(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 34 தொடர்ச்சி)

 

குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி

அச்சகத்தில் வலது பக்கம் ஓர் உணவுவிடுதி, இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறு சந்து உண்டு. கொல்லைப்பக்கத்தில் உணவுவிடுதிக்கும் அச்சகத்துக்கும் பொதுவாக ஏழெட்டுத் தென்னை மரங்களோடு கூடிய ஒரு காலிமனை இருந்தது. உணவுவிடுதியின் கழிவு நீரும், அச்சகத்துக் கிழிசல் காகிதக் குப்பைகளுமாக அந்தப் பகுதி கால் வைத்து நடக்க முடியாத இடமாக இருக்கும். தினசரி காலையில் சந்து வழியாக வந்து குப்பை வாரிக்கொண்டு போகிற தோட்டியைத் தவிர அந்த இடத்தில் நுழைகிற துணிவு வேறு யாருக்கும் இருக்க முடியாது. அச்சகத்தின் பின் பக்கத்துச் சுவர் அவ்வளவாகப் பாதுகாப்பானதில்லை. பழைய சுவர் என்ற குறை மட்டுமில்லை, அதிக உயரமில்லை என்ற குறையும் கொண்டது. பின்பக்கத்துத் தாழ்வாரத்தில் தான் விசாலமான இடம். தைத்தல், கட்டிடல்(பைண்டிங்கு) போன்ற வேலைகளுக்கு வசதியாகப் புத்தகத்துக்கென்று அச்சாகிய ‘பாரங்கள்‘ அங்கேதான் அடுக்கப்பட்டிருந்தன. கொல்லைக் கதவுக்கு அடுத்தாற்போல் உள்பக்கம் மல்லிகை, அந்திமந்தாரைச் செடிகள் அடங்கிய ஒரு சிறு நிலப்பகுதி உண்டு. இந்த இடத்துக்கு அடுத்து உள்பகுதிதான் அச்சு யந்திரங்களும், கட்டிடல்(பைண்டிங்கு) பகுதியும் அடங்கிய பரந்த தாழ்வாரம். இவ்விடத்தை நம்பிக்கையின் பேரில் காவல் பயமில்லாமல் வைத்திருந்தார் மீனாட்சிசுந்தரம்.

பக்கத்து உணவுவிடுதி வேலை நாட்களில் இரவு பன்னிரண்டு மணியானாலும் மாவரைக்கிற ‘கடமுட’ ஒலியும் பாத்திரம் கழுவுகிற ஓசையுமாகக் கொல்லைப்பக்கம் கலகலப்பாயிருக்கும். மறுநாள் உணவுவிடுதிக்கு வாராந்திர விடுமுறையாதலால் அன்று அந்தக் கலகலப்பு இல்லை. அரவிந்தன் தயங்கிக் கொண்டு நிற்கவில்லை. வாசற்கதவை உள்பக்கமாகத் தாழிட்டுவிட்டுக் கொல்லை பக்கம் விரைந்தான். நீண்ட வீடு அது. போகும்போதே ஒவ்வொரு பகுதிக்கும் உரிய மின் விளக்கைப் போட்டுக் கொண்டு போனான். அந்த அச்சகத்தில் இரவு நேரங்களில் தனியாக இருக்கிறபோது இப்படி ஓர் அனுபவம் இதுவரையில் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இன்று ஏற்படுகிறது. முதன்முதலாக ஏற்படுகிறது.

அவன் கடைசி விளக்கைப் போட்டுவிட்டுச் செடிகள் இருந்த பக்கம் நுழைந்தபோது மல்லிகைச் செடிகளின் ஓரமாகப் பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்த ஆள் ஒருவன் திடுமென விளக்கு ஒளி பாய்வதையும் யாரோ வருவதையும் உணர்ந்து திரும்பி ஓடிச் சுவரில் ஏறிவிட்டான். “யாரது?” என்று பெருங்குரலில் இரைந்து கொண்டு விரைந்தான் அரவிந்தன். சுவருக்கு மேல் விளிம்பிலிருந்து ஒரு பழைய செங்கல் சரிந்து அரவிந்தனின் கால் கட்டை விரலில் விழுந்ததுதான் மீதம். ஆள் அகப்படவில்லை. இன்னாரெனக் கண்டுகொள்ளவும் முடியவில்லை. பின்புறம் குதித்து ஓடும் ஒலி கேட்டது. அவன் சுவர் ஏறின இடத்தில் கீழே மல்லிகைச் செடியின் அருகில் மண்ணெண்ணெயில் முக்கிய ஒரு துணிச்சுருளும் தீப்பெட்டியும் கிடப்பதைக் கண்டான் அரவிந்தன். வந்தவன் என்ன காரியத்துக்காக வந்திருக்க வேண்டுமென்று அதைக் கண்டபோதுதான் அவன் உணர்ந்தான். கொல்லையில் அந்த ஓசை கேட்டதும் வந்து பார்க்காமல் தான் இன்னும் சிறிது நாழிகைப்போது அலட்சியமாக இருந்திருந்தால் தாழ்வாரத்தில் அச்சிட்டு அடுக்கியிருக்கும் பேராசிரியரது நூற்பகுதிகளின் சாம்பலைத்தான் காண முடியும் என்ற பயங்கர உண்மை அவனுக்குப் புரிந்தது. இந்தவிதமான எதிர்ப்புகளும் பகைகளும் மீனாட்சி அச்சகத்துக்கும் அவனுக்கும் இப்போதுதான் முதன் முதலில் ஏற்படத் தொடங்குகிற புதிய அனுபவங்கள்.

பின்புறம் அந்த இருளில் கொல்லைப் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு துரத்த முடியாதென்று பட்டது அவனுக்கு. கதவுக்கு அப்பால் தரையில் கால் வைக்க முடியாத ஆபாசம்! வந்தவன் எல்லா ஆபாசங்களுக்கும் துணிந்துதான் வந்திருக்க வேண்டும். வாசல் பக்கம் ஓடி உணவுவிடுதியில் யாரையாவது எழுப்பித் துணைக்குக் கூட்டிக்கொண்டு சந்து வழியாகப் போய்த் தேடிப் பார்க்கலாமா என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. அச்சகத்துக் கதவை அடைத்துப் பூட்டிக்கொண்டு உணவுவிடுதியில் ஆளை எழுப்பிப் போய்த் தேடுவதற்குள் காலம் கடந்த முயற்சியாகி விடும். ‘முருகானந்தம் வரட்டும் அவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு இரவு இங்கேயே தாழ்வாரத்தில் படுக்கலாம்’ என்று துரத்தும் முயற்சியைக் கைவிட்டான் அவன். எவ்வளவுதான் துணிவு உள்ளவனாயிருந்தாலும் மனத்தில் இனம் புரியாத பயம் எழுந்தது. நடக்க இருந்ததை நினைத்துப் பார்த்தபோது உடல் நடுங்கியது. வந்தவனுடைய விருப்பம் நிறைவேறியிருந்தால் எவ்வளவு பேரிழப்பு ஆகியிருக்கும்? இத்தனை நாட்கள் அரும்பாடுபட்டு அச்சிட்ட நூல்களெல்லாம் அழிந்திருக்குமே.

வாயிற்புறக் கதவு தட்டப்பட்டது. விளக்குகளை அணைக்காமல் முன்புறம் வந்து கதவைத் திறந்தான் அரவிந்தன். முருகானந்தம் திரும்பியிருந்தான்.

“சுத்த காலிப்பையன். மங்கம்மாள் சத்திரத்துக்குப் பின் பக்கம் தெருவிளக்கின் அடியில் மூணு சீட்டு விளையாடப் போய்விட்டான். நீ ஒன்றும் சொல்லவில்லையே என்றுதான் பேசாமல் பார்த்துக் கொண்டு வந்தேன். இல்லாவிட்டால் முதுகில் பலமாக நாலு அறை வைத்து இங்கே இழுத்து வந்திருப்பேன். சிறு வயதிலேயே விடலைத்தனமாக இப்படிக் கெட்டுப் போகிற பிள்ளைகளின் தொகை ஊருக்கு ஊர் இப்போது அதிகரித்திருக்கிறது” என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தன் திகைத்தான். “பேராசிரியருடைய பிள்ளை இப்படி ஆவதா?” என்ற வேதனை வாட்டியது. வேதனையோடு அரவிந்தன் கூறினான், “முருகானந்தம்! சிரமத்தைப் பாராமல் மறுபடியும் ஒரு நடை போய் நான் சொன்னேனென்று அந்தப் பையனைக் கூப்பிடு. அடி, உதை ஒன்றும் வேண்டாம். காலையில் திருப்பரங்குன்றத்தில் பார்த்தோமே அந்தப் பெண்ணின் தம்பி அவன். பேராசிரியர் பையன். அவன் வந்து பணம் கேட்டபோதே எனக்குச் சந்தேகமாயிருந்தது. அதுதான் உன்னைப் பின்னால் அனுப்பினேன். விரைவாகப் போய் அவனை அழைத்து வந்துவிடு.”

அரவிந்தன் வேண்டுகோளை மறுக்க இயலாமல் மறுபடியும் போனான் முருகானந்தம். அவன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேசுவரி அம்மாளின் வண்டி அச்சகத்து வாசலில் வந்து நின்றது. பூரணியும் அந்த அம்மாளும் வண்டியிலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் முகங்களில் கவலையும் பரபரப்பும் குடி கொண்டிருந்தன.

பூரணியின் தம்பியைப் பற்றி அறிந்ததனாலும் அச்சகத்தின் பின்புறம் நடந்த நிகழ்ச்சியாலும் மனம் குழம்பிப்போய் இருந்த அரவிந்தன், அவர்களைப் பார்த்து மேலும் குழப்பமடைந்தான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு வரவேற்றான். மங்களேசுவரி அம்மாளின் பெண்ணைப் பற்றி அரவிந்தனிடம் விவரமாகச் சொல்லி, என்ன செய்யலாம், எப்படித் தேடலாம் என்று கேட்டாள் பூரணி. அந்த நள்ளிரவில் தன்னைத் தேடிக்கொண்டு திருப்பரங்குன்றம் வந்து அந்த அம்மாள் கூறிய செய்தியைக் கேட்டபோது தன் தம்பி காணாமற்போனதும் கெட்டுத்திரிவதும் மறந்துவிட்டது அவளுக்கு. வயது வந்து பெண்ணைக் காணாமல் கலங்கித் தவிக்கும் அந்த அம்மாளின் துயரம் தான் பெரிதாகத் தோன்றியது. “என்னைப் போலவே இந்த அம்மாளும் ஆண்பிள்ளைத் துணையில்லாது குடும்பத்தைக் கட்டிக் காக்கிறவர்கள். எவ்வளவோ பணவசதியும், தைரியமும் உள்ளவர்கள்; இந்தச் சம்பவத்தினால் ஒன்றும் செய்யத் தோன்றாமல் இடிந்துபோய் என்னிடம் வந்து கதறினார்கள். நான் என்ன செய்வேன்? உங்களிடம் அழைத்து வந்தேன். நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள்; மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள்” என்று அரவிந்தனிடம் கூறி உதவி கோரினாள் பூரணி. “காவல்நிலையத்தில் சொல்லிப் புகைப்படம் கொடுத்துத் தேடச் சொல்லலாமா? அல்லது செய்தித்தாள்களில் படத்தோடு விளம்பரம் போடலாமா?” என்று பதற்றத்தில் தோன்றிய வழிகளை எல்லாம் கூறினாள் அந்த அம்மாள். இப்படி ஒரு நிலையில் தாயின் வேதனை தாங்க முடியாதது.

“பதற்றப்படாதீர்கள் அம்மா! பெண் வயது வந்தவள் என்கிறீர்கள். இப்படியெல்லாம் படம், விளம்பரம், காவல்நிலையம் என்று போனால் பின்னால் பெண்ணின் வாழ்க்கை வம்புக்கு இலக்காகிவிடும். நடந்ததை நீங்களே பெரிதுபடுத்தின மாதிரி ஆகிவிடும். நிதானமாக யோசித்து ஒரு வழி செய்யலாம்” என்றான் அரவிந்தன்.

பின்பு பூரணியைத் தனியாக உட்புறம் அழைத்துப் போய், “உன் தம்பி சங்கதி தெரியுமோ?” என்று தொடங்கி நடந்ததையெல்லாம் அரவிந்தன் சொன்னான். முருகானந்தத்தை அனுப்பியிருப்பதையும் கூறினான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்