(பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை – தொடர்ச்சி)

பூங்கொடி

பூங்கா புக்க காதை

வெருகன் நய வஞ்சகம்

நீறுறு நெற்றியன் நிகரிலாச் செல்வன்

ஏறெனப் பொலிவுறும் இளைஞன் அழகன்

காண்போர் மயங்கும் காட்சியன் உலகில்அவ்     70

ஆண்போல் ஒருவனைக் காணுதல் அரிது

பிறர்மனங் கவரப் பேசும் வன்மையன்

அறமுறு செயலே ஆற்றுவான் போல

எண்ணும் வகையில் இருப்பவன் வெருகன்

நண்ணி என்னை நயவஞ் சகமாக்

கடத்திச் சென்றான் கதறியும் பயனிலை

விடலை தமியளை  விழ்ந்திடச் செய்தனன்;

அவன்மொழி நம்பி அவன்வழிப் பட்டேன்

தவலரும் வாழ்வு தக்குமென் றிருந்தேன்

என்னலம் உண்டான் எண்ணம் முடிந்ததும்    80

உன்னிலன் அறக்கை ஒளிந்தனன் ஒடி;

செல்வமும் வேடமும் செப்பிழை மறைக்கும்,

மாசுறு கற்பை மறைப்பது யாங்ஙனம்?

யானும் உடன் செல்வேன்

இழிவும் ஏசலும் ஆடவர்க் கில்லை

பழியும் நலிவும் பாவையர் கமக்கே;      85

ஆதலின் பூங்கொடி ஆங்கவள் தனித்துப்

போதல் சரியிலை யானுடன் செல்வேன்;

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி