நம்மாழ்வார் – திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்
சேற்று வயலில் செம்மண் நிலத்தில்
ஆற்றில் காட்டில் அணையில் மலையில்
காற்றில் தோய்ந்து களமதில் காய்ந்து
மாற்றம் வேண்டி மனம்மிக ஒன்றி
ஊரினை நாட்டினை உழைக்கும் உழவரை
பாரினை பண்டைய வாழ்வினைக் காக்க
ஏரினைத் துவக்காய் எடுத்த பெரியோய்!
ஆளும் அரசுகள் செய்யும் அழிம்புகள்
நாளும் உழவரை நாச மாக்கிடும்
கேட்டினைத் தடுக்க கீழ்த்திசை வானில்
மூட்டிய நெருப்பாய் முகிழ்த்த கதிரே!
உடையில் உணர்வில் உரிமை மீட்பில்
தடைகள் தகர்த்திடும் தன்னல மறுப்பில்
நடையால் நானிலம் நிமிர்த்தும் உழைப்பில்
திண்மை நெஞ்சில் திறனில் நீயெம்
அண்ணல் காந்தி! ஆசான் பெரியார்!
சீரினை இழந்த செந்தமிழ் உழவரை
தேரினில் ஏற்ற தெருத்தொறும் நடந்து
நாட்டில் இயற்கை வேளாண் உழவை
நாட்டின உழைத்த நம்மாழ் வாரே!
தேட்டம் வேண்டித் தீதெலாம் புரியும்
கூட்டுக் கொள்ளை கொடுங்கோல் உலகில்
மக்கள் வாழ மாநிலம் செழிக்க
சக்கர மெனவே தரைமேல் சுழன்று
தன்னையே தந்த தனிப்பெருந் தலைவ!
உன்வழி ஒழுகும் உரமுடை இளையோர்
இன்னே எழுந்தனர் எழுவாய் நீயே!
Leave a Reply