சுவரொட்டி-முடக்குவோம் ; mudakkuvoam_pe-maniyarasan

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக

அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால்

தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு!

  தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், புரட்டாசி 09,2047/ 25.09.2016 காலை முதல் மாலை வரை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குழ. பால்ராசு, தஞ்சை பழ. இராசேந்திரன், நா. வைகறை, சென்னை க. அருணபாரதி, ஓசூர் கோ. மாரிமுத்து, குடந்தை க. விடுதலைச்சுடர், பெண்ணாடம் க. முருகன், மதுரை இரெ. இராசு முதலானோர் பங்கேற்றனர்.

 

  கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் மறைவுற்ற தமிழர் தன்மானப் பேரவை நிறுவனர் தோழர் அ.கோ. கத்தூரிரெங்கன், காவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்கினேசு ஆகியோர் மறைவுக்கு இரங்கல்  தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

 கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

  1. காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!

  உச்ச நீதிமன்றம் புரட்டாசி 04, 2047/20.09.2016 அன்று வழங்கிய தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்து கட்டளையிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவித்தவாறு விநாடிக்கு 6,000 கன அடி திறந்துவிட மறுத்துக் கருநாடகச் சட்டமன்றம் சட்ட விரோதமானத் தீர்மானம் இயற்றியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்திற்கு வெளிப்படையாக அறைகூவல் விடும் அவமதிப்புக் குற்றம் இது!

  இந்நிலையில், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர், மேலாண்மை வாரியத்தின் ‘வழிகாட்டுதலில்’ கருநாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருட்டிணராசசாகர் அணைகளும் தமிழ்நாட்டின் மேட்டூர், அமராவதி, பவானி சாகர் அணைகளும், கேரளாவின் பானசுரசாகர் அணையும் ஒருங்கிணைந்த முறையில் இயங்கும் என்பதே உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் கூற்று எனக் கூறியிருப்பது தமிழினத்திற்கு எதிரான திரிப்பு வேலையாகும்.

  2007 பிப்பிரவரியில் அளிக்கப்பட்ட காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின் பகுதி 8-இன் பத்தி 16, “காவிரி மேலாண்மை வாரியத்திடம் அணைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்க வேண்டும். அந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றத்தின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை ஒழுங்காற்றுக் குழுவின் உதவியோடு இம்மேலாண்மை வாரியம் செயல்படுத்தும்” என தெளிவாகக் கூறுகிறது.

 இதே பகுதி 8-இன் பத்தி 15, “காவிரி மேலாண்மை வாரியம் பக்கிராபியாசு மேலாண்மை வாரியத்தைப் போன்றதாகவே அமைக்கப்பட வேண்டும்” என விளக்குகிறது.

 இத்தீர்ப்பு முன்னெடுத்துக்காட்டாகக் கூறிய “பக்கிராபியாசு மேலாண்மை வாரியம், பக்கிராநங்கல் திட்டம், பியாசு – சட்லசு இணைப்புத் திட்டம், பியாசு – போங்கு அணைத் திட்டம் ஆகியவற்றின் நிருவாகம், செயல்பாடு, பேணுகை ஆகியவற்றை மேற்கொள்ளும்” எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இந்திய அரசின் நீர்வளத்துறை உயரதிகாரி இத்தீர்ப்புக்கு எதிராக விளக்கமளித்திருப்பது இந்திய அரசு, தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு மாறாக அதிகாரமற்ற இன்னொரு மேற்பார்வைக் குழுவை அமைக்க முயல்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இது அப்பட்டமான சட்ட மீறலாகும்!

  தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் இந்திய அரசு அமைக்க வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு. தீர்ப்பாயத்தில் கூறப்படாத அதிகாரமற்றப் பொறியமைவை ஏற்படுத்தினால், அது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயல் மட்டுமின்றி, தமிழினப் பகை நடவடிக்கையாகவும் அமையும்.

  எனவே, தமிழ்நாட்டு மக்களும் உழவர் இயக்கங்களும் அரசியல் அமைப்புகளும் இதில் விழிப்போடு இருந்து – தொடர் அழுத்தம் தராது போனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக நழுவும் ஆபத்து உள்ளது.

  எனவே, வரும் புரட்டாசி 21, 2047 / அக்டோபர் 7ஆம் நாளுக்குள் இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது போனால், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் வகையில் தமிழர்கள் போராட வேண்டும் என்றும், இதற்கான அழுத்தமான முன்முயற்சிகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

  1. தமிழினத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு அரும்பொருள்களை கருநாடகாவிற்குக் கொண்டு செல்லக் கூடாது! அவற்றை  மதுரையிலே வைத்துப் பாதுகாக்க வேண்டும்!

  சிவகங்கை மாவட்டம்–கீழடிச் சிற்றூரில் பள்ளிச் சந்தைத் திடலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வில், இதுவரை 6,000க்கும் மேற்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. சற்றொப்ப 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ள சங்கக்காலக் கட்டுமானங்களும் தொழிற்சாலைகளும் உறைக் கிணறுகளும் மேம்பட்ட தமிழி என்ற எழுத்து வடிவமும், பண்பாட்டு மரபும் வாழ்நிலையும் பண்டையத் தமிழர்களுக்கு இருந்ததை உறுதி செய்கின்றன.

  இந்த அரிய தொல்லியல் பொருட்கள் அனைத்தையும் மைசூர் அல்லது பெங்களுருவுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இந்தியத் தொல்லியல் துறை இறங்கியுள்ளது.

  தமிழினத்திற்கு எதிரான தீராப் பகையோடு கன்னடர்கள் தொடர்ந்து செயல்படுவது உலகறிந்த உண்மையாகும். கடந்த ஒரு மாத காலமாகக் காவிரிச் சிக்கலையொட்டி, கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்பகைத் தாக்குதல்கள் இதற்குச் சான்றுகூறும். பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் அவை தமிழர் ஒருவரின் உடைமைகள் என்ற காரணத்தினாலேயே எரித்து அழிக்கப்பட்டன; தமிழர் கடைகள் சூறையாடப்பட்டன; தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டன; எரித்து அழிக்கப்பட்டன; தமிழர்கள் என்பதனாலேயே அவ்வூர்திகளின் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டார்கள்; இழிவுபடுத்தப்பட்டார்கள்.

  இப்படிப்பட்ட இனப்பகை வெறி கொண்ட கன்னடர்களுடைய பகுதிக்குத் தமிழர்களின் தொல்லியல் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டால், அவை சிதைத்து அழிக்கப்படக்கூடிய கண்டம்(ஆபத்து) உண்டு.

 எனவே, கீழடியில் கிடைத்த அரிய வரலாற்றுச் சின்னங்களை, தொல்லியல் பொருட்களை, மதுரையில் அருங்காட்சியகம் அமைத்து, அங்கே பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 இதனை வலியுறுத்தி, மதுரையில் தமிழ் அறிஞர்களையும், வரலாற்று அறிஞர்களையும், தமிழின உணர்வாளர்களையும் ஒன்றுதிரட்டி வலுவான பொதுக்கூட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

  1. தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அயல் இனத்தாரின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தொடர் பரப்புரை – உள்ளூர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.

  தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் தமிழ்நாட்டு மக்களுக்கே 90% வேலை வழங்கக் கோரியும், 10 விழுக்காட்டிற்கு மேல் இந்நிறுவனங்களில் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்றக் கோரியும், கடந்த ஆகத்து மாதம் தொடங்கித், தமிழ்த்தேசியப் பேரியக்கம் மேற்கொண்ட விரிவான பரப்புரை இயக்கம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆவணி 27, 2047 / 12.09.2016 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய திருச்சி தொடர்வண்டித்துறை மண்டலத் தலைமையக முற்றுகைப் போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

  இதன் அடுத்த கட்டமாக வரும் புரட்டாசி 27, 2047 /2016 அக்டோபர் 13 தொடங்கி 1 வாரத்திற்குள், திருச்சி பொன்மலை, திருவெறும்பூர் பா.மி.மி.நி./பி.எச்.இ.எல்., துப்பாக்கித் தொழிற்சாலை, சென்னை ஆவடி பாதுகாப்புத்துறைத் தொழிற்சாலைகள், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகிய இடங்களில் அங்கங்கே நிலவும் வெளி மாநிலத்தவர் ஆதிக்கங்களை அம்பலப்படுத்தி, விரிவான பரப்புரையும் உள்ளூர் அளவில் போராட்டங்களும் நடத்தப்படும்.

அறிக்கை வெளியீடு

தலைமைச் செயலகம், 

தமிழ்த் தேசியப் பேரியக்கம் 

பேச: 7667077075, 9047162164 

முகநூல்: www.fb.com/tamizhdesiyam

ஊடகம்: www.kannotam.com

இணையம்: tamizhdesiyam.com