தலைப்பு-என்பா, க.தமிழமல்லன் : thalaippu_en_paa_thamizhamallan

என் பா !

இயற்றுகின்ற என்பாக்கள்

எதுகை மோனை

இயல்பாக அமைந்திருக்கும்

இன்பப் பாக்கள்!

வயல்வெளியில் விளைந்திருக்கும்

பயிரைப் போல,

வலிமைதரும் வளமைதரும்

படிப்போர்க் கெல்லாம்!

குயவன்செய் பாண்டமல்ல

கருக்கா வெள்ளி!

குடங்குடமாய்த் தங்கத்தை

உருக்கி வார்த்த

உயர்அணிகள் எனும்வைரம்

பதித்த பாக்கள்!

உயர்எண்ணம் அழகாக

ஒளிரும் பாக்கள்!

குமுகாய மீட்சிகளைக்

கூறும் பாக்கள்,

கொடியோரின் தீப்போக்கைக்

குட்டும் பாக்கள்!

அமுங்கிவரும் அடித்தட்டு

மக்கள் நன்மை

அடைதற்கு முழக்கமிடும்

அன்பு வெள்ளம்!

உமிமூட்டை அடுக்கிவைத்தே

அரிசி என்பார்!

உதவாத சொல்லடுக்கிப்

பாக்கள் என்பார்!

தமிழ்க்கொலையைச் செய்வதையே

பணிகள் என்பார்!

தவறான அக்கொடுமை

தள்ளும் பாக்கள்!

உள்ளத்தை ஈர்க்கின்ற

ஆற்றல், தீமை

உடைக்கின்ற பாடுபொருள்!

யாப்பிற் சீர்மை

வெள்ளம்போல் நடந்தோடும்

புரட்சிப் பாக்கள்!

வெல்லாத மக்களுக்கும்

பரிசாய் வெற்றி

அள்ளித்தான் வழங்குகின்ற

அருமைப் பாக்கள்!

குள்ளங்கள் தனித்தமிழைக்

குற்றஞ் சொல்லும்!

குறைமதியார் தெளிவடைய

உதவும் பாக்கள்!

கொள்கைவளம்,சொற்றுாய்மை

அளையும் பாகு!

நம்மொழிக்கு நன்கொடையாய்

நான்ப டைத்த

நலப்பாக்கள், யாப்பறிஞர்

போற்றும் தங்கம்!

செம்மொழிக்குப் பின்னாளில்

பாவி யங்கள்

சேர்த்தளிக்கும் வரலாறே

என்றன் பாக்கள்!

அம்மாவின் தாய்ப்பாலாய்த்

துாய்மை யான,

அன்பருளைப் பொதிந்தபாக்கள்!

என்றும் நல்லோர்

தம்மாய்வால் மதிப்புரைக்கும்

அழகுப் பூக்கள்!

தமிழமல்லன் பாவெல்லாம்

தடம்ப திக்கும்!

முனைவர் க.தமிழமல்லன்