(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26  தொடர்ச்சி)

இராவண காவியம்

  1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம்

அறுசீர் விருத்தம்

           1.     குறிஞ்சியி லிருந்து முல்லை குறுகிப்பின் மருத நண்ணித்

                 திறஞ்செறி வடைந்த பின்னர்த் திரைகடல் நெய்தல் மேவி

                 மறஞ்சிறந் தயனா டேகி வணிகத்தாற் பொருணன் கீட்டி

                 அறம்பொரு ளின்ப முற்றி யழகொடு வாழுங் காலை;

           2.     தங்களுக் குள்ளே தங்கள் தலைவரைத் தேர்ந்தெ டுத்தாங்

                 கங்கவ ராணைக் குட்பட் டச்சமொன் றின்றி யன்னார்

                 தங்கடந் தொழிலைச் செய்து தகுதியாற் றாழ்வி லாது

                 மங்கலம் பொருந்த வாழ்ந்து வந்தன ரினிது மாதோ.

           3.     மழைவளக் குறிஞ்சி வாழ்ந்து வந்தகா னவர்கள் தம்முன்

                 விழைதகு தலைவன் செய்ய மேனியாற் சேயோ னென்னும்

                 அழகுறு பெயரைத் தாங்கி யரசுவீற் றிருந்தா னன்னோன்

                 வழிவழி வந்தோர்க் கெல்லாம் வழங்கின தப்பேர் தானே.

           4.     மாலையில் மலரு முல்லை மாலையை யணியு முல்லைக்

                 காலியின் வளங்கண் டுண்டு களித்திடும் பொதுவர் தங்கள்

                 மேலைய தலைவன் காரின் விளங்கியே மாயோன் என்னும்

                 மாலைய பெயர்பூண் டானவ் வழியரு மப்பேர் பூண்டார்.

5.     காலையும் பெயனீர் வேவுங் கடுமுது வெயிலாற் றீய்ந்து

                 கோலிய குறிஞ்சி முல்லைக் கொழுவளம் பிரிந்த தான

                 பாலையைத் தனியே காக்கும் பழந்தமிழ்த் தலைவ ரின்றி

                 மேலைய தலைவர் காப்பின் மேவியே யிருந்த தம்மா.

+++        

   4. காலி – ஆக்கள். மாலைய – தன்மைய.

+++

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை