யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – தொடர்ச்சி)
யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8
பலமொழிகள் பேசினாலும் அன்பு என்னும்
பாலத்தால் ஒருங்கிணைந்தே வாழ்வார் அங்கே
கலக்கின்ற கருத்தாலே மொழிக ளுக்குள்
காழ்ப்புகளும் உயர்வுதாழ்வு இருக்கா தங்கே
இலக்கியங்கள் மொழிமாற்றம் செய்தே தங்கள்
இலக்கியமாய்ப் போற்றிடுவர் ! கணினி மூலம்
பலரிடத்தும் பலமொழியில் பேசு கின்ற
பயனாலே மொழிச்சண்டை இல்லை அங்கே !
நாடுகளுக் கிடையெந்த தடையு மில்லை
நாடுசெல்ல அனுமதியும் தேவை யில்லை
நாடுகளுக் கிடையெந்த பகையு மில்லை
நட்பாலே உதவுதற்கும் எல்லை யில்லை
வாடுகின்றார் ஒருநாட்டு மக்க ளென்றால்
வளநாடு கரங்கொடுத்தே காத்து நிற்கும்
பாடுபட்ட பலனெல்லாம் அனைவ ருக்கும்
பகிர்ந்தளித்தே வாழ்ந்திடுவர் பொதுமை என்றே !
(தொடரும்)
இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
இடம் – இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.
நாள் : வைகாசி 26, 2048 / 09 – 06 – 2017
கவியரங்கம்
தலைமை – கவியரசு ஆலந்தூர் மோகனரங்கம்
தலைப்பு – யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாடுபவர் – பாவலர் கருமலைத்தமிழாழன்
Leave a Reply