samaskritham-sanskrit

வடமொழி எதிர்ப்பு

பூசாரி கன்னக்கோல் வடமொழிக்குப்
பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழகமெல்லாம்
ஆரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார்
ஐயகோ அறிவிழந்தார் ஆளவந்தார்
பேசத்தான் முடிவதுண்டா? அஞ்சல் ஒன்று
பிறர்க்கெழுத முடிவதுண்டா அச்சொல்லாலே?
வீசாத வாளுக்குப் படைவீடொன்றா?
வெள்ளியிறை பிடிஒன்றா வெட்கக்கேடே!
வடமொழியைத் தாய்மொழிஎன் றுரைக்கும் அந்த
வஞ்சகர், தம் இல்லத்தில் பேசும் பேச்சு
வடமொழியா? பிழைப்புக்கு வாய்த்த தென்ன
வடமொழியா? கிழமைத்தாள், நாளின் ஏடு
வடமொழியா? எழுதும்நூல் பாடும் பாட்டு

வடமொழியா? நாடகங்கள் திரைப்படங்கள்
வடமொழியா? மந்திரமென்று ஏமாற்றத்தான்
வடமொழிஎன் றால்அதைத்தான் மதிப்பாருண்டோ
திரவிடரை அயலார்கள் என்பார் அந்தத்
திரவிடரை எவ்வகையிலேனும் அண்டி
உருவடையும் நிலையுடையார் பேடிமக்கள்
உவப்படைய வடமொழிக்கே, ஆளவந்தார்
பெருமக்கள் வரிப்பணத்தால் சிறப்பும் செய்தார்
பிறர் காலில் இந்நாட்டைப் படையலிட்டார்
திரவிடரோ அன்னவர்தாம்? மானமுள்ள
திரவிடரோ? மக்களோ? மாக்கள்தாமோ!

– பாவேந்தர் பாரதிதாசன்

bharathidasan01