முள்ளிவாய்க்கால் உனக்கே சொந்தம் – கவிதை
தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய
முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா?
அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது
அனுபவித்தவர்கள் இப்போதும் அநாதைகளாய்த்தான் அந்தரிக்கிறார்கள்!!!
முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரங்களில்
ஐயோ.. அம்மா.. ஆ… என்ர பிள்ளை..
என்ர அம்மா.. என்ர அப்பா.. என்ர அண்ணா…….ஐயோ……….
நான் என்ன செய்வேன்………………………….. என்ற
அவலக்குரல்கள்தான் அதிகரித்தன அந்த நாட்களில்
அப்போது கந்தகக் குண்டுகள் அப்பாவித் தமிழர் உடல்களை
துளைத்துத் துவம்சம் செய்து சிதைத்து மமதை கொண்டன.
காரணம் அங்கே ஏவப்பட்ட குண்டுகள் அனைத்தும் இனவாதக் குண்டுகளே
அதனால்தான் தமிழ் அலறல்களைக் கேட்டதும்
அழிப்பின் வேகத்தை அதிகரித்தன.
பெற்ற குழந்தையின் வெற்று உடல்களைத் தூக்கிக் கொண்டு
உயிருக்காக மன்றாடிய தமிழ்த் தாய்மாரின் கதறலும்
தனது தாய், தந்தை குடும்பமே குண்டு பட்டு
சிதைந்து அழிந்தபோது
எஞ்சியிருந்த ஏதுமறியாப் பச்சிளம் பிஞ்சு
செங்குருதியால் தோய்ந்திருந்த அன்புத் தாயின் பிணத்தில்
பால் குடித்த கொடுமைகளையும் எப்படி மறப்பது?
குண்டு மழையும் குருதி வெள்ளமும்
அபாயக்குரல்களும் முள்ளிவாய்க்காலுக்கு சொந்தமாக அதிகரித்துச் சென்றன
ஐயோ!!! குண்டு பட்டு காயப்பட்டவனின்
புண்ணுக்குள் மீண்டும் மீண்டும் குண்டுச் சிதறல்கள் வந்து சிதைத்தன
சிதைந்த விழுப்புண்கள் சீரான மருந்து இன்றி
புழுத்து அழுகித் துடிக்க வைத்தன!
செல்கள் விழுவதற்கு இடமின்றி
மண்டையில் விழுந்து வெடித்தன சிதைத்தன!
முள்ளிவாய்க்காலில் சாவின் வாயில் அகலத் திறந்தே இருந்தது
செத்தவனின் உடலைத் தூக்கச் சென்றவர்கள் செத்தார்கள்
கொத்துக் கொத்தாகச் செத்தார்கள்
வீதிகள் தறப்பாள் வீடுகள் எங்கும்
பிணக்குவியல்கள் நிறைந்திருந்தன!
பஞ்சமும் பசியும் நிறைந்த ஊண், உறக்கம் அற்ற
நரக வாழ்க்கைதான் நிறைந்தது!
பிணக் குவியல்களுக்குள் இருந்து
குற்றுயிரும் குறை உயிருமாக தப்பியவர்கள்
நீண்ட வரிசையில் அடுக்கப்பட்டு
சிறைப்பிடிக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டு
முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள்!
நம்பி வந்த பலருக்கு நடந்த கொடுமைகளை
வார்த்தை கொண்டு சொல்லிவிட முடியாது!!!
அதில் வெளிவந்த ஒன்றுதான்
இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரம்!!!!
இன்னுமின்னும் எத்தனையோ வெளிவராமல்
வெளிச்சமின்றி இருளில்!!!
முள்ளிவாய்க்காலில் எஞ்சி
முள்வேலி முகாமில் இருந்து மீண்டவர்கள்
இப்போதும் அவலத்துக்குள்தான் அடிமையாகித் தவிக்கிறார்கள்! துடிக்கிறார்கள்!!
இந்த மக்களுக்காக என்று வந்தவர்களும்
மக்களை மறந்து பதவி ஆசைகள் பல கொண்டு
சுயநலத்தால் சுற்றுண்டு
துரோகிகளுக்கும் தமக்கும் வேறுபாடு இல்லை என்று காட்ட
கங்கணம் கட்டுகிறார்கள்!!!
2009 ஐயும் முள்ளிவாய்க்காலையும் துரோகத்தனங்களையும்
தமிழ் இனம் என்றைக்கும் மறந்துவிடாது!
மண்டியிடாது!
தமிழா நீ பட்ட துன்பம் முள்ளிவாய்க்காலுடன்
முடிந்து தொலையட்டும் என்று நினை! ஆனால்
முள்ளிவாய்க்காலுடன் உனது சரித்திரமே முடிந்து
எல்லாம் முடிந்துவிட்டது எனக் கனவிலும் நினைத்துவிடாதே!
தமிழா! முள்ளிவாய்க்கால் உனக்குத்தான் சொந்தம்
அதில் உனது உயிரும் உடலும் உறவும்தான்
கலந்து நிறைந்து இருக்கிறது
நீ அதனை மறக்க நினைத்தாலும் மறக்கமாட்டாய்!!!
http://www.lankasripoems.com/?conp=poem&poetId=194377&pidp=209594
Leave a Reply