யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8

தலைவர் வணக்கம்

நூலகராய்த்   தம்வாழ்வைத்   துவக்கி   நல்ல

நூலாக   வாழ்பவர்தாம்   மோகன   ரங்கம்

காலத்தை    வெல்கின்ற   கவிதை  நெய்து

கவின்வனப்பைத்   தமிழுக்குச்   சேர்க்கும்   பாவோன்

கோலத்தில்   எளிமையொடு   அரவ   ணைப்பில்

கோப்பெருமான்   பிசிராந்தை   நட்பின்   பண்போன்

மூலத்தொல்   காப்பியத்து   நூற்பா   போன்று

முத்தமிழைக்   காப்பவர்தாம்   ஆலந்   தூரார் !

 

கவிதையொடு   நாடகங்கள்   புதினம்   என்று

கருத்தான   படைப்புகளை   நாளும்   படைப்போன்

நவிலுமாறு   சிறுகதைகள்   குறும்பா   என்று

நாட்டோர்கள்   புகழுமாறு   படைத்த  ளிபோன்

கவிதையிலே   நாடகத்தைச்   சிறுவர்க்   காக

கனித்தமிழில்   முதன்முதலில்   வடித்த  ளித்தோன்

புவிபோற்றும்   காவியமாய்க்   கனவுப்   பூக்கள்

புனைந்துதமிழ்   அன்னைக்கு   அணியைச்  சேர்த்தோன் !

 

குறுந்தொகையின்   குழந்தையென்றே   குறும்பா   பாடிக்

குவித்திட்ட   பல்துறையின்   நூல்க   ளாலே

நறுந்தமிழோ   நன்றாக   நிமிர்ந்து   நின்று

நவில்கின்றாள்   தனிப்பெருமை   சேர்ந்த  தென்றே

பெரும்பேறு   நாம்பெற்றோம்   ஆலந்   தூரின்

பெருங்கவிஞர்   மோகனரங்கை   பெற்ற   தாலே

வருங்காலம்    இவரடியைத்   தொடர்ந்து   சென்றால்

வளமாகும்  தமிழ்மொழியே  வாழ்த்து  வேமே !

 

இரண்டாம்  உலகத் தமிழ் எழுத்தாளர்  மாநாடு

இடம் இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.

நாள்  : வைகாசி 26, 2048 /  09 06 2017

கவியரங்கம்

தலைமை   கவியரசு  ஆலந்தூர் மோகனரங்கம்

தலைப்பு யாதும் ஊரே யாவரும் கேளிர்

பாடுபவர் பாவலர் கருமலைத்தமிழாழன்