இந்தியாவில் 32 இணையத்தளங்களுக்குத் தடை – மணி.மணிவண்ணன் கண்டனம்!
32 இணையத்தளங்களை
இந்திய அரசு “தடை” செய்தது
சரியா?
நன்றி : http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150101_inidiawebsite.shtml
இந்தியாவுக்குள் இணையச் சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களைத் தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணையத் தன்னுரிமைக்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.
பெங்களூரைச் சேர்ந்த இணையம் – சமூகத்திற்கான மையம் என்கிற இணையத் தன்னுரிமைக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பு இந்திய அரசு தடை செய்திருப்பதாக கூறப்படும் 32 இணையத்தளங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.
அதில் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் காணொளிகளுக்கான இணையத்தளங்கள் உள்ளிட்ட பல புகழ்வாய்ந்த இணையத் தளங்களின் பெயர்கள் இருக்கின்றன. அவை தவிர, உலக அளவில் இணைய ஆவணப்படுத்தலுக்கு புகழ்பெற்ற ஆர்கைவு.வலை(archive.org) என்கிற இணையத்தளமும், உலக அளவில் இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பெரிதும் பயன்படுத்தும் கிட்ஃகபு.வணி(github.com) சோர்சுபோர்கு.வலை(source.forg.net) போன்ற முழுக்க முழுக்க தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தனிப்பட்ட இணையத்தளங்களும் கூட இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தியாவுக்குள் சில இடங்களில் இந்த இணையத்தளங்கள் இன்னமும் காணக்கிடைத்தாலும் வேறுசில இடங்களில் இந்த இணையத்தளங்களை காணமுடியவில்லை என்று முறையீடுகளும் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து இந்தத் தடைகள், இணையத்தன்னுரிமைச் செயற்பாட்டாளர்கள், கருத்துத் தன்னுரிமை ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தகவல் தொழில்நுட்பவியல் துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
“பயங்கரவாதத் தடுப்பின் ஒரு பகுதியே இந்தத் தடைகள்”
இந்திய அரசு தரப்பில் இருந்து இந்த தடை குறித்த அதிகார முறையிலான கருத்து எதுவும் முறையாக வெளியாகாத நிலையில், மத்தியில் ஆளும் பாசகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் அர்விந்து குப்தா, இந்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்புப் படைப்பிரிவின் அறிவுரையின் பேரிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டதாக தமது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான ஈ.சி.இ.அ (I.S.I.S.) அமைப்பின் பரப்புரையைச் செய்துகொண்டிருந்த அல்லது அதை செய்ய இசைவளித்துக்கொண்டிருந்த இணையதளங்கள் மட்டுமே இந்தியாவுக்குள் தடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்திய அரசின் பயங்கரவாதத் தடுப்புக்கான புலனாய்வுக்கு ஒத்துழைக்கும் இணையத் தளங்கள் மீதான தடைகள் படிப்படியாக விலக்கப்படும் என்றும் தெரிவித்திருந்த அர்விந்து குப்தா, அப்படியான சில இணையத்தளங்கள் மீதான தடைகளை நீக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், தமது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்திய அரசின் இந்த இணையதள தடை நடவடிக்கை இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. அவர்களின் கோபம் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது.
இந்திய அரசின் இந்த அணுகுமுறை அடிப்படையிலேயே தவறு என்கிறார் சென்னையில் இருக்கும் இணையச் செயற்பாட்டாளரும் தொழில்நுட்ப வல்லுநருமான மணி மணிவண்ணன்.
இந்திய அரசு தடைசெய்திருக்கும் இணையத்தளங்களில் பலவற்றுக்கும் பயங்கரவாதப் பரப்புரை என்று இந்திய அரசு கூறும் நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரம் எவையும் தமக்குத் தெரியவில்லை என்று கூறும் மணி மணிவண்ணன், இந்திய அரசின் இந்தத் தடையால் ஏறக்குறைய இணையத்தின் பெரும்பகுதி இந்தியாவில் காணாமல் போகும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.
இந்திய அரசின் இந்த தடையை விதித்தவர்களுக்கு இணையத்தின் அடிப்படைச் செயற்பாடு குறித்த பெரிய புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறிய மணி மணிவண்ணன், பயங்கரவாதத்தை இந்தியாவை விட அதிகம் எதிர்ப்பதாகக் கூறும் அமெரிக்காவில் கூட இந்த இணையத்தளங்கள் முடக்கப்படாதபோது, இந்தியாவில் இந்த இணையத்தளங்கள் பயங்கரவாதத்தடுப்பு என்கிற காரணத்தைக் காட்டித் தடுக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்தார்.
Leave a Reply