல்   இருக்கின்றாய் !   எடுத்து   ரைக்கும்

அறிஞரையும்   ஏளனமாய்   ஏசு   கின்றாய்

            அறிவுபெறும்    நினைவுமின்றி   உறங்கு   கின்றாய் !

வடநாட்டார்   தலைமீது   கல்லை   ஏற்றி

            வானுயர்ந்த   இமயத்தில்   வில்பொ   றித்து

கடல்கடந்து   நாடுகளை   வென்றெ   டுத்து

            கப்பலிலே   சென்றுபல   வணிகம்   செய்து

நடனமொடு   கட்டடமாய்க்    கலையில்   ஓங்கி

            நல்லாட்சி   பண்பாட்டில்   உயர்ந்து   நின்ற

தடந்தோளின்   தமிழாஉன்   பண்டை   மாண்பை

            தரைமீது   நிலைநாட்ட   எழுக   இன்றே !

பிறநாட்டார்   வியந்துரைக்கும்    சங்க   காலப்

            பீடுதனை    இழந்தின்றோ   ஆரி   யத்தின்

கரங்களுக்குள்    முடங்கிப்போய்   மூட   ராகிக்

            கண்கெட்டே    ஆங்கிலத்தின்    அடிமை   யாகி

சிறந்திருந்த    தமிழரென்னும்    பெருமை   நீங்கிச்

            சிறப்பிழந்தே   அடையாளம்   தனையி    ழந்த

மறத்தமிழா   உன்னினத்தை    நிலைநி   றுத்த

            மாஞால    தாய்மொழிநாள்    உறுதி   ஏற்பாய் !

karumalaithamizhalan

– பாவலர் கருமலைத்தமிழாழன்

– தமிழ் நண்பர்கள் தளம்