(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தொடர்ச்சி)

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8

 

தலைமை வணக்கம்

சித்தர்தம்   மறுபிறவி    ஆனை   வாரி

சிந்தனையின்    தோற்றந்தான்    ஆனை   வாரி

புத்தர்தம்    உள்ளந்தான்    ஆனை   வாரி

புதுக்கருத்தை    விதைப்பவன்தான்   ஆனை   வாரி

புத்தகங்கள்    தோழன்தான்    ஆனை   வாரி

புதுமைகளைப்    படைப்பவன்தான்   ஆனை   வாரி

முத்தமிழர்   கண்டதமிழ்    மருத்து   வத்தை

முதன்மையென    உணர்த்துபவன்    ஆனை   வாரி !

 

திருக்குறளைத்   தேசியநூல்    ஆக்கு   தற்குத்

தில்லியிலே   போராட்டம்   செய்த   வல்லோன்

அருங்குறளை   ஆங்கிலத்தில்    மொழிபெ    யர்த்தே

அதன்பெருமை   அகிலமெல்லாம்     அறிய   வைத்தோன்

அருமையாக    இக்காலக்    கவிஞர்    பாடல்

ஆங்கிலத்தில்   மொழிபெயர்த்து   நூலாய்த்    தந்தோன்

திருவாக    இந்தியிலே    மொழிபெ   யர்த்துத்

தீந்தமிழை    உயர்த்துதற்கே     முன்னே    நிற்போன் !

 

சான்றளித்து    மொழிபெயர்ப்பு   அறிஞ   ரென்று

சாகித்ய    அகாதமியின்    மதிப்பைப்    பெற்றோன்

தேன்தமிழில்   பஞ்சாபி    மராத்தி    யோடு

தெலுங்குமொழி    நூல்பெயர்த்து    வளமை   சேர்த்தோன்

வான்ஒலியில்   பலதலைப்பில்    உரைநி   கழ்த்தி

வண்டமிழ்நூல்   உட்கருத்தைத்    தெளிய    வைத்தோன்

பான்மையுடன்    தமிழ்வளர்க்கத்   திங்கள்   ஏடாம்

பல்துறையில்   கவிக்குயிலை   நடத்தும்    மேலோன் !

 

அறிவியல்நல்   வரலாறு   சிறுவர்   பாடல்

அருங்கவிதை   நாடகங்கள்   புதினம்    ஆய்வு

நெறியியலில்    கட்டுரைகள்    கதைகள்   என்றே

நிதம்படைத்துக்    குமுகத்தைத்   திருத்தும்   எழுத்தோன்

கரியமேனி     வெள்ளைமனம்   அன்பு   பேச்சு

காண்பவரை   ஈர்க்கின்ற   அறிவுக்   கண்கள்

அரிதாகக்   கிடைத்திட்ட    ஆற்ற  லாளன்

ஆனைவாரி   ஆனந்தன்   என்ற   சான்றோன் !  (  2  )

அவைவணக்கம்

தகடுர் நெல்லிக்கனியே

தமிழ் காக்கும்  வளர்ச்சி மன்ற  புரவலரே

மனோகரன் என்னும் மகரந்தமே

மணக்கும்  தமிழாலே வணங்குகிறேன்

உடன் பாடும் கவிஞர்களை

செவிமடுக்க வந்திருக்கும்

தமிழ் ஆர்வலர்களை

நெஞ்சுவந்து  வணங்குகிறேன்

 (தொடரும்)

பாவலர் கருமலைத்தமிழாழன்

9443458550

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்

சித்திரைத்திருவிழா  கவியரங்கம்

நாள்:  சித்திரை 02, 2048 / 15 -4 – 2017

தலைமை :  முனைவர் ஆனைவாரி ஆனந்தன்

தலைப்பு :  பல்துறையில் பசுந்தமிழ்