நெஞ்சை மெல்லும் மே பதினேழு

 eezham-genocide26

வையகம் காணா வன்கொடுந் துயர்களை

வரலாறு மறந்திடு மாமோ?

வன்னியில் அந்நாள் சிதைந்த உயிர்களின்

வலிகளைச் சொல்லிடப் போமோ?

ஒருநூறு ஆண்டுகள் அல்ல, நம்மினம்

உள்ளவரை நெஞ்சைப் பிளக்கும்

ஒன்றுக்கும் உதவாக் கரைகளாம் நம்மை

உறுதியாய் வருங்காலம் பழிக்கும்

படைகளைக் கொடுத்தான் பழிகாரன் தில்லியன்

பைந்தமிழ் மானம் கெடுத்தான்

பல்லாண்டு பல்லாண்டாய் நெஞ்சிலே சுமந்த

பழியெலாம் மொத்தமாய் முடித்தான்

தடைகளைத் தகர்த்த தமிழ்ப் புலிகளின்

தடுப்புகள் யாவுமே உடைத்தான்

சதிகாரன் மகிந்தா தன்னுயிர் நண்பனாய்த்

தமிழ்க்கேடன் அவனுக்குக் கிடைத்தான்.

எத்தனை எத்தனை நாடுகள் வஞ்சம்

எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தன

எத்தனைக் கொடும்போர் அழும்புகள்; பள்ளிகள்

மருத்துவ மனைகள் தூர்ந்தன

கொத்தின எல்லாக் கழுகுகள் சேர்ந்து

‘குஞ்ச’து செய்ததும் பழியோ?

கொலை கார நாடுகள் எல்லாம் சேர்ந்து

கூட்டினைச் சிதைத்தும் முறையோ?

ஐ.நா.வின் பொய் நா அமெரிக்கத் தீர்மானம்

அழகான அழகான ஏய்ப்பே!

அவனவன் அடுத்தவன் நாட்டைச் சுரண்ட

அருமையாய் அமைந்தநல் வாய்ப்பே!

செய்ந்நன்றி கொன்ற தமிழகத் தலைவர்கள்

செல்லாக்கா சாகுதல் எந்நாள்?

செத்துசெத் தேமாயும் தமிழீழத் தேசம்

சிலிர்த்தே மீறுதல் எந்நாள்?

–    தமிழேந்தி

eezham-genocide32பேசி : 9443432069, 9171114048

tamizhendi@yahoo.com, tamizhendi12@gmail.com