(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12 தொடர்ச்சி)

 

திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14

பதின்மூன்றாம் பாசுரம்
புலவரின் முதற்சொல்லும் தமிழ்த்தாயின் பாடலும்
வெண்டளைச் சொற்களையே வெண்பாவிற் பூட்டுதலான்
கொண்டமுதற் சீரே புலவோர்க் குரிமையதாம்!
பண்டு புனைந்தோர் படைத்தார் முதற்சொல்லே;
வண்டமிழ்த்தாய் யாத்து வடித்தாள்காண் பாடலெலாம் !
தண்டை யணிந்து தளிர்க்கொடியாள் ஆடுகிறாள் ;
வண்டிசை மேவ மயங்கிடவே பாடுகிறாள் ;
கண்திறப்பாய், கோதாய்! கடைதிறப்பாய் ;சொல்,முதற்சொல்;
கொண்டேத்தும் பாடலொன்று தாய்தருவாள் எம்பாவாய் !

 

பதினான்காம் பாசுரம்
தமிழ் கேளாமல் உயிர்வாழாமை

நன்றுஇது நன்றல்ல என்றே உணர்த்துமொளி
மன்றில் இலாதெனினும் நெஞ்சம் கலங்காதே !
ஒன்றிடும் நல்லிசைதான் உள்ளம்  விழைவதுபோல்
என்றும் ஒலியா திருந்தும் மனம்வருந்தா !
தின்னும் அறுசுவையில் ஒன்றே குறைந்தாலும்
தின்னஉண வில்லையானும் சிந்தை தடுமாறா !
என்னே தமிழ்கேளா தென்னாவி நீங்குமால்
முன்னே புனலாடிப் பாவிசைப்பாய் எம்பாவாய் !

கவிஞர் வேணு குணசேகரன்

– கவிஞர் வேணு குணசேகரன்

(தொடரும்)