(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை-தொடர்ச்சி)

          தங்கத் தேவன் தகவல் அறிந்ததும்

`எங்குஅத் தீயவன் ஏகினும் ஓயேன்;       

          யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக்         180

          கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம்;    

—————————————————————

          கட்படு – கண்ணில்படும், செகுத்து – அழித்து, முனம் – முன்பு.

++

உளறித் திரியுமவ் வுலுத்தன் தலைதனைக்

கொய்தமை வேன்’எனக் கூறி முடிக்கக்

கைதவன் ஏம கானன் கயவனும்  

          `நிற்பகை கொண்டோர் நெடுநாட் பிழையார் 185

          சொற்பகை கொள்ளத் துணிந்தனன்; நின்னைச்

சிங்கத் தேவனெனச் செப்பக் கேட்டுளேன்;

தங்கத் தேவ! தயங்கேல் வினைமுடி’

எனமுடி போட்டவன் ஏகினன்; இப்பால் 

          ஊர்தொறும் ஊர்தொறும் உழைத்துவரு மீனவன்    190

          போர்மிகப் பெற்றனன்; பின்பொரு நகரில்

காரிருள் இரவிடைக் கண்ணயர்ந் திருந்துழி,

சூரியுட் கையினர் துணிமறை முகத்தினர்

ஈரிரு மாக்கள் இருள்நிறை மனத்தினர் 

          மானவன் மீனவன் மார்பிடை அந்தோ!  195

          ஈனவர் செயலினை எவ்வணம் இயம்புவல்!

குருதிக் காட்டிற் குப்புறக் கிடந்தவன்

பெறலருஞ் சுவடியைப் பேணிக் கலைமகள்

நிலையஞ் சேர்க்கப் பணித்தபின் நெட்டுயிர் 

          கலைமலி தமிழுக் காக்கிக் களித்தனன்;         200

அடிகள் இசை பரப்பப் பணித்தல்

          அப்பெருஞ் சுவடி! ஆயிழை நல்லாய்!

தப்பரும் வீரன் தன்கையில் வாளென

நின்பால் உற்றது, நீஇதைப் பரப்பி

அன்பால் வெல்’கென அடிகள் நவில்      

          நன்றெனப் புகன்று நங்கைஏ கினளே.   205

—————————————————————

          கைதவன் – கயவன், சூரி – கைக்கத்தி, தப்பரும் – குறிதவறாத.

+++

(தொடரும்)