நீ வரும் திசையை நோக்கி நெடுந் தவம் செய்வோம் – உலோக நாதன்
இனியும் இனியும் நீதான்!
வல்வையின் வடிவே! தமிழர்
வாசலின் நிமிர்வே ஐயா!
சொல்லிய திசையில் சுடரும்
சூரிய தேவே! தழுவும்
மெல்லிய காற்றே! பாசம்
மேலிடும் ஊற்றே! உன்னை
அள்ளியே அணைக்க ஆசை
ஆவலோடு உள்ளோம் வாராய்!
அற்றைத்திங்கள் நீதான்!
அவ்வெண் நிலவும் நீதான்,
ஓற்றைக்காற்றும் நீதான்,
ஓண்டமிழ்க் குரலும் நீதான்,
கோற்றவைப் பிள்ளை நீதான்,
கொடியர சாள்வாய் நீதான்,
இற்றைவரைக்கும் நீதான்,
இனியும் இனியும் நீதான்!
நேற்று நீ இருந்தாய் அழகாய்
நிலவிலும் நீயே வடிவாய்
ஏற்றுமே துதித்தோம்! உன்னில்
எத்தனைக் கனவை நெய்தோம்
பேற்றிலும் பேறாய் உன்னைப்
பெற்றதே தவமாய்க் கண்டோம்
போற்றிடும் செல்வப் பேற்றே
போனநீ வருவாய் எப்போழ்து?
நீயிருந்து ஆண்ட வன்னி
நீறுபூத்திருக்கே எண்ணி!
பாய்விரித்து உறங்கா வீரம்
பாய்ந்துமே வருமோர் நேரம்
தாய் முகம் தேடும் கன்றாய்
தாகமாய் உள்ளோம்! இந்தத்
தீயரும் திசை கெட்டோடத்
திரும்பி நீ வருவாய் எப்போழ்து?
பின்னிய வலையை வென்றாய்
பீறிடும் தீயில் நின்றாய்
இன்நுயிர் சுமந்து சென்றாய்
இறுதியில் நீயெ வென்றாய்
அன்னியர் கண்ணில் மண்ணை
அண்ணா நீ தூவிச் சென்றாய்
எங்கோ நீ இருப்பாய் இருப்பாய்
இருந்து நீ எழுவாய் நெருப்பாய்!
சுற்றியே வளைத்தோம்! ஈழச்
சுதந்திரக்காற்றைக் கைகள்
பற்றியே இழுப்போம்! மிதிப்போம்
பகற்கனா கண்ட பகைவர்
வெற்றியா(ர்) பெற்றார் கோட்டை
விட்டவ ரானார்! அண்ணன்
காற்றினில் ஏறி எல்லை
கடந்துமே சென்றான்! வருவான்!
நீ இல்லா வாழ்வும் வாழ்வா
நிலவில்லா வானும் வானா
நீ இல்லை என்றால் தமிழன்
நிழலதும் மிஞ்சாதிங்கே
நீ இல்லாத் தெய்வம்! உன்னால்
நிமிர்ந்ததிவ் வையம்! நாளை
நீ வரும் திசையை நோக்கி
நெடுந் தவம் செய்வோம் வாராய்!
மலைத்தோள் அழகா வாழ்க!
மறப்புலி தலைவா வாழ்க!
வளைந்திடா வீரம் வாழ்க
வணங்கிடா ஓர்மம் வாழ்க
கலைந்திடாக் கனவும் வாழ்க
கனவதும் மெய்பட வாழ்க
நிலையென நீயே வாழ்க
நூறென அகவை காண்க!
ஒன்றென ஆவோம் – நாமும்
ஒரு கொடி சேர்வோம் – பாரில்
நன்றென நாங்கள் வாழ
நல்லதோர் தலைவன் உள்ளான்
நின்று வான் முகிலை உரசும்
நிலைமையில் இருந்தோம் நாங்கள்
இன்றிவ் நிலைக்கேன் ஆனோம்
ஒற்றுமை எமக்குள் வேண்டும்
ஆளொரு வழியில் போனால்
ஆவது ஒன்றும் இல்லை
நாளொரு முடிவில் நின்றால்
நாறவே ஓடும் உண்மை!
தோளொடு தோளாய் தமிழர்
தோழர்க ளானால் வெற்றி
ஆளுமோர் காலம் தன்னை
ஆக்குமெம் தலைவன் வாழ்க!
Leave a Reply