தமிழ்மொழி – தமிழ் நூல்கள் தனிச்சிறப்பும் திருக்குறள் அறப்பெரும் சிறப்பும்
– தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ
– திருப்புகழ் இசைப்பா
1. உலக முதல்மொழி! நமது தமிழ்மொழி!
உரிமை தரு மொழி! உயர்வு பெறு மொழி!
மலரும் அறிவெழில்! பொழியும் நறுமொழி – மலைபோல
2. மணிகள் ஒளிதிகழ் அரிய அறமொழி!
மகிழப் பலகலை உணர்வுதரு மொழி!
மருவும் உயிரெலாம் பயிலவரும் மொழி! – வளம்நாடும்
3. பலநல் லறிவுளோர் பரவும் பெருமொழி!
பயனுணரும் கலை அறிஞர் புகழ்மொழி!
பரிவோ டருள்புரி பழமை(த்) தமிழ்மொழி! – பயில்வோர்கள்
4. பழைய குறை – கறை – வறுமை, மடியெலாம்!
பகரும் மணிகொடி தனிலே பொடிசெயும்
பழகி இசையுடன் உலகில் உயர்வுறப் – பயன்கூட்டும்!
5. கலைகள் எனப்படும் கலைகள் அனைத்தினும்
கலைகள் குறித்திடும் பழைய பொருளினும்
கருத்தில், எழுத்தில் கலைகள் உணர்த்திடும் – கலைத் தந்தை!
6. கடமை புரிந்திரு மடமை யகன்றிட
கயமை ஒழிந்திட கலைகள் வளர்ந்திட
கடமை யுணர்த்திடும் அரிய திருக்குறள் – நெறியோங்க!
7. தலைமை தருந்தமிழ் மொழியில் சிறந்திடும்
தமிழ ருயர்ந்திட அறிவு புகன்றிடும்
தகைமை மிகுவகம் – புறம் – சிலம்பொலி – தழைத்தோங்க
8. தகுதி – உரிமையும் தமிழர் மனைதொறும்
தவழத் தமிழ்மொழி உலகிலரண்பெறத்
தமிழரனைவரும் பணிகள் புரிகுவம், – தமிழ்ச்சான்றோர்
9. விலையில் மணிபொருள்! அரிதெனவும் புகழ்
மிகுமினிய தமிழ்க் கலைதொல் காப்பியம்
விளங்க உலகெலாம் தமிழை நாட்டுவோம் – தமிழ் வேந்தர்
10. விரிந்த உலகெலாம் பரிந்து தமிழ்தனை
விழைந்து புரந்தற அரசு புரிந்தனர்!
வியக்குமவ ரரும் செயல்கள் புரிந்துநாம் – வெல்வோமே!
Leave a Reply