இளந்தமிழனுக்கு நாமக்கல் கவிஞர் வேண்டுகோள் : ilanthamizhan-naamakkal-kavignar

1,2/6

இளந்தமிழனுக்கு

இளந்த மிழா! உன்னைக் காண
இன்ப மிகவும் பெருகுது!
இதுவ ரைக்கும் எனக்கிருந்த
துன்பம் சற்றுக் குறையுது!
வளந்தி கழ்ந்த வடிவி னோடும்
வலிமை பேசி வந்தனை.
வறுமை மிக்க அடிமை நிற்கு
வந்த ஊக்கம் கண்டுநான்
தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத்
தைரி யங்கொண் டேனடா!
தமிழர் நாட்டின் மேன்மை மீளத்
தக்க காலம் வந்ததோ!
குளிர்ந்த என்றன் உள்ளம் போலக்
குறைவி லாது நின்றுநீ
குற்ற மற்ற சேவை செய்து
கொற்ற மோங்கி வாழ்குவாய்!       1

பண்டி ருந்தார் சேர சோழ
பாண்டி மன்னர் நினைவெலாம்
பாயுமேடா உன்னை யின்று
பார்க்கும் போது நெஞ்சினில்!
கொண்ட கொள்கை அறம்வி டாமல்
உயிர்கொ டுத்த வீரர்கள்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த
கதைகள் வந்து குத்துமே!
மண்ட லத்தே இணையி லாத
வாழ்வு கண்ட தமிழகம்
மகிமை கெட்டே அடிமைப் பட்டு
மதிம யங்கி நிற்பதேன்?
செண்டெ ழுந்தா லென்னப் பாய்ந்து
தேச முற்றும் சுற்றிநீ
தீர வீரம் நம்முள் மீளச்
சேரு மாறு சேவைசெய்.       2

(தொடரும்)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை