வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! – இளங்குமரனார்க்கு வாழ்த்து : மறைமலை இலக்குவனார்
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே!
அகவை தொண்ணூறு நிறைந்த ஆசான்
இளங்குமரனார்க்கு அகங்கனிந்த வாழ்த்து
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே!
புலவர்மணி,முதுமுனைவர் இளங்குமரனார்க்கு வாழ்த்து
(பிறந்த நாள் தை 17, 1958 / சனவரி 30, 1927)
பளிங்கெனத் துளங்கிடும் பண்புசால் உள்ளம்;
உளங்கவர் முறுவல் விளங்கிடும் திருமுகம்;
தமிழ்நலன் காத்தல் தம்கடன் என்றே
தளரா துழைத்திடும் தறுகண் உறைவிடம்;
மறைமலை யார்போல் நிறைவுறு புலமை;
பாவாணர் நெறியில் ஓய்விலா ஆய்வு;
இலக்குவர் வழியில் இயங்கிடும் தமிழ்மறம்;
இனம்,மொழி பேணிட இன்றமிழ் மக்களை
எழுச்சி கொளச்செய உலகெலாம் பயணம்;
ஆய்வுச் செல்வத்தை அனைவரும் துய்த்திட
நூல்பல இயற்றிடும் நுண்மாண் நுழைபுலம்;
மாணவர் தம்மை மதிப்புடன் போற்றி
ஆற்றுப் படுத்திடும் எங்கள் ஆசான்;
இளங்குமரனார் பெருமை இயம்பிட
இயலுமோ எம்மால் இயம்பிடுவீரே!
பகுப்பாய் வுநோக்கில் இவர்பரி மேலழகர்;
நூல்நலன் நுவல்வதில் நச்சினார்க் கினியர்;
அருங்கலை அறிவில் அடியார்க்கு நல்லார்;
தெளிவுறப் புகல்வதில் தெய்வச் சிலையார்;
மேடை மேவிடும் மென்றமிழ்த் தென்றல்;
தமிழ்ப்பகை சாடிடும் நக்கீர நெருப்பு;
மூச்சும் பேச்சும் தமிழெனக் கொண்டு
எண்ணும் எழுத்தும் தமிழ்க்கென ஆக்கி
எமக்குத் தலைவராய் இலங்கிடும் அறிஞரே!
கொள்கை இமயமே! பல்கலைக் கொண்டலே!
அறிவுக் கடலே! அருங்குணப் பொதியிலே!
பல்லாண்டு பல்லாண்டு பாடி வணங்கினோம்!
பண்புளோர் சொல்லாய் பாவலர் பொருளாய்
வள்ளுவன் மறையாய் காப்பியன் நூலாய்
உலகெலாம் போற்றிட வாழி! ஊழி!
வாழ்த்தி மகிழ்கிறோம்! வணங்கிப் புகழ்கிறோம்!
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே!
மறைமலை இலக்குவனார்
52/3சௌந்தரியா குடியிருப்பு,
அண்ணாநகர் மேற்கு,சென்னை-600 101.
Leave a Reply