தலைப்பு-அருட்பெருஞ்சோதி : thalaippu_arutperunchothi

முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே!

சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன்

            சாத்திரக் குப்பையுந் தணந்தேன்

நீதியும் நிலையுஞ் சத்தியப் பொருளும்

            நித்திய வாழ்க்கையுஞ் சுகமும்

ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்

            அருட்பெருஞ் சோதியென் றறிந்தேன்

ஓதிய அனைத்தும் நீயறிந் ததுதான்

            உரைப்பதென் னடிக்கடி யுனக்கே

குலத்திலே சமயக் குழியிலே நரகக்

            குழியிலே குமைந்துவீண் பொழுது

நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து

            நிற்கின்றார் நிற்கநா னுவந்து

வலத்திலே நினது வசத்திலே நின்றேன்

            மகிழ்ந்துநீ யென்னுள மெனும் அம்

பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்

            பண்ணிய தவம்பலித் ததுவே!

இராமலிங்க வள்ளலார்